Pages

Search This Blog

Friday, November 04, 2011

பறக்கும் குட்டி ரோபோட்




வெட்ட வெளியில் தானாக பறக்கும் ரோபோட் விமானத்தைப் பற்றியெல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ரோபோட் சற்று வித்தியாசமானது. இந்த ரோபோட் மிகவும் சிறியதுதான். இதன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே. ஆனால் பறக்கும் சக்தி கொண்டது.

இதன் எடை மிகவும் குறைவு என்பதால் இதனை குட்டி ரோபோட் விமானம் என்று அழைக்கலாம். இதன் நீளத்தைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்? 80 சென்டி மீட்டர்தான் இந்தக் குட்டி ரோபோட்டின் நீளம். இதனை சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடிïட்டைச் சேர்ந்த ஜீன் கிரிஸ்டோப் மற்றும் டேரியோ ப்ளோரீனோ என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த குட்டி பறக்கும் ரோபோட் விமானம் மிகவும் சிக்கலான இடங்களில் அதாவது குகை, சுரங்க வழிப்பாதை போன்றவைகளில் எந்த இடத்திலும் மோதாமல் பறக்கும் தன்மைக் கொண்டது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி மற்றும் தேடும் பணிக்கு மிகவும் உதவிகரமாக இந்த மிகச்சிறிய பறக்கும் ரோபோட் இருக்கும். இதன் சிறப்பம்சமே எந்த இடத்திலும் மோதாமல் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல்தான்.

இதனை ஆராய்ச்சியாளர்கள் கார்பன் இழைகள், மிக லேசான பிளைவுட் மற்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பிலிம்களால் தயாரித்துள்ளனர். இதனுடைய வால் மற்றும் இறக்கைகள் பிளாஸ்டிக் ப்லிம்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இறக்கைகளின் முனைகளிலும் முறையே இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 30 கிராம் எடையுள்ள பறக்கும் ரோபோட்டின் இறக்கையில் கேமிரா என்றால் அது எவ்வளவு நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

விமானத்தின் முன்புறமும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமிரா ஒரு வினாடியில் 20ல் பங்கு நேரத்தில் எதிரே தட்டுப்படும் சுவரோ மற்றும் பொருளையோ படம் எடுத்து உடனடியாகக் கணக்கிட்டு மோதலை தவிர்க்கக்கூடியது. இதன் அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் இதைவிட மிகச்சிறிய அதாவது அதிகபட்சம் 12 கிராம் எடை மற்றும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள பறக்கும் மிகச்சிறிய ரோபோட்டை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.

1 comment:

Post a Comment