Pages

Search This Blog

Monday, August 01, 2011

அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்படுமா?

அரசுப் பள்ளிகள் மீது அரசுக்கும், கல்வித் துறைக்குமே நம்பிக்கை இல்லாமல் போனது கல்வித் துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.  அண்மையில், கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்ற 9 மாணவ, மாணவிகளை அரசு செலவில் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இதற்குக் காரணம்.

 அரசின் இந்தச் செயல்பாடு தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, அரசுப் பள்ளிகளின் மூடு விழாவுக்கு அரசு தயார்படுத்துகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும், ஆசிரியர்களையும், அரசுப் பள்ளிகளையும் தரம் தாழ்த்தி மதிப்பிடுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. போராட்டத்துக்கு அஞ்சாமல் குரல் கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை இதுவரை தட்டிக் கேட்கவில்லை.

 அரசுப் பள்ளிகள் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லாமல் போன பிறகு அப்பாவி மக்களும், பெற்றோர்களும் மட்டுமே அவற்றை நம்ப வேண்டும் என அரசு எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?  ÷நன்றாகப் படிக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துகிறோம், தரமான நல்ல கல்வி கற்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம், பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்தது கல்வித் துறையின் இயலாமையைத்தானே காட்டுகிறது. 

 மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கும், கல்வி சாரா அரசுப் பணிக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் என அரசு முத்திரை குத்திவிட்டதா?  ÷நமது நாட்டின் வருவாயில் 6 சதவீதம்தான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. கல்விக்காகக் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டும், தகுதியுடைய ஆசிரியர்கள் இருந்தும், பெற்றோர்கள் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அரசுப் பள்ளிகளைத் திறம்பட வழி நடத்தாதது யார் குற்றம்?  ÷அரசுப் பள்ளிகளின் பாடங்கள் தரமற்றவை, அங்கு கற்பிக்கும் முறை மோசமாக உள்ளது, அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் இல்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா? பிறகு அரசுப் பள்ளிகள் எதற்கு?  ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆணிவேராக இருப்பது கல்விதான்.

கல்வியின் வளர்ச்சி தனி மனிதனுக்கு மட்டுமல்ல, நாட்டின் உயிரோட்டத்துக்கும் பாலமாக அமைகிறது. இதனால்தான், உலகில் வல்லரசு நாடுகளாக இருக்கும் பல நாடுகளில் கல்வி நிலையங்களை அரசு மட்டுமே நடத்தி வருகிறது.ஆனால், இந்தியாவில் மட்டும் கல்வியை வியாபாரமாக்கிய பெருமை நமது அரசியல்வாதிகளையே சாரும்.  ÷ஆங்கில மோகத்தின் காரணமாக பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை விட்டுவிலக ஆரம்பித்தனர் என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் குறைபாட்டைப் போக்கும் விதத்தில், அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  ÷மேலும், தாம் பணியாற்றும் அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லாமல் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கிறார்களே என்று வருத்தப்பட வேண்டிய ஆசிரியர்கள், நமக்குத் தேவை மாதமானால் சம்பளம், யார் எங்கே போனால் நமக்கென்ன என்ற நிலையில் நின்றுவிட்டனர்.  

எது எதற்கோ உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நமது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இனி அனைத்து அரசுப் பணியாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கும் காலம் வர வேண்டும்.  அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே அரசுக் கல்லூரியில் இடம், அரசுப் பணியில் இடம் என்று பதில் அளிக்கப்படுமானால், இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 

விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவதைப்போல, கல்வி என்பது நாட்டின் இதயமாக இருக்கிறது. காமராஜ் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை அடிப்படைக் கல்விக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அரசின் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறிதான். காரணம், அடிப்படைக் கல்வியில்கூட நாம் அனைவருக்கும் சமமாகக் கல்வியை அளிக்கத் தவறி விட்டோம்.

இதனால்தான் தமிழ்நாட்டில் இன்று பல அரசுப் பள்ளிகள் ஆட்டம் கண்டுள்ளன.  கல்வியை மேம்படுத்தும் வகையில் கிராமப்புறக் கல்வித் திட்டம், பள்ளியில் இடைநின்றவர்களை இணைக்கும் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் எனப் பல்வேறு தலைப்புகளில் அரசு கோடிக்கணக்கில் செலவிட்டு, கல்வி பற்றி விளம்பரம் செய்து, அரசுப் பள்ளியில் படிக்க வாருங்கள் என கோஷங்களை எழுப்பி வருகிறது. 

மறுபுறம் அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அரசே சேர்ப்பது, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இவற்றில், எதை நாம் ஏற்றுக் கொள்வது?  ÷அரசுப் பள்ளிகளை காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதை உணர வேண்டும். எனவே, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல என்பதை பெற்றோர் மத்தியில் அரசுப் பள்ளிகள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும், அரசுப் பள்ளிக் கல்வியை அனைவரும் நேசிக்கும் நிலையும் உருவாகும்.

No comments:

Post a Comment