Pages

Search This Blog

Saturday, July 30, 2011

இந்தியன் வங்கி லாபம் ரூ. 406 கோடி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 406.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட 10.5 சதவீதம் அதிகம் என்று வங்கியின் தலைவர் டி.எம். பாசின் தெரிவித்தார்.

வங்கியின் முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு பாசின் கூறியது: முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 368.20 கோடியாக இருந்தது.வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 1,92,934 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வங்கியின் வர்த்தகம் ரூ. 1,59,027 கோடியாகும். நடப்பாண்டு வர்த்தகம் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளது.ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் வங்கியின் சேமிப்பு ரூ. 1,10,425 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் சேமிப்பு தொகை ரூ. 91,000 கோடியாக இருந்தது. சேமிப்பில் 21.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.வங்கியின் மொத்த வருமானம் 22 சதவீதம் அதிகரித்து ரூ. 3,030.70 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 21 சதவீதம் உயர்ந்து ரூ. 82,510 கோடியானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி வழங்கிய கடன் அளவு ரூ. 68,027 கோடியாகும். வங்கியின் ஒரு பங்கு ஈட்டும் வருவாய் 11 சதவீதம் உயர்ந்து ரூ. 36.80 ஆக இருந்தது என்றார் பாசின்.கடன் பத்திரம்: வங்கியின் வளர்ச்சிக்கு ரூ. 4,500 கோடி தொகையை கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்ட வங்கி உத்தேசித்துள்ளது.

இதற்கு வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குறுகிய கால அடிப்படையிலான இந்த கடன் பத்திரங்கள் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு திரட்டப்படும் என்று பாசின் தெரிவித்தார். கடன் பத்திர வெளியீட்டை பிரபலப்படுத்தும் கண்காட்சிகள் வெளிநாடுகளில் ஏற்கெனவே நடத்தப்பட்டு விட்டன. இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். முதல் கட்டமாக 35 கோடி டாலர் முதல் 50 கோடி டாலர் வரை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும். நிதி திரட்டிய பிறகு வங்கிப் பங்குகள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் அவர் கூறினார். 

வெளிநாடுகளில் கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டப்படும் இந்நிதி மூலம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் இந்தியன் வங்கிக் கிளைகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றார். இது தவிர, உள்நாட்டில் தொடர் பங்கு வெளியீடு மூலம் ரூ. 1,400 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தை நிலவரம் ஸ்திரமடைந்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment