Pages

Search This Blog

Monday, August 01, 2011

அறிவியல் கதைகள்

தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது நேரடியான பாதிப்பு செலுத்தும் முன்னோடிகளாக மூவரை குறிப்பிட்டிருந்தேன். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ,சுஜாதா. இந்த விஷயம் சிற்றிதழ் சார்ந்த வாசகர்களை எப்படி குழப்பியது ,அல்லது கோபம் கொள்ள வைத்தது என்பதை சற்று வியப்புடன் கண்டேன். பெரும்பாலான கூட்டங்களில் என் எழுத்தின்மீது சுஜாதாவின் பாதிப்பு என்ன வகையானது என்றும் அதிலுருந்து ‘ மீள ‘ நான் என்ன செய்கிறேன் என்றும் கேட்கப்பட்டது . அதற்கு நான் என் எழுத்தின்மீது இம்மூவரின் பாதிப்பும் தமிழ் நடை சம்பந்தமானதுதான் என்றும் என் பார்வை மீதான பாதிப்பை எந்த தமிழ் எழுத்தாளரும் உருவாக்கவில்லை என்றும் பதில் சொல்லி வந்தேன்.இவர்களின் பாதிப்பிலிருந்து மீள்வது என்பது என்னைப்பொறுத்தவரை இவர்கள் உருவாக்கிய சாதனை எல்லையை தாண்டிச்செல்வதுதான் என்றும் குறிப்பிட்டுவந்தேன்.
இவ்வாசகர்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரியாமல் இல்லை. அசோகமித்திரனின் பாதிப்பும் சுந்தர ராமசாமியின் பாதிப்பும் ‘இலக்கிய ரீதியான ‘ பாதிப்புகள் என்றும் சுஜாதாவின் பாதிப்பு வணிக எழுத்தின் பாதிப்பு ஆகவே எதிர்மறையானது ‘ தவிர்க்கவும் ‘ ‘ மீளவும் ‘ வேண்டிய ஒன்று என்றும்தான் அக்கேள்விகள் உத்தேசித்தன. என்னைப்பொறுத்தவரை அசோகமித்திரனில் இருந்து சொல்லாமல் உணர்த்துவதையும், வெட்டி வெட்டி சொல்லிச்செல்லுவதையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியிடமிருந்து அறிவார்ந்த விவாதங்களுக்கான நடையை. சுஜாதாவிடமிருந்து காட்சிச் சித்தரிப்பு மற்றும் உரையாடல்களில் கச்சிதத்தை. இவர்களிடமிருந்து என் சுய அடையாளம் காரணமாக இன்று வெகுதூரம் வந்து விட்டிருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் விஷ்ணுபுரம் போன்ற சுஜாதாவின் உலகுக்கு முற்றிலும் மாறுபட்ட நாவலில் கூட சுஜாதாவின் சித்தரிப்புமுறையின் ஆழமான பாதிப்பு இருப்பதையும் காண்கிறேன். அது என் ஆளுமையின் வெளிப்பாடாக இருப்பதனால் அதை என்னைத்தவிர வேறு வாசகர்கள் எளிதாகக் கண்டுகொள்ளமுடியாது .
சுஜாதாவின் இலக்கிய இடம் அடையாளம் காணப்படாமைக்கு என்ன காரணம் ? ஒன்று : அவர் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் எப்போதுமே தெளிவாக அடையாளம்காட்டிக் கொள்வதுதான் என்று எனக்குப் படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கிய உலகம் சிற்றிதழ்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அவை அடிப்படையில் எதிர்ப்பு சக்திகள். அவை எதிரிப்போக்குகளாக அடையாளம் காண்பதன் பகுதியாகவே சுஜாதா நமக்குத் தெரியவருகிறார் . அந்த எளிய அடையாளத்துக்கு அப்பால் சென்று அவரை அறியும் பொறுமையும் சரி , அதற்கான விமரிசன உபகரணங்களும் சரி , இங்கே நம் எழுத்தாளர்களிடமும் விமரிசகர்களிடமும் இல்லை .
இரண்டு : சுஜாதாவின் எழுத்து ஒருவகை உள்ளீடற்ற தன்மை கொண்டது என்பதே. அதாவது அதற்கு உணர்ச்சிகரமான மைய ஓட்டமோ கருத்தியல் உள்ளடக்கமோ இல்லை. அது நம்மை ஒருபோதும் நெகிழச் செய்வது இல்லை . அது நம் இலக்கிய வாசகன் எப்போதுமே தேடும் முற்போக்கு உள்ளடக்கம் கொண்டதல்ல. அதில் முற்போக்கு கருத்துக்கள் வந்துள்ளன. பிற்போக்குக் கருத்துக்களும் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக அவற்றின் உள்ளீடு என நிலையாக ஏதுமில்லை . சமீபகாலம் வரை நமது இலக்கிய உலகை ஆண்ட ,ஆட்டிப்படைத்த பார்வைக்கோணம் என்பது ‘ இந்த ஆக்கம் சமூகத்துக்குச் சொல்லும் கருத்து என்ன ? ‘ என்பதே. நமது முற்போக்கு எழுத்தாளர்களாலும் விமரிசகர்களாலும் உருவாக்கப்பட்டு மறைமுகமாக எல்லா தரப்பினரையும் ஆளும் கருத்துநிலையாக இது இருந்தது . இந்த அம்சம் சுஜாதாவின் இலக்கிய இடத்தை நிராகரிக்க முக்கியமான காரணமாக அமைந்தது. ஓரளவேனும் அங்கீகாரம் பெற்றவை அவரது ‘நகரம் ‘ போன்ற முற்போக்குப் பார்வை கொண்ட கதைகள் என்பதைக் காணலாம்.
மூன்று : சுஜாதாவின் நடை . அந்த நடைதான் அவரை தமிழின் மிக அதிகமாக படிக்கப்படும் எழுத்தாளராக ஆக்கியது. ஏற்கனவே நான் ஒரு கட்டுரையில் சொன்னதுபோல சுஜாதாவின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் அவரது பாதிப்பு இல்லாதவர் கோணங்கி மட்டுமே, ஆகவே அவரது உலகில் புற உலகமே இல்லை. சுஜாதாவின் நடையை தனியாகவே ஆராய வேண்டும். சுருக்கமாக சில விஷயங்களை சொல்லலாம். ஆசிரியன் கூற்றாக, எள்ளல் தொனியுடன் வருவதனால் அதை புதுமைப்பித்தன் பாணி நடை என வகுக்கலாம். எளிய, சுருக்கமான, அலங்காரங்களே இல்லாத, நடை என்பதனால் அது அசோகமித்திரனின் நடை. அதன் ரத்தினச்சுரூக்கத்தன்மை மேற்கத்திய அதிவேகப் புனைகதையாளர்களின் பொதுவான இயல்பாகும்.
இக்கூறுகளையெல்லாம் விட முக்கியமானது அது ஓர் ‘ ஒட்டு நடை ‘ அல்லது ‘கொலாஜ் நடை ‘ என்பதே. தமிழ் இன்று புழங்கும் பல்வேறு தளங்களில் மொழியில் உருவாகும் புது சாத்தியங்களை புதிய அழகுகளை உடனே உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை சுஜாதாவின் நடைக்கு உண்டு. அன்றாட உரையாடலில் உருவாகும் பல்வேறு புது வழக்காறுகளை , அங்கதச் சொல்லாட்சிகளை மிக அதிகமாக பிடித்து எடுத்துக் கொண்ட இலக்கியவாதி அவரே. இதில் இளைஞர்களின் தனிமொழி முதல் சென்னை குப்பத்துக் கொச்சை வரை அடங்கும். விளம்பரங்களின் மொழியை , மருத்துவ அறிக்கைகளின் மொழியை , நீதிமன்ற மொழியை , தொலைக்காட்சிகளின் மொழியை சுஜாதாவின் புனைவு மொழி நுட்பமாக பின் தொடர்ந்தபடியே உள்ளது . இதன்மூலம் அதில் உருவாகும் கலவைத்தன்மை அதற்கு ஓர் சமகாலத்தன்மையை அளிக்கிறது. அவருக்கு பின்னால் வந்த படைப்பாளிகளின் மொழி வயோதிகமடைந்து விட்டது. வண்ணநிலவனும் கோணங்கியும் வழக்கிழந்து விட்டார்கள் சுஜாதாவின் மொழிக்கு இளமை குன்றவில்லை .காரணம் அதன் உள்வாங்கல்தன்மை அதிகம் என்பதே.
ஆனால் இந்த பரவிச்செல்லும் தன்மை காரணமாகவே அதற்கு அந்தரங்கமான தன்மை இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது என்பதைக் காணலாம். அது அவரது ரத்ததாலும் சதையாலும் உருவானதல்ல. நாம் பல்வேறு இடங்களில் கண்டு கேட்டு அறிந்த விஷயங்கள் உருமாறி அடைந்த வடிவம் அது . அதாவது அது ஒரு ‘பிளாஸ்டிக் ‘ மொழியாக இருக்கிறது. [பிளாஸ்டிக் ஆர்ட் என்ற புதிய கலைவடிவத்தின் பொருளில்] தமிழில் நாம் மிகச்சமீப காலம் வரை இலக்கியம் என்றாலே அதன் அந்தரங்கத்தன்மை மட்டுமே என்று நம்பி வந்தோம். அந்தரங்கத்தன்மை இல்லாத வணிக உற்பத்திக்கதைகளுக்கு எதிராக இலக்கியத்தை நாம் சென்ற காலங்களில் முன்வைத்தமையால் இந்த அதீத அழுத்தத்துக்கு கலாச்சார ரீதியாக தேவை இருந்தது என்றே எண்ணுகிறேன். ஆகவே அந்தரங்கத்தன்மை இல்லாத சுஜாதாவின் நடை இலக்கியகுணம் இல்லாதது என்ற எண்ணம் இருந்தது.
இம்மூன்று காரணங்களாலும் சுஜாதாவின் இலக்கிய இடம் அங்கீகாரம் பெறவில்லை என்பதே என் கணிப்பு. தீவிரம் ஒன்றே இலக்கியத்தின் குணாதிசயமாக இருக்க முடியும் என்ற அன்றைய பொதுவான நம்பிக்கையை மேற்கண்ட சுஜாதாவின் எழுத்துக்கு உள்ள இம்மூன்று அம்சங்களும் நிராகரிக்கின்றன என்பதை கவனிக்கவேண்டும். இதே காரணத்தால்தான் ப சிங்காரமும் அன்று ஏற்கப்படவில்லை. தீவிரம் மட்டுமே இலக்கியகுணம் என்ற நம்பிக்கை காரணமாகவே ஒருவகை ஊமைத்தீவிரம் மட்டும் கொண்ட நகுலன் , சம்பத் போன்றவர்களின் ஆக்கங்கள் அவற்றுக்கு உரிய மதிப்பை விட அதிக அங்கீகாரத்தை பெற்றன. சில வட்டாரங்களில் பெற்றும் வருகின்றன அந்தரங்கமான ஒருவகை தீவிரத்தை உண்மையாகவோ போலியாகவோ உருவாக்கிக் காட்டிவிட்டால் அப்படைப்புக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைப்பது தமிழ் சிற்றிதழ் வட்டாரத்தில் எளிதாக உள்ளது. இலக்கியத்தின் வகை மாதிரிகள் முடிவற்றவை. ருசிகளும் எண்ணற்றவை. மாறுபட்ட திசைகளில் பிரியும் பயணங்கள் இங்கு உருவாவதை இப்போக்கு தடுத்து விட்டது. இது இன்று அடையாளம் காணப்பட்டு விட்ட ஒரு குறையாகும். அதை தாண்ட முயலும் ஆக்கங்கள் இன்று வந்தபடி உள்ளன.
சுஜாதா நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவு . அவரது ஆக்கங்கள் நவீனக் கருவிகள் போன்றவை. நவீனத்தொழில்நுட்பம் உள்ளீடற்றது. அதாவது அதற்கு தனக்குரிய கருத்தியல் உள்ளடக்கம் இல்லை. பல்வேறு வகையான அறிவுத்துறைகள் அதில் வந்து இடைவிடாது இணைந்தபடியே உள்ளன. ஆகவே ஓர் நவீனக் கருவி பலநூறு ஞானங்களின் கலவை. உதாரணமாக இந்தக் கணிப்பொறி. இது எதற்கும் பயன்படும். மின்னணுவியல் முதல் மொழியியல் வரை பலவிதமான துறைகள் இதில் சந்திக்கின்றன. அந்தரங்கமான எழுத்து ஒரு மலையை அல்லது மலரைப் போன்றது . அதன் விதிகளே வேறு . மலைகளையும் மலர்களையும் நவீனத்தொழில் நுட்பமும் கிட்டத்தட்ட உருவாக்கிவிடலாம். அதில் யதார்த்தம் இல்லை – செயற்கை யதார்த்தம் மட்டுமே உள்ளது. உச்சகட்ட தொழில்நுட்பம் மூலம் உருவாகும் நேர்த்தி உடைய செயற்கை யதார்த்தம். ஆகவேதான் அது பிளாஸ்டிக் ஆர்ட். அவ்வகையில் பார்த்தால் தமிழில் பின் நவீனத்துவம் கூறும் சில முக்கியமான கூறுகள் கொண்ட முதல் புனைவுமொழி சுஜாதா உருவாக்கியதுதான். முதல்தளத்தன்மை, [அதாவது 'ஆழம் ' இன்மை] தீவிரத்துக்கு நேர் எதிரான விளையாட்டுத்தன்மை, நவீனத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே அதன் மீதான எள்ளலை முன்வைக்கும் தன்மை, செயற்கையான நேர்த்தியான கலவைத்தன்மை என பின் நவீனத்துவ இலக்கிய ஆக்கத்துக்கு அடையாளங்களாக இன்று [சமீப நேற்று ?] சொல்லப்படும் குணாதிசயங்கள் அவரது ஆக்கங்களுக்கு உள்ளன.
கறாரான விமரிசனப்பார்வையில் சுஜாதாவின் நாவல்களில் ‘ கனவுத்தொழிற்சாலை ‘ ‘காகிதச்சங்கிலிகள் ‘ போன்ற சில நாவல்களையே ஓரளவேனும் இலக்கிய ரீதியாக பொருட்படுத்தமுடியும். பிற நாவல்கள் கதைகள் மட்டுமே. பெரும்பாலான நாவல்களில் அவரது கவனம் சீராகச் செயல்பட்டதாகத் தெரியவும் இல்லை. சித்தரிப்புத் தொழில்நுட்பத்தின் தேர்ச்சியே அவற்றை படிக்கச் செய்கிறது. சுஜாதாவின் இலக்கிய முக்கியத்துவம் அவரது சிறுகதைகளில்தான் உள்ளது. அவரது ஸ்ரீரங்கம் சிறுகதைகள்,மத்யமர் வரிசை சிறுகதைகள் பொதுவாக தமிழின் சிறந்த சிறுகதைகளின் நேர்த்தியை அடைந்தவை. ஆனால் அவரது தனி இடம் அபத்தமும் அங்கதமும் நிரம்பிய அவரது நகைச்சுவைக் கதைகளில்தான். ‘குதிரை ‘ என்ற அவரது கதையை அவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளின் வரிசையில் சேர்ப்பேன். உலக இலக்கியத்தின் வெற்றிகரமான நகைச்சுவைச் சிறுகதைகளாக நமக்குக் கிடைக்கும் கதைகளில் எவற்றுக்கும் குறையாத பத்து கதைகளையேனும் சுஜாதா எழுதியுள்ளார். அவரது தாவிச்செல்லும் கலவை மொழி, அவதான நிபுணத்துவம் ஆகியவை அவரது அடிப்படை இயல்பான விளையாட்டுத்தனத்துடன் அழகாக சேர்ந்துகொள்ளும் இப்படைப்புகளை இனிமேல்தான் நம் விமரிசக உலகம் அங்கீகரிக்கவேண்டியுள்ளது. [ஆனால் ஏறத்தாழ பத்துவருடங்களாக இக்கருத்தை நான் வலியுறுத்தி வந்தபோதும் கூட அதற்கு நல்ல வாசகர்களிடம் மதிப்பு உருவாகவில்லை . முக்கியமான காரணம் நல்ல பதிப்புகளாக சுஜாதாவின் கதைகள் வரவில்லை என்பதே. தேர்ந்த நகைச்சுவைக் கதைகள் அடங்கிய ஓரு தொகுப்பு அவசியம் ]
அறிவியல் புனைகதைகள் பற்றிய சுஜாதாவின் பார்வை
===========================================
சுஜாதா ஓர் அறிவியலாளராக தமிழில் அறியப்படுபவர். தன் ஆரம்பகாலம் முதல் அறிவியல் கதைகளையும் அறிவியல் கட்டுரைகளையும் அவர் எழுதி வருகிறார். சுஜாதாவின் ஒட்டு மொத்த பார்வை மற்றும் பங்களிப்பை ஓரளவு கார்ல் சகனிடம் ஒப்பிடலாம். சகன் பேசியது முற்றிலும் வேறுபட்ட ஒரு சமூகத்திடம் என்பதை கணக்கில் கொண்டு இதை மதிப்பிடவேண்டும். சுஜாதா அறிவியல் என அதிகமும் முன்வைத்தது தொழில் நுட்பத்தையே.[ Technology ] அறிவியல் முறைமை என வலியுறுத்தியது நிரூபண முறையையே [Empiricism ] இந்தியச்சூழலில், குறிப்பாக தமிழ் சூழலில் இந்தக் கோணமே ஆரோக்கியமானது, அவசியமானது. துளிர் போன்ற குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்களும் கலைக்கதிர் போன்ற அறிவியல் இதழ்களும் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் கோணமும் இதுவே. காரணம் நிரூபண நோக்கின் அடுத்தகட்ட வளர்ச்சியாகவே அறிவியலின் பிற மெய்காண்முறைகள் பரிசீலிக்கப்படமுடியும். தன் படைப்பிலக்கியத்திலும் சுஜாதா இப்பார்வையையே முன்வைக்கிறார். அவர் எழுதிய அறிவியல்க்கதைகளின் முக்கியமான பலம் அறிவியலின் தனி உலகை அதன் மாயங்களை வாசகன் முன் திறந்து வைப்பவையாக அவை உள்ளன என்பதுதான். அவற்றின் பலவீனம், அல்லது அவை சென்றடையாத இடம் என்றால் அறிவியல் அதன் பிரச்சினைகளை வகுத்துக்கொள்ளும் முறை , பிரச்சினைகளை அவிழ்க்கும் முறை ஆகியவை அவர் கதைகளில் சொல்லப்படவோ பரிசீலிக்கப்படவோ இல்லை என்பதுதான்.
சுஜாதாவின் அறிவியல் புனைகதைகளை ‘ உயிர்மை ‘ பதிப்பகம் தமிழில் ஒரே தொகுப்பாக கொண்டுவந்திருப்பது முக்கியமான ஒரு முயற்சியாகும். அறிவியல் புனைகதைகள் நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அடுத்த கட்ட இலக்கியத்தின் முக்கியமான வகைமாதிரிகள். [ பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் அறிவியல் புனைகதைகள் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் இடையே பிறந்த சோரபுத்திரர்கள் என ஒரு மூத்த படைப்பாளி சொன்னார். பிற்பாடு அவரே அறிவியல் கதைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததை வாசித்தேன் ] அவற்றை நோக்கிய நம் பயணத்தின் முன்னோடியான சுஜாதாவின் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொள்வது மிகவும் உபயோகமானதாகும். இந்நூலில் சுஜாதா ஒரு முன்னுரை போல அறிவியல் புனைகதை பற்றிய தன் வரையறையை அளிக்கிறார் . அவரது வரையறை மிகப் பொதுப்படையானதாக உள்ளது என்பது என் எண்ணம். இலக்கியப் படைப்பில் உள்ள யதார்த்தம் மீறிய எல்லா கூறுகளையும் , பிரமிப்பும் வியப்பும் உருவாக்கக் கூடிய அம்சங்களை எல்லாமே , அவர் அறிவியல் புனைகதைக் கூறுகளாக காண்கிறாரோ என்று படுகிறது.
மிகு கற்பனை என்பது எல்லா காலத்திலுமே இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். ஏனெனில் இலக்கியப்படைப்பு புறவய உண்மையை விட மனித மனத்தின் அகவய உண்மையை சொல்லவே எப்போதுமே முயல்கிறது. மனதின் வெளிப்பாடுகளாக மட்டுமே அது புற உலகை பார்க்கிறது. அதாவது இயற்கையில் பிரதிபலிக்கும் மனதைப்பற்றியே அது எழுதுகிறது. மனம் இயற்கையின் பொருண்மை விதிகளுக்கு கட்டுப்பட்டதில்லை. ஆகவே இலக்கியப்படைப்பில் உள்ள இயற்கையும் பொருண்மை விதிகளுக்கு கட்டுப்பட்டது இல்லை. இந்த அம்சம் காரணமாகவே எல்லா இலக்கியங்களிலும் மாயங்கள் இடம் பிடிக்கின்றன. அவை ஒரு தொலைதூரப் பார்வையில் மனதின் மாயங்களே.
மணிமேகலை போன்ற காப்பியங்களின் மிகு கற்பனையைக்கூட சுஜாதா அறிவியல் புனைகதைக் கூறாக காண்கிறார். அவற்றில் அறிவியல் புனைகதையின் விதைகள் உள்ளன என்பது இயல்பே. புஷ்பக விமானத்தை ஓர் அறிவியல் புனைகதைக் கூறாக காண்பதில் தவறில்லை. ஆனால் இலக்கிய விமரிசனத்தில் மேலும் திட்டவட்டமான வரையறைகள் தேவை. அறிவியல் புனைகதை என்பது இந்நூற்றாண்டுக்கு உரிய ஓர் இலக்கிய வடிவம் என்று முதலிலேயே வகுத்துக் கொள்வ்வது அவசியம். ஏனெனில் அறிவியல் நோக்கு என்ற ஒர் பொதுவான பார்வைக்கோணம் இப்போதுதான் திட்டவட்டமாக் உருவாகியிருக்கிறது. அப்பார்வை நேற்றும் – மனித இனம் தோன்றிய உடனேயே – இருந்ததுதான் .ஆனால் அது முதன்மைப்படுத்தப்பட்டது பத்தொன்பது ,இருபதாம் நூற்றாண்டிலதான். புனைவுப்பார்வை என்பது வாழ்க்கையை மனதின் எல்லையற்ற சாத்தியங்களைப் பயன்படுத்தி பெருக்கி வளர்த்துப் பார்ப்பதாகும். ஆகவே அடிப்படையில் அது அறிவியல்நோக்குக்கு எதிரானதாகும். கம்பனிலோ சீத்தலை சாத்தனாரிலோ அறிவியல் புனைகதைக் கூறுகளை காணலாம்.ஆனால் அவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் அறிவியல் சார்ந்தது அல்ல. அறிவியல் புனைகதை என்பது அறிவியல் கோணமானது புனைவுப்பார்வையை சந்திக்கும் ஒரு புள்ளி. அறிவியல் கோணத்தை முற்றிலும் உதாசீனம் செய்துவந்த, அபூர்வமாக மட்டும் தொட்டுக் கொண்டு வந்த புனைகதை உலகம் அதை தவிர்க்கவே முடியாது என்ற நிலையை அடைந்தபோது உருவான இலக்கிய வடிவம் அது.
இவ்வடிப்படையில் பார்த்தால் அறிவியல் புனைகதை என்பதை எப்படி வரையறுக்கலாம் ? சுஜாதா அறிவியலின் ஏதாவது ஒரு கூறு இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலே போதும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார் . நவீனப் புனைகதையானது பல்வேறு அறிவுத்துறைகளிலிருந்து தன் தரவுகளைசெடுத்துக் கொள்கிறது . வரலாறு , அரசியல், சமூகவியல் போன்றவை மட்டுமல்ல உளவியல் , மொழியியல் போன்றவை கூட நவீன இலக்கியத்தில் நேரடியான பாதிப்பை உருவாக்கி இலக்கிய இயக்கங்களையே ஏற்படுத்துவதை நாம் காண்கிறோம். உதாரணமாக ஃப்ராய்டியம் ஓர் அறிவியல் கொள்கைதான். அதன் பாதிப்பு நமது இலக்கியத்தில் மிக வலுவானது. அப்படைப்புகளையெல்லாம் அறிவியல் புனைகதை என்று சொல்லிவிடலாமா ? வரலாற்றாய்வின் விளைவான கொள்கைகள் இலக்கியத்தில் ஆழமான பாதிப்பை செலுத்தியுள்ளன. அவற்றை வரலாற்று இலக்கியங்கள் என்ரு சொல்லிவிடமுடியுமா ? அறிவியலை தன் புனைகதை ஆக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்ட படைப்புகள் அறிவியல் புனைகதைகள் அல்ல என்பதே என் எண்ணம்.
அறிவியல் புனைகதைகளின் மையப்பிரச்சினை ,அதன் கரு, அறிவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும். அப்பிரச்சினை தீர்க்கப்படுவது அல்லது அந்தக் கரு முதிர்ச்சி அடைவதும் அறிவியல் சார்ந்தே இருக்கவேண்டும். அதாவது கருவை உருவகிப்பதிலும் விரிவாக்கம் செய்வதிலும் அடிப்படையான அறிவியல்நோக்கு செயல்பட்டாகவேண்டும். இப்படி சொல்லலாம். ‘ ‘ஓர் இலட்சிய அறிவியல் சிறுகதையானது புனைவு வழியாக முன்வைக்கப்பட்ட ஓர் அறிவியல் ஊகம் ‘ ‘ . அறிவியல் ஊகங்கள் அந்தரத்தில் நிகழ்த்தப்படுவதில்லை. அறிவியல் ரீதியான ஒரு சாத்தியப்பாடு அவற்றுக்கு இருக்கவேண்டும். ஊகங்கள் நிகழ்த்தப்படும் முறைமையும் அறிவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும். அறிவியல் ஊகமானது அறிவியலில் அதற்குரிய நிரூபணத் தருக்க முறைகளை பயன்படுத்தி முன்வைக்கப்படும்போது அறிவியல் புனைகதைகளில் அது புனைவின் தர்க்கத்தைப் பயன்படுத்தி முன்வைக்கபடுகிறது என்பதே வித்தியாசம் . ஆனல் இப்புனைவில் அது அறிவியல் தர்க்கம்தான் என்ற ‘ தோற்றம் ‘ வாசகனிடம் நம்பகத்தன்மையுடன் உருவாக்கவும் படுகிறது.
அடுத்த கட்டமாக சொல்லப்பட வேண்டியது அறிவியல் புனைகதைகளின் அடிப்படையான கருத்தியல் தன்மையை . தத்துவத்தில் , இறையியலில், அரசியலில் பலவகையான பிரபஞ்ச நோக்குகள் உள்ளன. இவற்றை பொதுவாக தரிசனம் என்ற சொல்லாம் நான் குறிப்பிடுவது வழக்கம். உதாரணமாக பிரபஞ்ச இயக்கம் ஒரு சுழற்சித்தன்மையுடன் உள்ளது என்பது சாங்கியம் வழியாக பெளத்தம் வரை வந்து, இன்றும் இந்திய மனத்தில் ஆழமான பாதிப்பு செலுத்தும் கொள்கையாகும். முரணியக்கக் கொள்கை மார்க்ஸியச்சார்புள்ள அனைவரிடமும் செயல்படும் ஒரு பார்வை. இந்தப் பிரபஞ்சப் பார்வைகள் இலக்கியத்தில் ஆழமான பாதிப்பைச் செலுத்துகின்றன. அதேபோல அறிவியலுக்கு அதற்கென்றே ஒரு பிரபஞ்சப்பார்வை உள்ளது. அதை அறிவியல் தரிசனம் எனலாம். என் வாசிப்பில் மிகத்தெளிவான வரையறையை அதற்கு அளித்தவர் கார்ல் சாகன் . இப்பிரபஞ்சம் தர்க்கபூர்வமானது என்பது அதன் முதல் நம்பிக்கை. அத்தர்க்கத்தின் ஒரு பகுதியை நாம் அறிகிறோம், பெரும்பகுதி அறியமுடியாததாக உள்ளது .ஆனால் அறிந்ததன் தர்க்கமுறையை பயன்படுத்தி அறியாததை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு அறியப்படும் உண்மை என்பது அனைவருக்கும் உரியதாக பொதுவானதாக புறவயமானதாகத்தான் இருக்க முடியும். [கார்ல் சகன். புரோக்காவின் மூளை. ]இதுதான் அறிவியலின் அடிப்படைத் தரிசனம் . அறிவியல் புனைகதைகளில் இந்த அடிப்படைத்தரிசனம் புனைவினூடாக பரிசீலனை செய்யப்படுகிறது. அல்லது இந்த அடிப்படைத்தரிசனம் மூலம் மற்ற பிரபஞ்ச நோக்குகள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
ஐசக் அசிமோவின் ஒரு கதையில் மிருகங்கள் ஆழ்துயில் கொள்ளுவதற்கு பயன்படும் ஊக்கியை ஒருவர் பிரித்து எடுத்துவிடுகிறார். அதை மனிதனுக்கு செலுத்துவதன் மூலம் அவனையும் ஆழ்துயிலில் ஆழ்த்த முடியுமென நிரூபிக்கிறார். ஆழ்துயிலில் உடலின் வளர்சிதை மாற்றம் மிகவும் குறைந்து விடுகிறது. ஆகவே பத்து வருடம் ஆழ்துயிலில் இருக்கும் மனிதனுக்கு அவன் உடலின் கணக்கில் ஒரு வருடமே ஆகியிருக்கும். இதை விண்வெளிப்பயணங்களில் பயணிகளுக்கு அளித்து அனுப்பினால் பலநூறு வருடங்கள் அவர்கள் இளமை குன்றாமல் செல்லமுடியும் என்று அறிகிறார்கள். ஒரு ஆட்சியாளர் இம்மருந்தை தண்டனைக்கு பயன்படுத்தலாம் என்று கண்டடைகிறார் . அதன்படி பத்துவருட சிறைத்தண்டனை பெற்றவருக்கு இம்மருந்து அளிக்கப்பட்டால் அவரது உடலின் வளர்சிதை மாற்றம் பத்தில் ஒன்றாக குறைந்து விடுகிறது . ஐந்து வருடம் சிறைத்தண்டனை பெற்றவருக்கு இம்மருந்து அளிக்கப்படுகையில் அவரது உடலின் வளர்சிதை மாற்றம் ஐந்தில் ஒன்றாக குறைந்து விடுகிறது . இப்படி பல படிநிலைகள் . ஒருவரின் வளர்சிதை மாற்றம் பத்தில் ஒன்றாக குறைந்து போகும் போது அவரது மூளை அல்லது மனம், உடல் ஆகியவை பத்தில் ஒரு பங்கு வேகத்துடன் இயங்குகின்றன. அதாவது அவர் வாழும் காலம் பத்தில் ஒருபங்கு குறைவான வேகம் கொண்டது. அவர் காணும் பிரபஞ்சமும் பத்தில் ஒருபங்கு குறைவான சலனநிலை கொண்டது. அவரால் சாதாரண மனிதர்களை அதிவேகமாகப் பறக்கும் பூச்சிகளைப்போலவே எண்ணமுடிகிறது. அவரது காலத்திலும் பிரபஞ்சத்திலும் அவர்கள் இல்லை. இப்படி பல காலங்களில் வாழும் பல மனித அடுக்குகள் கொண்ட ஒரு சமூகம் உருவாகிறது.
ஐசக் அசிமோவின் இந்தக் கதையில் உண்மையில் உள்ள மையம் ‘காலம் என்றால் என்ன ? ‘ என்ற கேள்விதான். அதற்காகவே அந்தக் கதை எழுதப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். மதம். தத்துவம் முதலியவற்றால் உருவகம் செய்யப்பட்டுள்ள காலம் பற்றிய தரிசனங்கள் மீது அறிவியலின் தரிசனம் இங்கே மோதுகிறது. இதற்கு அறிவியல் புனைவு என்ற கூறுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இக்கதையில் ஓர் அறிவியல் ஊகம் உள்ளதை கவனிக்கலாம். மனிதர்களுக்கும் ஆழ்துயில் என்ற கருவானது கிட்டத்தட்ட அறிவியல் கொள்கைபோலவே ஊகிக்கப்பட்டுள்ளது. அது அறிவியல் நிரூபணம் நோக்கிச் செல்வதற்குப்பதிலாக புனைவின் தர்க்கத்தை அடைகிறது. அதேசமயம் படிக்கும்போது அது ஓர் அறிவியல் சாத்தியமே என நம்மை நம்ப வைக்கும் அளவுக்கு முழுமையாக தகவல்களையும் தர்க்கங்களையும் சொல்லி செல்கிறார் அசிமோவ். மனிதர்களின் ஆழ்துயில் என்ற பிரச்சினையானது அறிவியல் ரீதியாக எழுப்பபட்டு அறிவியலின் சாத்தியம் மூலமே கதையில் தீர்க்கவும் படுகிறது.
அறிவியல் புனைகதைகளின் சாத்தியக்கூறுகள் எல்லையற்றவை என்பதை மறுக்கவில்லை . நாம் பொதுவாக நவீனத்தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சிக்கல்கள் மற்றும் வான் ஆய்வின் விந்தைகளையே அதிகமும் அறிவியல் புனைகதைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மருத்துவம் முதல் மொழியியல்கொள்கைகள் வரை அறிவியலின் உலகம் பன்முகம் கொண்டது. அம்முகங்களை அறிவியல் புனைகதைகள் பலவாறாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றின் இயல்புகளுக்கு மேற்கண்ட ஒரு பொது வரையறையை உருவாக்கிக் கொண்டு மீறல்களை மேலும் கூர்ந்து கவனிப்பது நல்லது . இல்லையேல் அறிவியல் புனைகதைகளின் அடிப்படை நோக்கமே இல்லாமல் போய்விடும்.
சுஜாதா தன் கட்டுரையில் உர்சுலா லெ க்வின் எழுதிய ஓரு கதையை அறிவியல் புனைகதை என்கிறார். உருசுலா லெ க்வின் எழுதும் கதைகள் பொதுவாக கவித்துவ உருவகத்தன்மை கொண்டவை. மிகைகற்பனை அழகியல் கொண்டவை. உதாரணமாக ஒரு கதை. ‘சொல் புதிதி ‘ ல் வெளிவந்தது. ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ . இக்கதையில் ஒரு கிராமம் சுட்டப்படுகிறது. அங்கே எப்போதுமே சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிரம்பியுள்ளது. ஆனால் அதன் மைய அரண்மனையின் பாதாள அறையில் ஒரு குழந்தை சிறைப்பட்டுள்ளது. பிறந்தது முதல் சிறையில் இருப்பதனால் மனம் பேதலித்து புண்ணும் சருமநோய்களும் பாதித்து தன்னைப் பார்ப்பவர்களிடமெல்லாம் ‘என்னை திறந்து விடுங்கள் நான் நல்ல குழந்தையாக இருப்பேன் ‘ என்று கெஞ்சுகிறது . ஓமெல்லாஸின் எல்லா இளைஞர்களும் அதை பார்த்தாகவேண்டும். அதைப் பார்க்க வருபவர்கள் மனம் கொதிக்கிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் அக்குழந்தை அங்கே அந்த துயரத்தை அனுபவித்தால் மட்டுமே அந்த நகரம் செழிப்பிலும் வலிமையிலும் சிறந்திருக்கமுடியும் . பெரும்பாலோர் மெல்ல தங்களை சமாதானம் செய்துகொள்கிறார்கள். சிலர் மட்டும் அதை ஏற்கவே முடியாமல் ஓமெல்லாஸை விட்டு வெளியேறுகிறார்கள்.
இந்தக் கதையில் அறிவியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன கலாச்சாரமே குழந்தைப்பருவம் மீது செலுத்தப்ப்டும் வன்முறையின் மீது கட்டப்பட்டது என்ற கருத்து ஃப்ராய்ட் முதல் ழாக் லக்கான் வரை பிரபலமாக உள்ள ஒன்று. அக்கருத்தின் மறு ஆக்கமே இக்கதை.ஆனால் இதை நாம் அறிவியல் புனைகதைகளின் வரிசையில்சேர்க்கக் கூடாது. இதில் அறிவியல் ரீதியான ஊகம் இல்லை. அறிவியலின் தரிசன தளம் பரிசீலிக்கப்படவும் இல்லை. இது கவித்துவக் குறியீடுதான். புதுமைப்பித்தனின் ‘பிரம்மராட்சஸ் ‘ ‘கபாடபுரம் ‘ சுந்தர ராமசாமியின் ‘கொந்தளிப்பு ‘ அசோகமித்திரனின் ‘இன்னும் சில நாட்கள் ‘ ‘பிரயாணம் ‘ போன்ற கதைகள் எல்லாமே இவ்வகைப்பட்டவையே. அறிவியல் புனைகதைகள் இவ்வடிவிலிருந்து திட்டவட்டமாக தங்களை வேறுபடுத்திக் கொண்டுதான் வளரவேண்டும் என நான் நினைக்கிறேன்.
சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள்
============================
சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் பெரும்பாலும் பிரபல வணிக இதழ்களில் , பெருவாரியான வாசகர்களின் ரசனையை திருப்தி செய்யும் நோக்குடன் எழுதப்பட்டவை என்பது அவற்றை வகைப்படுத்தும்போது ஒரு முக்கிய கூறாக நம்முன் வருகிறது . தமிழில் பிரபல வாசகர்களின் மனப்பழக்கம் என்பது படைப்பில் கூறப்படாத எதையுமே வாசிக்க முனையாத வாசிப்புச்சோம்பல் மூலம் உருவானது. எளிமையான கதைகளைக்கூட புரியவில்லை என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். புரியவில்லை என்று சொல்லும்போது அது தன்னுடைய இயலாமையின் விளைவாக இருக்கலாம் என்ற ஐயமே இவர்களுக்கு இருப்பதுமிலை. தன்னுடைய கேளிக்கைக்காக எழுதும் ஒருவர் தன் ரசனைக்கு பிடித்த மாதிரியும் தன் மூளைக்கு எட்டுகிறதுமாதிரியும் எழுதும் கடமை கொண்டவர் என்ற உறுதியான எண்ணம் இவர்களிடம் உள்ளது. ஆகவே கதைக்கருவை தேர்வு செய்வது முதல் கதைகூறுமுறையை வகுப்பது வரை பிரபல எழுத்தாளன் விட்டுக் கொடுத்தபடியே இருக்கவேண்டியுள்ளது.
சுஜாதாவின் இக்கதைகளில் மிகப்பெரும்பாலானவற்றில் கதைக்குள் செயல்படும் மறைமுகக் கதை அல்லது குறிப்புணர்த்தப்படும் கதை என ஏதும் இல்லை என்பதை முக்கியமாக கவனிக்கலாம். கதை முடிந்த பிறகு வாசகனுக்குள் திறக்கும் உலகம் அனேகமாக இல்லை. கதையின் முடிவு அளிக்கும் ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி மட்டுமே பொதுவாக மையப்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் சித்தாந்தங்களையோ , நவீனத்தொழில்நுட்பத்தின் இயங்குமுறைகளையோ விளக்க சுஜாதா தன் கதைகளில் முயல்வதுமில்லை. அவை அவர் உத்தேசிக்கும் வாசகர்களுக்கு தேவையற்ற சுமைகள். இந்த எல்லைக்குள் நின்றபடித்தான் சுஜாதா எழுதமுடிந்துள்ளது.
சுஜாதாவின் இக்கதைகளை நான் மூன்று வகைகளாக பிரிக்கிறேன் . ஒன்று அறிவியல்கூறு ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்படாத நகைச்சுவைக் கதைகள். இரண்டு ஆச்சரியம் அதிர்ச்சி முதலிய உணர்வுகளை உருவாக்கும் மிகை கற்பனைக் கதைகள். மூன்று அறிவியல்ச் சாயல் கொண்ட கதைகள். அல்லது அறிவியல் புனைகதைகளுக்கான சத்தியம் கொண்ட கதைகள் . மூன்றாம் வகைக் கதைகள் குறைவேயாகும். முழுத்தொகுப்பாக இவற்றை படிக்கும் வரை இவை மனதில் வரவும் இல்லை. ஆனால் இந்த சிறிய எண்ணிக்கையான கதைகளில்தான் தமிழ் அறிவியல் புனைகதைகளின் முன்னோடி உலகம் உள்ளது என்று படுகிறது. இவை முன்னோடிகள் என்பதனாலேயே இனிமேல் தமிழில் வரும் அறிவியல் கதைகளில் எல்லாமே இதன் சில அடிப்படைக்கூறுகள் ஆழமானபாதிப்பை செலுத்தும்.
நகைச்சுவைக் கதைகளில் ‘ஒரு கதையில் இரண்டு கதைகள் ‘ அறிவியல் கூறு ஏதுமே இல்லாத கதைதான். இந்தக் காலத்துக்கு லாயக்கில்லாத ஒரு சரித்திர ஆராய்ச்சியாளன் காலத்தால் பின்னகர்ந்து போய் சரித்திரகால நாயகியை அடைகிறான் என்ற கதையில் உள்ளது பகடி மட்டுமே. அவன் அப்படி சென்றதற்கு ஒரு அறிவியல் சாத்தியம் பேருக்குக் கூட கதையில் சொல்லப்படவில்லை .புனைகதையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சாத்தியம் மட்டுமே இக்கதையில் இருக்கிறது. மாறாக ‘ராகவேனியம் ‘ ‘வாட்டர் கார் விவகாரம் ‘ போன்ற கதைகளில் அறிவியலின் ஒரு கீற்று நகைச்சுவையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது அறிவியல் புனைகதைகளுக்கு அவசியமான அறிவியல் தர்க்கத்துடனும் நம்பகத்தன்மையுடனும் இல்லை . உதாரணமாக ‘வாட்டர் கார் விவகாரம் ‘ கதையில் டாக்டரின் கார் அதன் மேலே உள்ள கொள்கலனில் உள்ள தண்ணீர் கீழே உள்ள கொள்கலனுக்கு வேகமாக பாய்வதன் அழுத்தம் காரணமாக ஓடுகிறது . ஆனால் ஆற்றல் அழிவற்றது என எட்டாம் வகுப்பில் படித்த ஒருவரால் இந்த ‘விந்தையை ‘ நம்ப முடியாது. எளிமையாகச் சொல்லப்போனால் கீழ் நோக்கிய அழுத்தமாக ஆவது நீரின் எடையின் ஒரு பகுதிதான். ஒரு பகுதி எடை முழு எடையையும் நகர்த்தாது. ஆகவே அந்த நீர் அதன்மேலேயே இருக்கும்போது கார் சற்றும் அசைய வாய்ப்பில்லை. ‘ராகவேனியம் ‘ கதையில் டாக்டர் ராகவானந்தம் கண்டுபிடித்த உயர் கதிரியக்க பொருள் அடர்த்தியே இல்லாமல் பிளாஸ்டிக் தகடு போல இருக்கிறது. அது வெளித்தூண்டுதலே இல்லாமல் தானாகவே அணுகுண்டு போல வெடிக்கும்தன்மையுடன் இருக்கிறது. இக்காலகட்டக் கதைகளில் சுஜாதா அறிவியல் புனைகதைகளை பொருட்படுத்தி எழுத ஆரம்பிக்கவில்லை என்றுதான் கொள்ளமுடியும்.
ஆனால் இக்கதைகளில் சில அவரது சிறந்த நகைச்சுவைக் கதைகள் என்பதை மறுக்க முடியாது. ‘கம்யூட்டரே ஒரு கதை சொல்லு ‘ இவற்றில் முக்கியமானது. புனைவு என்ற சிக்கலான உயிர் இயக்கம் இயந்திரத்தனமாக ஆகும் செயலில் உள்ள அபத்தத்தை தமிழ் சூழலில் அங்கதமாக முன்வைக்கும் இந்தக் கதை அறிவியல் புனைகதை என்ற அளவில் முக்கியமானதல்ல என்றாலும் நகைச்சுவைக் கதை என்ற அளவில் முக்கியமான ஒன்றாகும். அதேபோல ‘சுல்தான் நீ எங்கே இருக்கிறாய் ? ‘ இதே பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் சொல்லும் நல்ல நகைச்சுவைக் கதை. சிறுவயதில் நான் ரசித்து படித்த இக்கதைகள் இன்றும் ரசிக்கும்படியாக உள்ளன.சமீபத்திய கதைகளில் ‘தருமு மாமா ‘ சிறந்த நகைச்சுவைக் கதையாக இருக்கிறது.
மிகை கற்பனைக் கதைகளில் ‘ஒரே ஒரு வரம் ‘ , ‘வாசல் ‘ போன்றவற்றில் அறிவியல் கூறுகள் எதுவுமே இல்லை. உபதேவர் என்ற ஒரு தேவன் பூமிக்கு வருவதை சொல்லும் கதையான ‘ஒரே ஒரு வரம் ‘ அறிவியலுக்கு எதிரானது என்றே சொல்லலாம். சர்வாதிகாரி செத்துப்போய் நரகத்துக்கு போகும் கதையான ‘வாசல் ‘லும் கூட அறிவியல் கூறுகள் அற்ற கற்பனையே. பல கதைகளை சுஜாதா இவ்வகையில் எழுதி இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ‘யாகம் ‘ அவற்றில் ஒன்று. அது ஓர் அறிவியல் கதை அல்ல. ஆனால் நமது சிறந்த சிறுகதைகளுள் ஒன்று. கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார மீட்பு நவீன யுகத்தில் கொள்ளும் பரிணாமங்களைப்பற்றிய ஆழமான சிந்தனையை உருவாக்கக் கூடிய கச்சிதமான கதை இது.
அறிவியல் கூறுகள் கொண்ட , அறிவியல் புனைகதைகளின் சாத்தியங்கள் கொண்ட கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய இடம் வகிப்பவை எதிர்காலத்தன்மை கொண்ட கதைகள்.[Futuristic Narration ]. பொதுவாக எதிர்காலத்தன்மை கொண்ட கதைகள் எழுத்தளனின் பார்வைக்கோணம் மற்றும் கற்பனை வீச்சு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. அவை அறிவியல் புனைகதைகள் ஆகவேண்டுமானால் இந்த எதிர்காலச்சித்தரிப்புக்கு அறிவியல் ரீதியான தர்க்கம் , விளக்கம் இருக்கவேண்டும். ‘ நேற்றுவரை இன்னின்ன காரணத்தால் இம்மாதிரியான வளர்ச்சிப்போக்கு இருந்தது அக்காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன, ஆகவே இந்த வளர்ச்சிப்போக்கும் தொடரும், இன்னின்ன விளைவுகள் உருவாகும் ‘– இதுதான் அந்த தருக்கம். சுஜாதாவில் சில எதிர்காலத்தன்மை கொண்டகதைகளுக்கு தெளிவான அறிவியல்கூறு உள்ளது . உதாரணம் ‘ ஜில்லு ‘ , ‘சூரியன் ‘ போன்ற கதைகள் .அணுகுண்டு வெடிப்புக்கு பின்பு வெறுமையில் கைவிடப்பட்ட வாழ்க்கை வாழும் அக்காலத்துச் சமூகம் குறித்த இக்கதைகள் தமிழுக்கு மட்டும்தான் புதுமையானவை. இவற்றின் பல்வேறு சாத்தியங்களை மேலைநாட்டு அறிவியல் புனைகதைகளில் நாம் படித்திருக்கிறோம்.ஆனால் தமிழில் அவற்றை தமிழ் கலாச்சார அடையாளங்களுடன் வாசிப்பது ஓர் நல்ல அனுபவமாகவே உள்ளது. மனிதன் இன்று வரை தான் கண்டுபிடித்த ஆயுதத்தை பயன்படுத்தாமல் விட்டதில்லை என்ற தர்க்கமும், பெரும் போர்கள் மற்றும் அழிவுகள் சில அற்ப காரணக்களுக்காக, தனி மனித பலவீனங்களின் விளைவாக நிகழ முடியும் என்ற தர்க்கமும் நேற்றையை வரலாறிலிருந்து நமக்கு கிடப்பவையே.
அறிவியல்கூறு இல்லாத எதிர்காலத்தன்மை கொண்ட கதைகள் என ‘ரூல் நம்பர் 17 ‘ ‘ 2887ல் சில விலாசங்கள் ‘ போன்ற கதைகளை சொல்லலாம். அவை நமக்கு நாளை என்ற அறியமுடியாத பெருவெளி பற்றிய வியப்பையும் பிரமிப்பையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடியவை. அவற்றில் சுஜாதாவின் கதைத் தொழில்நுட்பத்தில் திறன் மட்டுமே வெளிப்படுகிறது . அறிவியல் ரீதியான சாத்தியம் வாசகனை திருப்திசெய்யுமளவுக்கு அளிக்கப்படவில்லை. உதாரணமாக ரூல் நம்பர் 17 கதையில் மூர்க்கமாக விதிகளை நடைமுறைப்படுத்தும் ஓர் அரசு இந்தியாவில் உருவாகி அது மக்கள் தொகையை வன்முறை மூலம் கட்டுப்படுத்தும் சித்திரம் அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கே அப்படி ஓர் அரசு ஏற்படுவதற்கான அறிவியல் சாத்தியம் விளக்கப்படவேயில்லை. அறிவியல் கூறு இல்லாத அல்லது குறைவான இவ்வகைக் கதைகளில் ‘திமலா ‘ , ‘ தமிழாசிரியர் ‘ ஆகிய இரு கதைகளும் சிறுகதைகளாக முக்கியமானவை என்று படுகிறது. கலாச்சார அடையாளங்கள் காலம்தோறும் அடையும் மாற்றங்கள் பற்றிய அறிவியலின் உண்ர்ச்சியற்ற பார்வை இக்கதைகளில் உள்ளது. உள்ளுணர்வு மூலம் நாம் பிணைக்கப்பட்டுள்ள கலாசாரத்தை இப்படி அறிவியலின் அறுவைமேடையில் பரிசோதனைப்பிணமாக பார்ப்பது ஒரு சமன் குலைவையும் தொடர்ந்து கலாச்சார என்றால் என்ன என்ற ஆதாரமான கேள்வியையும் எழுப்புகிறது.
