மறக்காமலிருக்க நினைவு நிலைக்க
காண்பவை, கேட்பவை, படிப்பவை மூளையில்
பதிவாகி, நாம் மீண்டும் நினைக்கையில் நினைவுக்கு வருவதை நினைவாற்றல்
என்கிறோம். இந்த நினைவாற்றல் இளம் வயதில் அதிகமாயும், வயது கூடக்கூட
குறைந்தும் செல்லும். இதற்கு முதன்மையான காரணம், இளம்வயதில் குறைவான
நினைவுகள் பதிவாகின்றன; வயது கூடக்கூட அதிகப் பதிவுகள் மூளையில்
பதிவாகின்றன. இதனால், பழையப் பதிவுகள் மெல்ல மறைகின்றன. இரண்டாவதாக வயது
கூடக்கூட மூளையின் நினைவு ஆற்றலும் குறையும்.
ஆனால், விதிவிலக்காகச் சிலருக்கு
முதுமையிலும், முதிர்ச்சியிலும்கூட நினை வாற்றல் குறையாது இருக்கும்.
அவவாறு அவர்களுக்கு நினைவாற்றல் குறையாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள்
எந்த ஒன்றையும் மீண்டும் மீண்டும் நினைப்பார்கள், தொடர்ந்து மூளையைச்
சுறுசுறுப்பாக சோர்வின்றி வைத்திருப்பார்கள். அதிகம் சிந்திக்கக்
கூடியவர்களாலும், எதையும் ஆர்வமுடன் அறிய விரும்பக் கூடியவர் களாயும்
இருப்பர்.
இன்றைக்கு மாணவர்கள் கல்விமுறையும்
நினைவாற்றலைச் சோதிக்கக்கூடியதாய் இருப்பதால், மாணவர்கள் மனதில் பதிந்தவை
மறக்காமல் இருக்க சிறு வயது முதலே சில வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
இளமையில் கல்:
இளமையில் கல் என்பதைப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டு மூன்று வயதிலே
பள்ளியில் தள்ளி பிள்ளைகளை மனதளவிலும் உடலளவிலும் பாழாக்குகின்றனர். இளமை
என்பது வேறு, குழந்தைப்பருவம் என்பது வேறு. அய்ந்து வயதுவரைக் குழந்தைப்
பருவம். அய்ந்து வயதுக்குமேல் இளமைப் பருவம். ஆகக் கற்றல் என்பது அய்ந்து
வயதிலிருந்து பள்ளியில் தொடங்கப்பட வேண்டும்.
ஆனால், அய்ந்து வயது வரை பிள்ளைகளை
ஏதும் அறியாமல் வைத்திருத்தல் கூடாது. அது மிகப்பெருந் தவறு. அய்ந்து
வயதுக்குள் குழந்தைகள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.
அருகிலுள்ள பொருட்கள், அருகிலுள்ள
உயிரினங்கள், உறவினர்கள் என்று பலவற்றை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும்
அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் குழந்தைகள் கற்கத்
துடிககும், அவர்களுக்கு ஒவ்வொன்றைப்பற்றியும் சொல்லித் தரவேண்டும்.
நல்லது, கெட்டது, தீயது, பயனுள்ளது,
நேர்மை, வாய்மை, ஒழுக்கம், பண்பாடு, மரியாதை, வரவேற்பு, விருந்தோம்பல்
என்று பல்வேறு செய்தி களைப் பிள்ளைகளுக்குக் சொல்லித்தரவேண்டும்; அதற்கு
அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவ்வாறு இளமையில் அவர்கள் அறிந்தவை,
பயின்றவை ஆயுள் முழுவதும் அவர்கள் நினைவில் நின்று அவர்களை வழிநடத்தும்.
வினவத் தெரிந்த வயது:
வழக்கத்தில் வெனவு தெரிந்த நாளாய் என்று கூறுவார்கள். அது சரியல்ல. வினவத்
தெரிந்த நாள் என்பதே சரி. அதாவது கேள்வி கேட்டு அறிய முற்படும் நாள்
என்பது பொருள். பிள்ளைப் பருவம் என்பது மூன்று நிலைகளில் அமையும்.
பிறந்ததுமுதல் பேசும் பார்த்தறியும், கேட்டறியும் பருவம். அதன்பின் பேசும்
பருவம், மூன்றாவது அது என்ன? இது என்ன? என்று வினா எழுப்பும் பருவம்.
வினா எழுப்பும் பருவத்தில் பெற்றோரின்,
மற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் எழுப்புகின்ற
வினாக்களுக்கு அலுக்காமல், வெறுக்காமல், ஆர்வங் குறையாமல்,
விருப்பத்தோடு, அன்போடு, நிதானமாக, தெளிவாக, விளக்கமாக பதில்
சொல்லவேண்டும். இதில் சரியாக நடந்து கொண்டுவிட்டால் அந்தப் பிள்ளை
அறிவிலும், ஆற்றலிலும், சாதிப்பதிலும் வல்லவர்களாய் இருப்பர்.
விழிப்புணர்வு அதிகம் இருப்பதால் எளிதில் ஏமாறல், தோற்காமல் வெற்றிகளை
குவிப்பர். இவற்றை பெற்றோரும் மற்றோரும் மனதில் கொண்டு செயல்படவேண்டும்.
கற்றதை நினைவில் நிறுத்தல்:
கற்கின்ற எதுவாயினும் அதை மறக்காமல் மனதில் நிறுத்த சிலஅடிப்படைகளைப் பின்பற்றவேண்டும்.
1. விருப்பம் (ஆர்வம்):
ஆர்வத்தோடு விரும்பி கற்கும் எதுவும் மறக்காது. ஒரு பக்கம் படிக்கும்
பாடம் மறக்கிறது. ஆனால், நூறு பக்கம் படித்த கதை மறப்பதில்லை என்ன காரணம்?
ஒரு மணி நேரம் சொல்லித் தந்த பாடம் மறக்கிறது. ஆனால், மூன்று மணி நேரம்
பார்க்கும் திரைப்படம் மறப்பதில்லை, ஏன்? ஆர்வம்தான். விரும்பி கற்பது,
பார்ப்பது, கேட்பது மறக்காது. மனப்பாட்டு 20 வரி படித்து நினைவில் வைக்கச்
சொன்னால் மாணவன் மறந்து போகிறான். ஆனால், திரைப்படப் பாடலை ஓரிருமுறை
கேட்டுவிட்டு அடிமாறாமல் பாடுகிறான்; நூற்றுக்கணக்கான பாடலை மறக்காமல்
பாடுகிறான். என்ன காரணம்? ஆர்வம். எனவே, மறக்காமல் இருக்க் ஆர்வத்துடன்
விருமபிக் கற்கவேண்டும்.
2. புரிந்து கற்றல்:
எந்த
ஒன்றையும் விளங்கி, புரிந்து நினைவில் வைத்தால் அது மறக்காது. எதையும்
விளங்கிக்கொள்ளாது, அப்படியே மனப்பாடம் செய்தால் அது மறக்கும். எனவே,
எதையும் புரிந்து கற்றால் மறதியைத் தவிர்க்கலாம்.
3. அடிக்கடி திருப்புதல்:
படித்ததை மீண்டும் மீண்டும், படித்தால், அது நீண்ட காலத்திற்கு மறக்காது.
அதிக பக்கங்கள் படிக்கும்போது ஒரு பக்கத்தை நினைவுபடுத்திய பின்,
இரண்டாம் பக்கம் படித்ததும் இரண்டு பக்கங்களையும் சேர்த்து
நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அய்ந்து பக்கம் படித்தபின் அய்ந்து
பக்கங்களையும் திருப்பி நினைவுபடுத்த வேண்டும். இப்படி எல்லா
பக்கங்களையும் மீண்டும் நிதானமாக நினைவுபடுத்திப் பார்த்தால் மறக்கவே
மறக்காது.
4. எழுதிப் பார்த்தல்: படித்தவற்றை எழுதிப் பார்த்தால் மறதியை தவிர்க்கலாம். பலமுறை படிப்பதைவிட ஒருமுறை எ-ழுதிப் பார்ப்பது நினைவில் நிறுத்தும்.
5. குறிப்பெடுத்தல்:
நூற்றுக்கணக்கான
பக்கங்களைப் படிக்கும்போது, முதன்மையான செய்திகளைக் குறிப்பெடுத்துக்
கொண்டு படித்தால், மீண்டும் படிக்கும்போது குறிப்புகளைப் பார்த்தாலே
எல்லாம் நினைவுக்கு வரும். மீண்டும் எல்லாவற்றையும் படிக்கத் தேவை யில்லை.
குறிப்பெடுத்துக் கொண்டே படிப்பதால் இன்னொரு பெரும் நன்மையுண்டு. நம்
கவனம் சிதறாமல் படிப்பிலே செல்லும். புரிந்தும் படிப்போம்.
6. இரவு படுக்கும்முன் நினைவு கூர்தல்:
ஒரு நாள் முழுவதும் படித்தவற்றை இரவு உறங்குவதற்குமுன் அமைதியாக அப்படியே
நினைவு கூர்ந்தபடி உறங்கிவிட வேண்டும். மீண்டும் எழுந்து வேறு வேலை
செய்யக்கூடாது. காலையில் எழுந்து நினைத்துப் பார்த்தால் எல்லாம் பசுமையாய்
நினைவுக்குவரும்.
7. தேர்வுக்குமுன் (அமைதியான இடத்தில் ஒருமுறை) நினைவு கூர்தல்:
ஒரு தேர்வுக்கு படித்த அனைத்துச் செய்திகளையும், தேர்வு தொடங்குவதற்கு ஒரு
மணி நேரத்திற்குமுன் ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து,
நினைவுபடுத்திவிட்டு, மறக்கும் பகுதியை மீண்டும் பார்த்துவிட்டு,
தேர்வுக்கு குழப்பமின்றி சென்றால், தேர்வறையில் மறக்காமல் நினைவிற்கு
வரும். இறுதியாக ஒரு மணி நேரம் படித்த பின், மீண்டும் எதையும்
நினைத்துப்பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு குழப்பிக் கொண்டால்
படித்தவை பயத்தில் மறக்கும். எனவே, தேர்விற்குச் செல்லும்போது, தெளிவாகக்
குழப்பம் இன்றிச் செல்லவேண்டும்.
8. தேர்வு அறையில்:
தேர்வு அறையில் வினாக்களை அமைதியாக படித்து முடித்தால், தேவையான பதில்
போக, மற்றவை மனத்தை அழுத்தாது. எனவே, நினைவுச் சுமை குறைந்து, நினைவு
தெளிவாக இருக்கும். எனவே, தேர்வறையில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம்
தரக்கூடாது.
9. தொடர்புடையவற்றை நினைத்தல்:
சிலவற்றை நினைவில் கொள்ள அதனோடு தொடர்புடையவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
காட்சிகளை கருத்துக்களோடு சேர்த்து நினைவில் கொள்ளவேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளை மாணவர்களும்,
மற்றவர்களும் பின்பற்றி நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நினைவாற்றல் என்பது நம் முன்னேற்றத்திற்கான, நம்மைச் சார்ந்தவர்களின்
முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவை. அதை வளர்ப்பதும், மன நலத்தைத்
காப்பதும் மானுடக் கடமை ஆகும்.
2 comments:
நல்ல பல கருத்துக்கள்... விளக்கங்கள் அருமை...
நன்றி...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
Post a Comment