Pages

Search This Blog

Monday, August 01, 2011

இந்திய கிராமங்களும் இடம்பெயரும் மக்களும்

பரம்பரைகளின் பின் பரம்பரைகள் வேருடன் சாய்கின்றன. புரட்சிகளின் பின் புரட்சிகள் உருவாகின்றன. ஆனால், கிராம சமுதாயங்கள் மாற்றம் காண்பதே இல்லை. இக்கருத்து இன்றைக்கு, நேற்றைக்கு கூறப்பட்டதல்ல. 1832-ம் ஆண்டு இந்திய கிராமங்களைப் பற்றி சார்லஸ் மெட்காஃப் என்பவர் கூறியவை தாம் இவை.மேலும் கிராமங்கள் சின்னஞ்சிறு குடியரசுகள் எனவும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்பதோடு அநேகமாக அந்நியர்களின் உதவியின்றியே செயல்படும் தன்மை கொண்டவை என்றும் இந்தியாவின் ஊரகங்களைப் பற்றி இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற "ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனும் கீழ்சபைக்கு 1832-ல் சார்லஸ் மெட்காஃப் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய இந்திய கிராமங்களைப் பற்றிய காந்தியடிகளின் கனவும் இதுதான். கிராமங்களின் தன்னிறைவு மற்றும் பொருளாதார விடுதலை குறித்த காந்தியத் தத்துவமும், சார்லஸ் மெட்காஃபின் கருத்துகளும் மிக நெருங்கிய தொடர்புடையவையே.180 ஆண்டுகள் நிறைவடையப் போகும் தருவாயில் சார்லஸ் மெட்காஃபின் கூற்றின் இன்றையநிலை என்ன என்று கேட்டால், இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.இந்திய கிராமங்களில் நல்ல பலமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆளில்லாத லெவல் கிராஸிங், வாகனம் செல்ல இயலாத சாலைகள், மின்சாரமில்லா வீடுகள் என ஒரு காலத்தில் அடையாளம் காட்டப்பட்ட இந்திய கிராமங்கள் அந்த நிலையிலிருந்து மாறியுள்ளன.அதுமட்டுமல்ல, தொலைதூர கிராமங்களிலும் தெருவிளக்குகள், தொலைபேசி வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கிராமப்புற சுகாதாரம், தாய்சேய் நலம், அரசுப் போக்குவரத்து, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கிராமப்புற மேம்பாடு என இந்திய கிராமங்கள் விடுதலைக்குப் பிறகு நிரம்பவே மாறியுள்ளன.

எத்தனை எத்தனையோ சோதனைகளையும், விமர்சனங்களையும் தாண்டி இந்தியா வளர்ந்திருக்கிறது. பாம்பாட்டிகளும் பிச்சைக்காரர்களும் குறிசொல்பவர்களும் நிறைந்த நாடு என்றல்லவா சில எழுத்தாளர்களால் ஏளனம் செய்யப்பட்டது.இந்தியாவின் ஏழ்மையை விமர்சித்த நாடுகளெல்லாம் அணுசோதனை, விண்வெளி மற்றும் ஏவுகணை ஆய்வில் சாதனை, மருத்துவத் துறையில் முன்னணிநிலை, முப்படைகளின் பலம், வேற்றுமையிலும் ஒற்றுமை எல்லாவற்றுக்கும் மேலாக மிகப் பெரும் ஜனநாயகநாடு என பல்வேறு பரிமாணங்களின் விசுவரூபத்தைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளன.

இவையெல்லாம் ஒருபுறம் இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றினாலும், சில விரும்பத்தகாத மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது நகர்ப்புறங்களை நோக்கி பெருமளவில் கிராம மக்கள் இடம்பெயர்ந்ததுதான்.இந்திய கிராமங்கள் நட்பு, உறவு, சுற்றம் இவற்றால் பேணப்பட்ட விழுமியங்கள் வேரூன்றிய களங்களாகத்தான் திகழ்ந்தன. வேளாண் பொருளாதாரத்தின் பிரிக்கமுடியாத அங்கமாகத் திகழ்ந்த கூட்டுக்குடும்ப அமைப்பு காலப்போக்கில் சிதைந்துபோனது.கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகள் வளர்ந்து, படித்து பெரியவர்களாகி வேலை தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றார்கள். 

அதற்குப் பிறகும்கூட பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்குமான உறவுகள் தொடர்ந்தன. விடுமுறை காலங்களிலாவது பெற்றோர்களை வந்துபார்த்து விட்டுச் சென்றார்கள். ஆனால், ஏறத்தாழ முப்பது, நாற்பது ஆண்டுகளாக நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. மகனும் மருமகளும் பேரக்குழந்தைகளோடு கோடை விடுமுறைக்கு வெளியூரிலிருந்து வருகிறார்கள் என கடிதம் வந்தவுடன் மாடுகளின் கழுத்தில் சலங்கையைக் கட்டி வண்டி பட்டி ரயிலடிக்கு அனுப்பும் தாத்தாக்கள் கிராமங்களில் இல்லை.மங்கிய நிலவொளியில் மொட்டை மாடியில் பால்சோறு ஊட்டும் பாட்டிமார்கள் அங்கே இல்லை. அந்தக்கால திருமண அழைப்பிதழ்களில் அச்சிடப்பட்டிருப்பதைப் போல இஷ்டமித்திர பந்துக்களுடன் குடும்ப சமேதராய் பெரும்பான்மையோர் பட்டினப் பிரவேசம் செய்து விட்டார்கள்.இயந்திரமயமாதல் மற்றும் நகரமயமாதல் இவற்றுக்கு நாம் கொடுத்த விலைதான் இது.

