Pages

Search This Blog

Sunday, January 08, 2012

மரணம் முடிவல்ல மரணத்துக்குப் பின் .......


மரணம் முடிவல்ல
மரணத்துக்குப் பின் எங்கே செல்கின்றோம்?

இதோ.... இதோ.... நான் இறந்து போகிறேன். அதோ... அதோ.... என் உடலை மீண்டும் உயிர்ப்பிக்க டாக்டர்கள் போராடிக் கொண்டிருப்பதை அதே அறையில் ஒரு மூலையில் மிதந்தபடி நான் காண்கிறேன். என்ன ஆச்சரியம்! ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் என்னைச் சுற்றி வருகிறது.

திடீரென எங்கிருந்தோ ஒரு குரல், மறைந்த என் தந்தையினுடையது. “ஏன் உன் பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு என்னிடம் வரப்பார்க்கிறாய்? சென்று விடு என் அருமை மகளே! என உருக்கமாய் வேண்டுகிறார். அதற்குப் பின்... சில நிமிட மயக்கம்... பின், ஐயோ... அம்மா.... தாங்க முடியாத உடல்வலி... மீண்டும் உடலோடு உயிர் ஒட்டிக்கொண்டு விட்டது.

பத்தாண்டுகளுக்கு முன் லண்டன் மருத்துவமனையில் பிரசவத்தின் போது இறந்து போய், அரைமணி நேர டாக்டர்களின் போராட்டத்திற்குப் பின் மீண்டும் உயிர் பெற்ற கிருஷ்டின் எல்லிங்கம் என்ற பெண்ணின் நிஜ அனுபவம் இது. பி. பி. சி. நியூஸ் சேனல் ஒளிபரப்பிய இச்செய்தி மரணத்துக்குப் பின் நாம் எங்கே செல்கிறோம்’ என்ற புதிருக்கு சிறு விளக்கத்தைத் தந்தது.

ஏழு உலகை ஆளும் மனிதனுக்கு நிரந்தர புதிர் மரணம். எந்த தொந்தரவும் இல்லாத, கனவும் இல்லாத நீண்ட தூக்கம் அது. மரணம் எப்போது வரும் என்று சொல்லுவதில்லை. எப்படி வரும் என்று சொல்லுவதுமில்லை. அது காந்திக்கும், கென்னடிக்கும் துப்பாக்கி குண்டு மூலம் வந்தது.

கட்டபொம்மனுக்கும் பகத்சிங்கிக்கும் கயிறு மூலம் வந்தது. நேதாஜிக்கும் அணு விஞ்ஞானி பாபாவுக்கும் விமானம் மூலம் வந்தது. தாமசுக்கும், சீசருக்கும் கத்தி மூலம் வந்தது. சாக்கிரடீசுக்கும், அலக்சாண்டருக்கும் விஷம் மூலம் வந்தது.

மரணத்தின் தத்துவத்தை மறந்து அல்லது மறைத்து நீயில்லாமல் நாளனில்லை’ என்று கணவன் சொல்வதும் ‘உயிரே போனாலும் உங்களை விட்டுப் பிரியவே மாட்டேன்’ என்று மனைவி சொல்வதும் உலகில் இரண்டு மிகப் பெரிய பாசப் பொய்கள். தனிப் பயணம் தானே மரணத்திற்கு அழகு!

நட்பைப் பற்றி நாளும் பேசுகிறோம். ஆனால் இவ்வுலகில் பல்லாண்டுகள் நிலைத்து நிற்பது உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்புதான். எப்படிப்பட்ட நண்பர்கள் இவர்கள்! மழையிலும், வெயிலும் இரவிலும், பகலிலும், இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும், இணைந்தே நூறாண்டு நிலைக்கும் நட்பு இது.

ஆனால் பாருங்கள். ஒரு நாள் இயற்கை மரணத்தின் போது உயிர், உடலுக்கு துரோகம் செய்து விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறது. அல்லது விபத்து போன்ற மரணத்தின் போது உடல் உயிருக்கு துரோகம் செய்து விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறது.

மனித வாழ்க்கையை ஒரு ரெயில் பயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரெயிலில் ஏறுகிறோம். பயணம் தொடங்குகிறது. அங்கு நம்மைப் போலவே பலர் சிறிது நேரம் உட்காருகிறோம். சிறிது நேரம் படுக்கிறோம். பசி எடுக்கும் போது சாப்பிடுகிறோம். இடை இடையே ஜன்னல் வழியே தோன்றும் காட்சிகளைப் பார்க்கிறோம்.

சில காட்சிகளை கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்பலாம்’ ஆனால் ரெயில் நிற்காது. நாம் பார்ப்பது வேகமாக மறைந்து விடும். போகப் போக ஒவ்வொருவராக இறங்குகிறார்கள். அதற்குப் பதில் சிலர் புதிதாக ஏறுகிறார்கள். கடைசியில் நாமும் ஒரு நிறுத்தத்தில் இறங்கி பயணத்தை முடித்துக் கொள்கிறோம்.

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள நாம் போடும் திட்டங்களை தவிடுபொடியாக்கக் கூடியது மரணம். இலக்கணம் என்று எதுவும் இதற்குக் கிடையாது. எல்லா கெட்ட பழக்கங்கள் உடையவர் 90 வயது வரை வாழ்கிறார். நல்ல பழக்கங்கள் உடையவர் 40 வயதில் மறைகிறார்.

10வது மாடி பிளாட்டில் பாதுகாப்பாக வசிப்பவர் திடீரென இறக்கிறார். பிளாட்பாரத்தில் அசுத்தமாக வாழ்பவர் பலகாலம் தாக்குப் பிடிக்கிறார். நன்னெறி கொண்டவரை அகால மரணம் தாக்குகிறது. எந்நெறியும் இல்லாதவர் நீடூழி வாழ்கிறார். இப்படி விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும், அறத்தையும் புரட்டிப் போடுகிற புதிராகவே மரணம் இருந்து வருகிறது.

வாழும் போது அடக்கம் வேண்டும். ‘என்னை யாரும் அசைக்க முடியாது’ என கொக்கரிக்கக் கூடாது. ஏனெனில் ஒரு நான் நான்கு பேர் நாம் அறியாமலேயே நம்மை அசைக்கப் போகிறார்கள். இருக்கிற போது பிறருக்கு உதவிட வேண்டும். ‘உயிரே போனாலும் தர மாட்டேன்’ என்று கர்ஜிப்பதில் பயனில்லை. ஏனெனில், உயிர் போனபின் நாம் தராமலேயே எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்.

உற்றார், உறவினரோடு அனுசரித்துச் செல்ல வேண்டும். ‘எனக்கு யார் தயவும் தேவையில்லை’ என எக்காளமிடுவது அறியாமை. ஏனெனில், ஒரு நாள் தூக்கிச் செல்லப்படுகையில், பின்னால் கூட்டம் இல்லையெனில் அநாதைப் பிணம் என அழைக்கப்பட்டு விடுவோம்.

அமைதியான வாழ்க்கைக்கு வித்திட வேண்டும். ‘வாடா... நீயா நானா.. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்’ என்று யாரையும் சண்டைக்கு அழைக்கக் கூடாது. ஏனெனில் ஒரு நாள், இரண்டில் ஒன்றல்ல, மரணம் என்கிற ஒன்றைத்தான் பார்க்கப் போகிறோம்.

மரணம் என்பது தொடக்கத்தின் முடிவா அல்லது முடிவின் தொடக்கமா என்பதற்கு இதுவரை விடை கண்டாரில்லை. ஆனால் ஒன்று, ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. பிறப்புக்கு முடிவு இறப்பு. சத்தத்திற்கு முடிவு மவுனம். வெளிச்சத்திற்கு முடிவு இருட்டு. பயணத்திற்கு முடிவு ஓய்வு. கதைக்கு முடிவு கிளைமார்க்ஸ். தொடருக்கு முடிவு நிறைவு.

வந்தார் இங்கு போயாக வேண்டும். கன்றுக்கு வழிவிட்டு வாழை வீழ்ந்தாக வேண்டும். பிள்ளைக்கு வழி விட்டு பெற்றோர் மறைந்தாக வேண்டும். போய்க் கொண்டிருக்கிற கியூவில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அல்ல... அல்ல.. நகர்ந்து கொண்டிருக்கிறோம். ‘முடியாது நான் நகர மாட்டேன்.

இங்கேயே நிற்பேன்’ என்று அடம் பிடிக்க முடியாது. “போ கால் வலிக்கிறது” என்ற பின்னால் நிற்பவர்கள் சத்தம் போடுவார்கள். ஆனால் உனக்கு, எனக்கு என்று போட்டி போடாத முன்னால் இருப்பவர்களை முந்திச் செல்லாத அமைதியான ‘கியூ’ இது.

இதற்காக மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. இதுவரை பலகோடி பேர் சாவை
தித்துள்ளனர். இவ்வுலகில் வாழ்வோரை விட இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே மெஜாரிட்டி மடிவோர் பக்கமே. ஒரு நாள் ஆயுள் என்பதால், ஈசல் பூச்சி ஒப்பாரி வைப்பதுமில்லை.

150 ஆண்டு ஆயுள் என்பதால் ஆமை தலைக்கனம் பிடித்து அலைவதுமில்லை. இன்றைய காலம் நம் கையில் கடமையைச் செய்து முடிப்போம். யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போய்ச்சேர வேண்டும் என்று நம்மில் ஒவ்வொருவரும் விரும்புவதில் தவறில்லை. இதற்கு ‘எக்சிட் இன் பார்ம்’ என்று பெயர். கிரிக்கெட் வீரர், நன்றாக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் சொல்லும் போதே ஓய்வு பெற்றுவிட நினைப்பார். பொப்புலர் நடிகர்.

சூப்பராக நடிக்கிறார் என்று பேசப்படும் போதே நடிப்பிலிருந்து விலகி விட நினைப்பார். நன்றாக எழுதுகிறார் என்று பாராட்டப்படும் போதே எழுதும் தொடரை எழுத்தாளர் நிறைவு செய்துவிட நினைப்பார். இதேபோல்தான். ‘நோயிலும், வலியிலும் இன்னும் ஏன் தான் இருக்கிறாரோ’ என்று உற்றாரும், மற்றோரும் முனகு வதற்கு முன் இயற்கை எய்தினால் அதுவே பாக்கியம்.

ஆனாலும் காலத்தையும், இயற்கையையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்றால் நல்லமனம் கொண்ட துணிச்சல் கொண்ட, ஆற்றல் கொண்ட மனிதர்களாக நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனால்தான் கணித மேதை ராமானுஜம் (32), பாரதி (39), கட்டபொம்மன் (38), விவேகானந்தர் (38), மார்ட்டின் லூதர் கிங் (39) புரூஸ் லீ (32), போன்றவர்கள் அகால மரணமடைந்தாலும், இன்றும் இவர்களை உலகம் இளைஞர்களாகவே நினைவில் வைத்துள்ளது. இவர்கள் ‘லிவ் பாஸ்ட்’ லிவ் ஸ்மார்ட் என்ற வகையைச் சார்ந்தவர்கள்.

மரணத்தை மனிதன் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. இதனால் பிறப்பது ஒரு முறை, இறக்கப் போவது உறுதி’ என்பதை நினைவில் கொண்டு அடக்கம், பொறுமை, தயாள மனம், ஒற்றுமை போன்ற குண நலன்களின் அடிப்படையில் வாழ முற்படும் எண்ணம் தோன்றும்.

இம்மண்ணில் எத்தனையோ மகான்கள், தலைவர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் தோன்றி நம்மை, அறவழியில் வாழ அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் வன்முறையும், இனக்கலவரமும், அநீதியும், சுயநலமும் உலகில் ஒழிந்த பாடில்லை.

ஒருவேளை மரணத்தை இவர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி எச்சரித்தால் மாறுவதற்கு வாய்ப்புண்டு என்ற கோணத்தில் நாம் சிந்திப்பது நல்லது. யார் எல்லை மீறி செயல்பட்டாலும் ‘மைன்ட் யுவர் மரணம்’ என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

உலகம் உருண்டை மட்டுமல்ல. அது ஒரு பூஜ்ஜியம்; சூன்யம், வெற்றிடம் என்பதை புரிந்து கொண்டு விட்டால் வாழு வாழ விடு என்தன் அவசியம் எல்லோருக்கும் புரிந்துவிடும்.

அப்போது பிறப்பும், இறப்பும் இங்கு சுமுகமாக நிகழும். அதுவே எல்லோருக்கும் நலம் பயக்கும். நல்லதை எண்ணி, நல்லதை செய்து நல்லபடி வாழ்ந்து அறவழியில் பயணித்தால் நாம் நினைப்பது எதுவாயினும் அதை அடைவது ‘தூரமில்லை; தொட்டுவிடலாம்.

6 comments:

மரணத்தின் வாயிலை நோக்கி! said...

Thathuva ngnaaniyae, vanakkam!

Unmayil naan idhay cholla vaendum. Ungalin varthay valam nanraaga irundhadhu, adhuvum sindhayin thathuvamum kondirundhadhu. Naan aerkanavae idhanay unarndhirundhaalum, meendum idhay padikka aarvalanay vilayndhaen!

Manidhargal vaazha vaendaam! paravaayillay manidham vaazhattum!

Nanri, Nanri!

Lingesh said...

அருமை நண்பரே...

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//உயிரைத் தக்கவைத்துக் கொள்ள நாம் போடும் திட்டங்களை தவிடுபொடியாக்கக் கூடியது மரணம். இலக்கணம் என்று எதுவும் இதற்குக் கிடையாது. எல்லா கெட்ட பழக்கங்கள் உடையவர் 90 வயது வரை வாழ்கிறார். நல்ல பழக்கங்கள் உடையவர் 40 வயதில் மறைகிறார்.//

மரணத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை வரிகள். நீங்கள் குறிப்பிட்ட கிருஷ்டின் எல்லிங்கம் பெற்ற அனுபவம் எனக்கும் இரண்டு முறை ஏற்பட்டது. நான் சொன்னபோது நான் காய்ச்சலில் உளறுவதாக எண்ணி சிரித்தார்கள். பழைய நினைவைத் தூண்டிய தங்கள் கட்டுரைக்கு நன்றி!

Unknown said...

மிக நுண்ணியமாக ஆராய்ந்து எழுதப்பட்டவை!

நமக்கெல்லாம் வராது! என்ற எண்ணமே மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது!
விதிவிலக்கல்ல என்று உணரும்போது மரணம் வந்துவிடும்!

மாலதி said...

உலகம் உருண்டை மட்டுமல்ல. அது ஒரு பூஜ்ஜியம்; சூன்யம், வெற்றிடம் என்பதை புரிந்து கொண்டு விட்டால் வாழு வாழ விடு என்தன் அவசியம் எல்லோருக்கும் புரிந்துவிடும்.//

சிறந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகள் இன்று தன்னம்பிக்கை இல்லை எனலாம் சிறப்பான கருத்தை பதிவு செய்துள்ளீர் பாராட்டுகள் .

எம்.ஞானசேகரன் said...

மரணத்தைப் பற்றியும், மனிதர்களின் அற்ப வாழ்வைப் பற்றியும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். உண்மையிலேயே கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

Post a Comment