பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் அமுல் என்ற அமுதா (34) அரவாணி. இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் உள்ளார். கடந்த 24-ந் தேதி கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற அமுதா பின்னர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அதே பகுதியில் அமுதா காயங்களுடன் கிடப்பதாக அவரது தாய் பிலோமினாவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து அவர் மகள் அமுதாவை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் அமுதா அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அரவாணி அமுதாவை 5 பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஸ்டீபன் (24), சுரேஷ் (21), அசோக்குமார் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பிலோமினா கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் 1800 சதுர அடி நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அபகரிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள், அரவாணி அமுதாவை சந்தித்து, நிலத்தை எழுதி தருமாறு கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாலேயே அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியுள்ளதாகவும் பிலோமினா தெரிவித்தார்.
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமுதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக தலையில் ஆபரேஷன் செய்யப் பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment