Pages

Search This Blog

Thursday, September 08, 2011

மதியை அழிக்கும் மது!

மது அருந்துவது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, திடீரெனத் தோன்றும் இடையூறுகளை உணர முடியாமல் செய்கிறது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று (National Institutes on Alcohol Abuse and Alcoholism) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 'மது அருந்தியிருப்பவர்கள் வலுச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்' என்று, அந்த ஆய்வை நிகழ்த்திய திரு. ஜோடி கில்மன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
 
மிதமான குடிப்பழக்கம் உடைய 12 பேரிடம் இந்த ஆய்வு நிகழ்த்தப் பட்டது. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையிலும் தெளிவாக இருந்த நிலையிலும், பயமுறுத்தும் முகத்தோற்றங்கள் மற்றும் சாதாரண முகத்தோற்றங்களைக் கொண்ட நிழற்படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப் பட்டன. அப்போது அவர்களின் மூளைகளின் எதிர்வினைகளும் பதிவு செய்யப் பட்டன. அவர்கள் தெளிவாக இருந்த நிலையில் பயமுறுத்தும் முகத்தோற்றங்களை பார்த்த போது, மூளைகள் ஒருவித அச்சுறுத்தலை உணர்ந்தன. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையில் அதை உணரவில்லை.

மது அருந்தியிருக்கும் நிலையில் நமது மூளை அச்சுறுத்தல்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்தவியலாது என்பதையே இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அமெரிக்கப் பெண்களிடையே மதுவருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. 'போதைக்கு அடிமையாகும் பெண்கள் கடுமையான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேர்கிறது, மதுவருந்தும் ஆண்களை விட பெண்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்கள் ஆயுளின் பெரும்பகுதியை இழந்து விடுகிறார்கள்' எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடலிற்கும் உள்ளத்திற்கும் பெரும் கெடுதியை விளைவிக்கும் மதுவை குர்ஆன் தடை செய்கிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களும் மது அருந்துவதைப் பற்றிக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

"போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

திருமறையில் இறைவன் எச்சரிக்கின்றான், "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது."

"ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவெறுக்கத்தக்கச் செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்." 

"நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?"

'போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'தீனத்துல் கப்பால் என்றால் என்ன'வென்று கேட்டனர். 'அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்' என பதிலளித்தார்கள்.

'மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.' என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்

இஸ்லாம் ஒரு பொருளைத் தடை செய்கிறது என்றால், அது மனிதர்களுக்கு மறுவுலகில் மட்டுமல்லாது இவ்வுலகிலும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

"நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும் அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்" 

2 comments:

சக்தி கல்வி மையம் said...

நல்ல தகவல்..

cisco said...

ithellaam thanni adikkaatha madaiyanunka sollurasthu.....adichupaaru therium...

Post a Comment