Pages

Search This Blog

Thursday, July 28, 2011

ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம்: அண்ணா ஹசாரே அறிவிப்பு

 பிரதமரையும், நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவராத லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், மத்திய அரசு மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 16 முதல் தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணா விரதம் இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

லோக்பால் மசோதா தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலையில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் லோக்பால் வரைவு மசோதா குறித்தும், மக்கள் பிரதிநிதிகள் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது.ஊழல் செய்யும்பட்சத்தில், பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க வகை செய்யும் விதமாக அவர்களையும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மற்றும் நீதித்துறையினரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவராத வகையிலான வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்த மசோதா வரைவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதன் மூலம் மத்திய அரசு மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டதாகவும் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவின் தற்போதைய வரைவு மிகவும் பலவீனமானதாகவும், பயனற்றதாகவும் உள்ளது. வலுவான லோக்பால் மசோதா இல்லாமல் ஊழலை ஒழிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.கிரண் பேடி... தேசத்தின் மீதான மிகப்பெரிய மோசடி இது என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி கூறியுள்ளார். ஒரு அற்புதமான வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டதாகவும் அவர் குறைகூறினார்.

No comments:

Post a Comment