Pages

Search This Blog

Sunday, August 21, 2011

இலவச திட்டங்கள்: தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் ஓரிரு நாளில் அறிவிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள பெரும்பாலான இலவசத் திட்டங்கள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளன. இந்தத் திட்டங்களுக்கான பொருட்களைத் தயாரித்து அளிக்கும் நிறுவனங்களின் பெயர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

அனைத்து இலவச திட்டங்களையும் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ள இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கான நிறுவனத்தின் பெயர், செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகளை 54 நிறுவனங்கள் அளித்திருந்தன. தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தப்புள்ளிகளில் 45 நிறுவனங்கள் தேறின. இந்த நிறுவனங்கள் அளித்துள்ள விலைப்புள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை, தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தலைமையிலான துணைக் குழு ஆகியன மேற்கொண்டன.

இறுதி முடிவுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குழு எடுக்க உள்ளது. இந்தக் குழுக்கள் அனைத்தும் தங்களது ஆய்வினை முடித்து, தகுதியுள்ள எந்த நிறுவனத்துக்கு இலவசப் பொருட்களைத் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக ஓரிரு நாட்களில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது. இதேபோன்று, இலவச லேப்-டாப் திட்டத்துக்காக அவற்றைத் தயாரித்து அளிக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கறவை மாடுகள், ஆடுகள், தாலிக்கு இலவச தங்கம் போன்ற திட்டங்களுக்கு உரிய அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவற்றுக்குப் பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment