Pages

Search This Blog

Tuesday, December 25, 2012

400 ஏக்கர் நில ஆவணங்களை பறித்ததாக புகார் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் சரண்டர்

நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை பறித்து சென்றதாக பதிவு செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன்
பெற்ற இந்து நாளிதழ் என்.ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகிய இருவரும் நேற்று கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தினமும் காலையில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திடுமாறு அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்தவர் முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி. கோவை அரசு கலைக்கல்லூரி அருகே சேரன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானஸ்போர்ட்டிங் பாஸ்ட்டைம் இந்தியாஎன்ற கம்பெனிக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள 400 ஏக்கர் நிலத்தை பழனிச்சாமி 30 கோடி விலை கொடுத்து வாங்கினார்.

கடந்த 2004ம் ஆண்டு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் விலை அடுத்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை திரும்ப தருமாறு கஸ்தூரி சன்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது. பழனிச்சாமி தர மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் கோவையில் உள்ள தனது அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை பறித்து சென்றதாக அப்போது இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியராக இருந்த என்.ராம், இந்து இயக்குநர் ரமேஷ் ரங்கராஜன், பிரேம் வாட்சா, ராமசாமி அத்தப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோவை போலீசில் பழனிச்சாமி புகார் கொடுத்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். அவர் கொடுத்திருந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர போலீசாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி மதிவாணன் அந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதையடுத்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இந்து ராம், இந்து ரமேஷ் ரங்கராஜன் உட்பட 10 பேர் மீது 120(பி) கூட்டு சதி, 395(கூட்டு கொள்ளை), 457(பகல் நேரத்தில் அலுவலகத்திற்குள் புகுந்து களவில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் செப்டம்பர் 24ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராம், ரமேஷ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரேசன் இருவருக்கும் கடந்த 19ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ‘கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து தலா இரு நபர் மற்றும் ஸீ10 ஆயிரம் ரொக்கம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்.

 இருவரும் தினமும் காலை 10 மணிக்கு கோவை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும்என்று உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து ராம், ரமேஷ் ஆகியோர் நேற்று முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி முனுசாமி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் ஒரு வாரம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

1 comment:

குட்டன்ஜி said...

பெரிய இடத்து விவகாரம்

Post a Comment