ஓர் இடத்தின் மக்கள்தொகையைத் தீர்மானிப்பவை மூன்று காரணிகள் என்கிறது மக்கள்தொகையியல். அவைமுறையே பிறப்பு, இறப்பு, இடம்பெயர்தல் ஆகியனவாகும்.இவற்றில் பிறப்பு, இறப்பு இவையிரண்டும் உயிரியல் தொடர்புடையவை. ஆனால், இடம்பெயர்தல் எனும் நடவடிக்கையை சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தீர்மானிக்கின்றன. இந்தியாவின் கிராமங்களிலிருந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்ததுதான் கிராமங்களின் சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார நிலையை முற்றிலுமாக மாற்றிவிட்டன.

1953-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவுகளின்படி நகர்ப்புற பணியாளர்களில் 40 சதவீதத்தினர் இடம் பெயர்ந்தவர்களென்றும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமங்களிலிருந்து வந்தவர்களென்றும் கார்ல்.சி. டெய்லர் தெரிவிக்கிறார்.60 ஆண்டுகளுக்குமுன் மிகச்சிறிய கிராமங்களிலிருந்து பெரிய கிராமங்களுக்கும் நகர்ப் புறங்களுக்கும் மக்கள் இடம்பெயர்ந்ததற்கான காரணங்களை டெய்லர் இவ்வாறு பட்டியலிடுகிறார்.

விவசாயம் மற்றும் கிராமியப் பொருள்கள் வணிகமயமானது, நெடுஞ்சாலை மற்றும் இருப்புப்பாதை மேம்பாடு கிராமிய கைவினைஞர்கள் சந்தை மையங்களை நோக்கி இடம் பெயர்ந்தது, இடைத்தரகர்கள், கிராமியப் பொருள்களை விற்பவர்கள், மாநகரங்களில் தயாரான பொருள்களை கிராமங்களில் விற்பனை செய்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இவையெல்லாம் நகர்ப்புறங்களை நோக்கிய இடம்பெயர்தலுக்குக் காரணங்களாக அமைந்தன.

கிராமங்களில் வாழ்ந்த நெசவாளர்களில் பலர் சாயத்தொழிலில் அனுபவமின்றி இருந்ததாலும், இவர்களில் சிலர் நகர்ப்புறச் சந்தைகளில் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தமையாலும் நகரங்களை நாடிச் சென்றனர் என்கிறார் டி.ஆர்.காட்கில்.இந்த நிலை 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிராமங்களில் நிகழ்ந்த மாற்றங்களால் ஏற்பட்டதாகும்.

நகரங்களைச் சென்றடைந்த அனைத்து மக்களுக்கும் வாழ்க்கை வசப்படவில்லை என்பதுதான் சோகமான நிகழ்வாகும். தேவை, ஏழ்மை, கடன்சுமை போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களைத் தேடிச்சென்றவர்களுக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை என்பதே உண்மை.இன்றைக்கும் நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு பெருமளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், காரணங்களும் தன்மைகளும் சற்று வித்தியாசமானவை.கடந்த 20 ஆண்டுகளில் தேச எல்லைகளைக் கடந்து வேலைவாய்ப்புகள், வணிகம், கல்வி போன்ற துறைகளில் உலகநாடுகள் கை கோத்துக் கொண்டதுதான், நாடுகடந்த இடப்பெயர்வுக்கு மட்டுமல்லாது, நகரங்களை நோக்கிய இடப்பெயர்வுக்கும் காரணமாக அமைந்தன. இதே காலகட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அடைந்த அபரிமிதமான வளர்ச்சி இந்திய நகரங்களை மையமாகக் கொண்ட இடப்பெயர்வை அதிகரித்திருக்கிறது. மின்னணுத் தொழிற்சாலைகள், கனரகத் தொழிற்சாலைகள் போன்றவைகளில் உருவான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் மக்களை நகரங்களை நோக்கி ஈர்த்தன.நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் ஆகியனவும் காரணங்களுள் அடங்கும். 

கடந்த இரு மக்கள்தொகை கணக்கெடுப்புகளும் உணர்த்துகிற உண்மை என்னவென்றால், பெண்கள் இடம்பெயர்வது மிகவும் அதிகரித்திருக்கிறது.1991-ம் ஆண்டு முதல் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத் தலைநகரங்கள்போக, மாநிலங்களுக்கிடையேயான இடப்பெயர்வும் அதிகமாக நிகழ்ந்துள்ளது.உதாரணமாக உத்தரப்பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் மத்தியப்பிரதேசத்துக்கும் மக்கள் அதிகஅளவில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பிகாரிலிருந்து, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் குடியேறியிருக்கிறார்கள். ராஜஸ்தானிலிருந்து மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்.இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் கணிசமான அளவில் குடியேறியிருக்கின்றனர்.

வானளாவிய கட்டடங்கள், வசதியான வாழ்விடங்கள், வாகனங்கள், வாழ்வியல் முறைகள் இவையெல்லாம் வளமையான எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் நகரங்களில்தான் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதால் நகரங்களை நோக்கிய நகர்வு ஓரளவுக்கு உளவியல் அடிப்படையிலானது என்பதை மறுக்கவியலாது.வாழ்க்கை வாய்க்கப் பெற்றவர்கள் வளம் பெற்றார்கள். கனவுகளைத் துரத்தி, கடைசியில் கானல்நீரையே கண்ட கணிசமான மனிதர்கள், குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இது அன்றும் நடந்தது. இன்றும் தொடர்கிறது.17 கோடி மக்கள் இந்தியாவில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புற மக்களில் 56 சதவீதத்தினருக்கு குடிசைகளே புகலிடமாக விளங்குகின்றன.விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் மேம்பட வேண்டும். கிராமங்களை மையமாகக் கொண்டு பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க இந்திய கிராமங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.

No comments:

Post a Comment