Pages

Search This Blog

Showing posts with label தெரிந்துகொவோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொவோம். Show all posts

Wednesday, April 18, 2012

கத்தோலிக்க கன்யாஸ்திரீ காதலைப் பார்ப்போம்.

சிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது.

புத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் எனக்கு அவ்வளவாக அதிர்ச்சியாக இல்லை. ஆனால் கொஞ்சம் அதீதமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

கடைசியாக, தொடர்ந்து அவருக்குப் பிறருடன் ஏற்படும் தகராறுகள். அதில் பல ‘அவள் என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா!’ ரக சில்லறை விஷயங்கள். ஒரு புத்தகத்தில் எழுதத்தக்கவையே அல்ல. சில நிர்வாகத்தின் ஊழலில் அவர் பங்குகொள்ளாமல் எதிர்த்தபோது ஏற்பட்ட தகராறுகள். இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இங்கும் அவர் தன் தரப்பு வாதத்தை மட்டுமே வைக்கிறார் என்பதுபோலத் தோன்றியது.

 மாற்றுத் தரப்புக்கும் இடம் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இறுதியாக, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் இவரது உயரதிகாரியான மதர் ஜெனரலுக்கும் இவருக்கும் நடக்கும் உரசல், அவர் ஜெஸ்மியை மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயற்சி செய்வது, அதிலிருந்து இவர் தப்பிப்பது, பின் ஒட்டுமொத்தமாக மடத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிடுவது என்று முடிவுசெய்துவிட்டு ஏதோ வில்லன்கள் குகையிலிருந்து தப்பிவருவதுபோல ஓட்டம் எடுப்பது. இது கொஞ்சம்கூட ஒட்டவில்லை.
முதலில் (இயேசுவுடனான) காதலைப் பார்ப்போம்.
என்னுடைய இயேசுவானவர் என்னை மணமகளாக சுவீகரித்துக்கொண்ட அன்றைய பரிசுத்தத் திருப்பலியை மனதிற்கிசைந்த ஒரு திருவிருந்தாக நான் உணர்ந்தேன். திரு உட்கொண்டதன்பின் நடக்கும் ஒன்றுகூடலின் பரவசத்தின்போது, நான் உமக்கானவள் மட்டுமே என்று அறிவித்த எனது விரலில் இயேசு மோதிரம் அணிவித்தார். ஆன்மிக நிலையில் மோட்சத்தினை நோக்கி உயர்த்தப்பட்ட அந்நிமிடங்களில் அவருக்கானவளாக மட்டுமே என்னால் இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். இனியொரு திருமணம் எனக்குத் தேவையில்லை, வாழ்க்கையில் எல்லா உலகியல் ஆசாபாசங்களும் தேவையில்லை, அவர்தான் எனது ஜீவன், ஏக அபயம், உறுதியான கற்பாறை, எனது கோட்டை, எனது வழி, உண்மை, எனது மோட்சம், எனது ஆனந்தம், என்னுடைய எல்லாமே… (பக்கம் 19)
இது மேமி எனப்படும் பின்னாளில் கன்னிகாஸ்திரீயாக ஆகும்போது ஜெஸ்மி என்று பெயர் மாற்றம் பெற்றவர் கல்லூரியில் பிரீ டிகிரி படிக்கும்போது கத்தோலிக்க மாணவர்கள் குளோஸ்ட் ரிட்ரீட் என்ற முறையில் மூன்று நாள்கள் ஜெபம் செய்யும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் பின்னர்தான் மேமி கன்யாஸ்த்ரீயாக முடிவெடுக்கிறார். ஒருவித ட்ரான்ஸ் நிலையில் இறைவனோடு பேசுவதான, கூடுவதான நிலைகளை அவர் கற்பித்துக்கொள்கிறார்.

பின்னர் திருச்சபை சட்டப்பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதுகிறார்.
அன்றிரவு எங்களுக்குச் சீக்கிரமாகப் படுத்துக்கொள்வதற்கான அனுமதி உண்டு. கடந்த நாட்களில் நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோம் அல்லவா? ஆனால், ஏதோ ஒரு ஆன்மிகத் தூண்டுதல் என்னை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்றது. மற்றொரு நோவீஷுடன் நான் பீடத்தின்முன் முழந்தாளிட்டு நின்றேன். படிப்படியாகப் பிரார்த்தனையில் மூழ்கி தன்னை மறந்துபோனேன். ஓசையில்லாமல், அசைவில்லாமல், வெளிச்சமில்லாமல், நேரம் போவதறியாமல்… காற்றில் மிதக்கிறேனா நான்? திடீரென்று அது நிகழ்ந்தது. இயேசுவானவர் என்னுடைய இருதயத்தினுள் குதித்தார்.

என்னுடைய உடல் பயங்கரமான இறுக்கத்தை அனுபவித்தது. இயேசுவே… என்னுடலினுள் உம்முடைய நுழைவின் உடல்ரீதியான அனுபவம்… இருதயம் தகர்ந்துபோகிறது. நானொரு புது சிருஷ்டியாக உருவாவதை என்னால் உணரமுடிகிறது. இயேசுவானவர் இப்போது என்னுடைய மனதிலும் உடலிலும் இணைந்திருக்கிறார். அவரது அசாதாரணமான ஐக்கியம், அவருடன் சேர்ந்தே இருப்பது – இதுதான் என்னுடைய ஒரே ஆசை. சொர்க்கம் வேறெங்குமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துகொண்டேன். (பக்கம் 46, 47)
இதுபோன்ற இண்டென்ஸ் ஆன்மிக அனுபவங்களுக்குப் பிறகு சடங்குரீதியாக இயேசுவுக்கு மணவாட்டியாக இவரும் இவருடைய பேட்ச்சில் உள்ள பிற பெண்களும் கன்யாஸ்திரீ ஆகிறார்கள். கத்தோலிக்க அமைப்பின் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலை கிடைக்கிறது.

அதன்பின் அவருக்கு ஏற்படுவதெல்லாம் மோசமான அனுபவங்களே என்பதாகவே புத்தகம் சொல்கிறது. பெண் துறவிகள் ஒருபால் சேர்க்கை நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சிஸ்டர் விமி என் பின்னால் திரிகிறாள் என்பதை நான் மெதுவாகவே புரிந்துகொண்டேன். … விடுதியில் உள்ளவர்கள் என்னைத் தேடி வரும்போது அவர்களிடம் கோபப்படுவதும் அலமாரியில் வைப்பதற்காக அவர்கள் கொண்டுவருகிற டேப் ரிக்கார்டரை இழுத்து வெளியே எறிவதுமாக என்னைப் பழி தீர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய இச்சைகளுக்கு நான் இணங்கவில்லை என்பதுதான் கோபத்திற்குக் காரணம் எனும் விஷயத்தை மற்ற கன்யாஸ்திரீகள் புரிந்துகொண்டார்கள். கடைசியில், அவளுடன் ஒத்துப்போகும்படி அவர்கள் எனக்கு ஜாடைமாடையாக அறிவுறுத்த ஆரம்பித்தார்கள்.
என்னுடைய பாதுகாப்புக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலையில் கொஞ்ச நாட்கள் அவளுடைய விருப்பங்களுக்கு நான் ஒத்துழைத்தேன். இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கியபிறகு அவள் மெதுவாக வந்து என் படுக்கையில் நுழைவாள். பிறகு அவள் என்மீது காட்டுகிற அசிங்கங்களை எல்லாம் என்னால் தடுக்க முடியாமல் போய்விடும். தனித் தனிக் கதவுகள் இல்லாத அறைகள், விரிப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே வாசலை அடைக்க இயலாது. கர்ப்பம் தரிக்காமல் இருக்கவே தான் சுயபாலின்பத்தை விரும்புவதாகச் சொல்வாள். (பக்கம் 58, 59)
ஆண் துறவிகள் அவரவர் மடங்களில் இப்படியே வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே ஆண் துறவிகள் வாய்ப்பு கிடைக்கும்போது பெண் துறவிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிஸ்டர் ஜெஸ்மி பெங்களூரு செல்லும்போது இப்படி நடக்கிறது.
அதிகாலையில் நான் பெங்களூரு ஸ்டேஷனுக்கு வந்து சேரும்போது அருட்தந்தை, பொறுமையிழந்தவராக, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதை ரயிலிலிருந்து இறங்கும்போதே கவனித்தேன். அவருடைய அடக்கமான இயல்புக்கு மாறாக, என்னைக் கண்டதுமே மிகுந்த ஆவேசத்துடன் ஆலிங்கனம் செய்து, ஏற்கெனவே உறுதியளித்திருந்தது போன்ற ராஜ உபச்சாரத்துடன் அவரது தங்குமிடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். …
… நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்துகொண்ட அருட்தந்தை, மூச்சடைக்கவைப்பதுபோல் என்னைப் பலமாகக் கட்டிப்பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித்தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்காரவைத்துவிட்டுக் கேட்டார்:
‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’
இல்லயென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார். (பக்கம் 102, 103)
இப்படியான சில பல காமப் பிரச்னைகளை புத்தகம் நெடுகிலும் காணலாம். காமக்கொடூரன்கள் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் உண்டு என்றாலும் வழிபாடு, கல்வி என்று கத்தோலிக்க மத அமைப்பில், மக்களின் நம்பிக்கைக்கு உகந்த இடங்களில் இருப்போர் சிறுவர், சிறுமிகளை, ஆதரவற்ற கன்யாஸ்திரீகளை சீரழிப்பது உலகம் முழுதும் நடக்கும் ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல அவ்வளவாக இடம் இருப்பதில்லை என்பது சோகம். மேலிடத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் இழுத்து மூடப்படுகிறது.

மற்றபடி கேரள கத்தோலிக்கக் கல்வி நிலையங்களில் ஊழல் பலவிதங்களில் தலைவிரித்தாடுவதை ஜெஸ்மியின் புத்தகம் விவரிக்கிறது. தனிநபர் ஊழல், புறஞ்சொல்லுதல், பொறாமை, பணம் கையாடல், நன்கொடை வசூலித்தல், ஏமாற்றுதல், வஞ்சம் தீர்த்தல், ஆட்களைக் கருவி அழித்தல்… மாறி மாறி, பக்கத்துக்குப் பக்கம் இப்படிச் செல்லும்போது மிகுந்த அலுப்பையே தருகிறது.
ஆனால் தனி நபராக ஒருவருக்கு இந்த அளவுக்குத் தொல்லைகள், அதுவும் பாலியல் தொல்லைகளும் சேர்த்து என்று வரும்போது ஜெஸ்மிமீது பரிதாபமும் வருகிறது. ஏன் இவர் இந்தக் கேடுகெட்ட ஸ்தாபனத்தில் இன்னமும் தொடரவேண்டும், ஏன் அறுத்துக்கொண்டு ஓடியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு செயல் அல்ல என்று கோடிட்டுக் காட்டுகிறார் ஜெஸ்மி.

என்ன செய்வார்கள்? திரும்பப் பிடித்துக்கொண்டுபோய்த் துன்புறுத்த அது என்ன ஜெயிலா? கத்தோலிக்க அமைப்பிலிருந்து வெளியேறினால் ஆள்வைத்துக் கொல்வார்களா என்ன? புரியவில்லை. அவர் கடைசியாக வெளியேற முடிவுசெய்து ரயிலில் போகும்போது அவர் படும் பதைபதைப்பு புத்தகத்தில் வெளியாகிறது. அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

இன்று அவர் வெளியில் இருக்கிறார். தன் பிரச்னைகளைப் புத்தகமாகவும் எழுதி அது பல இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையும் ஆகியுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பின் ஏன் அந்த அளவுக்குப் பயந்தார்?

தீவிர கத்தோலிக்கர்கள் பதில் சொல்ல இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது. இந்தப் புத்தகம் அவர்கள் மத்தியில் சுய பரிசோதனைக்கு இட்டுச் சென்றதா? அல்லது கேடுகெட்ட, மூளை பிசகிய, பைத்தியக்காரி ஒருத்தியின் உளறல்கள் என்று சொல்லி, அவரை உதாசீனப்படுத்திவிட்டார்களா? தெரியவில்லை.

Monday, April 16, 2012

மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்

தகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.

ஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு இல்லாமல் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் கம்பம் மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் பெறுவது தொடர்பான அறிவியல் தகவல்கள் இந்த வார அறிவியல் அதிசயம் பகுதியில் இடம் பெறுகிறது.

அறிவியல் தொழில்நுட்பம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.

முதலில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதை செயல்படுத்தும் முனைப்பில் தான் தீவிரம் காட்டப்படுகிறது. நாளடைவில் சிக்கல்கள், தடைகள் நீக்கப்பட்டு அதை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டப்படும்.

அந்த வகையில் மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இன்டர்நெட் பெற்றுள்ளது. வளரும் நாடுகளில் மூலை முடுக்குகளில் கூட இன்டர்நெட் வசதி கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
டெலிபோன் இணைப்பு மூலம் மட்டுமே இன்டர்நெட் வசதியை பெற முடியும் என்ற நிலையை மாற்றி மின்சார கம்பி வழியாகவும் இன்டர்நெட் வசதியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்சார கம்பி மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தும் ஆய்வு 1950-ம் ஆண்டில் மிக தீவிரமாக இருந்தது. ‘பிராட்பேண்ட்’  என்று அழைக்கப்படும் முறை மூலம் மின் கம்பிகளை பயன்படுத்தி தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்க தீவிர ஆய்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் மின்சார வடிகால் (outlet) களை இணையதள துறை (port)களாக மாற்றும் முறைகளுக்கு வித்திட்டவர்கள். இதன் அடிப்படையில் மின்சார கம்பிகள் மூலம் சந்தாதாரர்களுக்கு இணையதள சேவைகளை கொடுக்க முடியும். இந்த முறைக்கு டி.எஸ்.எல். (D.S.L. - Digital subscriber line) என்று பெயர்.  ஒரே கம்பியில் மின்சாரம் மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பலன் பெறமுடியும்.

மேலும் மின்சாரம் இல்லாத பகுதியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தொலைபேசி வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. அப்படிபட்ட இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் சேவையை எளிதில் அளிக்கலாம்.
மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கும் வகையில் ‘சாதனம்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தயாரிக்கின்றன.
நமது வீட்டுக்கு மின்சார இணைப்பு தரும் மின் கம்பத்தில் இந்த சாதனத்தை பொருத்தி விட்டால் போதும் வீட்டுக்கு மின்சார இணைப்பு வருவதுபோல இன்டர்நெட் இணைப்பும் கிடைத்துவிடும்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் ‘ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ” என்ற புதிய சாதனத்தை தயாரித்துள்ளது. இதை மின் கம்பி மோடத்துடன் இணைத்து விட்டால் கம்பியில்லா தொடர்பு வசதியை எந்த ஒரு மின் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் சோதனை முறையில் மின் கம்பி மூலம் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளன. கலிபோர்னியாவில் இருந்து சினெர்ஜி, எடிசன் போன்ற மின் சக்தி நிறுவனங்கள் இதற்கான ஆய்வுத்திட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் பல விதமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கப்போகும் இந்த திட்டத்தில் பிரபல நிறுவனங்களும் இணைந்துள்ளன.
மின் கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவதிலும் பல தொழில்நுட்ப சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படத்தான் செய்தன. தகவல்களை பெறுவதில் ஏற்பட்ட ‘இரைச்சல்’ இதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் தெளிவான முறையில் தகவல்களை பெற முடிகிறது.

இந்த தொழில்நுட்பம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் புகார் கூறினார்கள். மேலும் விமான நிலைய தகவல் தொடர்புகளில் பயன்பாட்டுக்கும் இந்த தொழில்நுட்பம் குறுக்கீடுகள் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குறைபாடுகள் இல்லாத வகையில் இணைப்புகளைத் தரும் கருவிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்பு வசதி கிடைக்கும் போது நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் கூட இன்டர்நெட் என்பது சர்வசாதாரணமாகிவிடும். மேலும் இன்டர்நெட் வசதியைத் தேடி வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் நமது வீட்டிலேயே அந்த வசதியை பெறமுடியும்.

இந்த விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம் உலகமே ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் சுழன்று கொண்டிருக்கும் வாய்ப்பு சாதாரணமாகிவிடும். குறிப்பாக விவசாயிகளின் வீட்டில்கூட.
இனிமேல் மின்சார கம்பிகள் மின் விளக்குகளை ஒளிர வைக்க மட்டுமல்ல உங்கள் அறிவையும் ஒளிர வைக்க வருகிறது.
தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால்,துபாய்.

நன்மைகள் பல
பவர் லைன் கம்யூனிகேசன் எனப்படும் மின் கம்பி மூலமும் தகவல் தொடர்பு வசதியின் மூலமும் பல நன்மைகளை நாம் பெற முடியும். அவற்றில் சில…
  • மின்சார கம்பிகள் மூலம் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின் விளக்கு எரிவது போல மின்சார கம்பியை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களை அனுப்பலாம், பெறலாம்.
  • கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதை பயன்படுத்த முடியும்.
  • ஏற்கனவே உள்ள மின்சார இணைப்பை பயன்படுத்தி இந்த வசதியை பெற முடியும். இதன் காரணமாக செலவுகள் குறையும். (புதிதாக இன்டர்நெட் இணைப்பு பெற டெலிபோன் செலவு உள்பட பல செலவுகள் ஆகின்றன. மின் கம்பி மூலம் இன்டர்நெட் வசதி பெறும் போது அந்த செலவுகள் இருக்காது.)
  • இதை பராமரிக்க செலவு எதுவும் இல்லை.
  • பழுதடைவது, கோளாறுகள் ஏற்படுவது போன்றவை மிக குறைவு.
1920-ம் ஆண்டில்…
1920-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று மின்சார கம்பியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியது. தனி தொலைபேசி இணைப்பு எதுவும் இன்றி மின் கடத்திகள் உதவியுடன் இந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்த பரிமாற்றம் குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பு மிகுந்ததாக இருந்தது.

இந்தியாவில் 1950-ம் ஆண்டு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. 30 முதல் 50 கிலோ ஹெர்ட்ஸ் அளவு அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை மின் கம்பி மூலம் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

Monday, April 09, 2012

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்


பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறியதாவது:
இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 14 ரூபாய்க்கே கிடைக்கும்.

அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும். இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

Tuesday, April 03, 2012

லாபம் தரும் புதினா விவசாயம்



புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.

தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான சேர்மானப் பொருளாக உள்ளது.

புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சேர்க்கப்படுகிறது.தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றில் புதினா பிரதானப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேசச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

உயர்ந்த விலையும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குத் தேவையான புதினா பயிரிடப்படுகிறது. புதினாவை வணிக நோக்கில் பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

 மிதவெப்பப் பகுதிகளில், வடிகால் வசதியுள்ள இருபொறைமண், காரத்தன்மை கொண்ட, அங்ககச் சத்து நிறைந்த நிலங்களில் புதினா நன்கு வளரும். வேர்விட்ட தண்டுக் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நிலத்தை நன்கு பண்படுத்தி ஹெக்டேருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் அளித்தால் போதுமானது.

புதினாச் செடிகள் பெரும்பாலும், பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. அவ்வப்போது சாதாரணமாக களை எடுத்தால் போதுமானது. ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம்.உணவுக்கான புதினா நடவு செய்த 5-வது மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒருமுறை நட்ட செடிகள் 4 ஆண்டுகள் வரை பலன் தரும்.
ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கிலோ இலைகள் கிடைக்கும். எண்ணெய் தயாரிப்புக்கான புதினாவில் இருந்து, ஆவி வடித்தல் முறையில், 150 முதல் 250 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம்.கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொர்ணாவூரில் தனியார் நிறுவன உதவியுடன், எண்ணெய்க்கான புதினா, வணிக ரீதியில் பயிரிடப்பட்டு உள்ளது.  புதினா எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் அந்த நிறுவனம் அமைத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “எண்ணெய்க்கான புதினா லாபகரமான விவசாயமாக இருக்கும். இந்தியாவில் இருந்து பெருமளவில் புதினா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதினா எண்ணெய் சர்வதேச சந்தையில் கிலோ ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் புதினா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் உள்ளன.எண்ணெய்க்கான புதினா 90 நாள்களில் அறுடைக்கு வரும். வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடுபயிராவும் புதினா பயிரிடலாம்.90 நாள்களில் ஒரு ஹெக்டேரில் ரூ. 30 ஆயிரம் லாபம் கிடைக்கும்.