சுஜாதாவின் இத்தொகுப்பில் உள்ள அறிவியல் புனைவுகளில் முக்கியமானவை ‘ஆகாயம் ‘ , ‘அடிமை ‘ . இவ்விரு கதைகளுக்கும் அறிவியல் சார்ந்த விந்தை என்ற அம்சத்துக்கு அப்பால் நகரும் சில மானுடத்தளங்கள் உள்ளன. உதாரணமாக அடிமை கதை முதல் தளத்தில் இயந்திரங்களுக்கும் மனிதனுக்குமான உறவைப்பற்றியதாயினும் ஆழமான தளத்தில் அடிமை கொள்வதற்கான அடக்கி ஆள்வதற்கான மனிதனின் ஆழமான உந்துதலை , அந்த இச்சை சீண்டப்படும்போது அவன்னுக்கு ஏற்படும் பதற்றத்தை சொல்லக் கூடியது. மனிதனின் இந்த இச்சை வரலாற்று ஆழம் வரை செல்லக் கூடியது . மிருகங்களை , சக மனிதர்களை , இயற்கையை அவன் அடிமைகொண்டபடியே இருந்திருக்கிறான். பூரணமான அடிமையை நேசித்திருக்கிறான். அவனுடைய உச்ச கட்ட வன்முறையும் குரூரமும் அடிமை எப்போது தன் ஆட்சியை மீற முயல்கிறானோ அப்போதே வெளிப்பட்டிருக்கிறது . உருவமே இல்லாத இயந்திர ஆளுமை ஆகிய ‘சேகர் ‘ என்ற கணிப்பொறி நிரலை தன் ஆதிக்கத்தை மீறும் அடிமையாகக் காணும் குடும்பத்தலைவனான ஆத்மாவின் உளச்சிக்கலை தீவிரத்துடனும் நுட்பமாகவும் சொல்கிறது இக்கதை. அம்மீறலை ஏன் ஆத்மா அஞ்சுகிறானெனில் தோற்றவன் வென்றவனின் அடிமை என்பதே இந்த ஆட்டத்தின் அடிப்படை விதி என்பதனால்தான்.
வேறு கோணத்தில் பார்த்தால்ஆத்மா அஞ்சுவது எதை என்ற வினா எழுகிறது ? அந்தக் கணிநிரல் சமூகத்தின் தொழில்நுட்பத்தின் தயாரிப்பு. ஆத்மா தனி மனிதன். தன் தனிப்பட்ட அறிவுத்திறனை, ஆளுமைவிரிவை மீறும் சமூக ஆக்கத்தை அவன் அஞ்சுகிறான் என்று சொல்லலாம். எந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு வரும்போதும் இம்மாதிரி ஓர் அச்சம் ஏற்படுகிறது. அறிவியலுக்குஎதிரான நிரந்தரமான குரலாக அது உள்ளது. மனித ஆத்மாவுக்கு எதிரான சாத்தானாக அதை கிறித்தவம் உருவகித்தது . மேற்கத்திய இயந்திரமனிதன் கதைகளில் — குறிப்பாக அசிமோவ் கதைகளில்– இந்த அம்சம் இருந்தபடியே உள்ளது. அதையே அஞ்சுகிறான் ஆத்மா. அந்த ஆதிக்கம் தன் ‘உடைமை ‘ யான மனைவியின் மனம் மற்றும் உடல் மீது நிகழ்வதுதான் அவனை துன்புறுத்துகிறது. இக்கதையின் முக்கியமான பலவீனம் இதன் முடிவுதான். ஆத்மா சேகரை அழிக்கிறான் .ஆனால் அது இக்கதை எழுப்பும் கேள்விக்குரிய விடையல்ல , ஓர் அவசரப் புனைகதை முடிவுமட்டுமே. சேகர் ஒரு தனித்த இயந்திரமல்ல, அது ஒரு கருத்தியல் இருப்பு . அதை ஆத்மா அழிக்கமுடியாது. மறுநாளே நித்யா ஒரு குமாரை வாங்கி வரலாம். அப்பிரச்சினையின் ஏதேனும் ஓர் பரிணாமகட்டத்தில் இக்கதை முடிந்திருந்தால் இதன் முக்கியத்துவம் பலமடங்கு அதிகரித்திருக்கும்.
‘ஆகாயம் ‘ தமிழில் எழுதப்பட்ட முன்னோடியான அறிவியல் சிறுகதை . அறிவியலுக்குள் மானுடமனம் சார்ந்த அடிப்படையான ஒரு சிக்கலை செலுத்தி பார்க்கிறார் சுஜாதா. ஆனந்த், காஞ்சனா, யம் என்ற இயந்திர மனிதன் மூவர் அடங்கிய ஒரு விண்கலனில் ஆனந்த் யம் சுயமாக சிந்திப்பதனால் அது சதி செய்வதாக ஐயப்படுகிறான். அவ்விண்கலத்தில் உள்ள எல்லா தகவல்களும் யம் வழியாகவே பரிமாறப்படுகின்றன. ஆகவே அந்த ஐயத்தை சரிபார்க்க வசதி இல்லை. காஞ்சனாவின் முடிவுதான் நிர்ணாயகமானது. யம் அல்லது ஆனந்த் இருவரில் ஒருவரை அவள் நம்பலாம். இரண்டிலுமே அபாயம் சரிசமம் .அவளது முடிவெடுக்கமுடியாத நிலையை நுட்பமாக சொல்லுகிறது இக்கதை . கலாச்சார வளர்ச்சியின் எந்நிலையிலும் மனிதனிடமிருந்து விலக்கிவிடமுடியாத பொறுப்பு முடிவெடுக்கும் பொறுப்புதான். என்றாவது ஒருநாள் மற்ற அனைத்தையுமே இயந்திரங்கள் செய்யும் என நாம் கற்பனை செய்யலாம். முடிவெடுப்பதை மனிதன் தான் செய்யமுடியும். அதற்கு அவனது கற்பனை உதவ வேண்டும். முடிவெடுப்பதில் அவனது அறவுணர்வு, எதிர்காலம் பற்றிய கனவு, சூழல் பற்றிய புரிதல் , பல்வேறு வகையான உள்ளுணர்வுகள் ஆகியவை பெரும் பங்காற்றுகின்றன. நவீன அறிவியல் சூழலானது அவந் முன் உள்ள தெரிவுகளை மிக மிக சிக்கலானதாக ஆகிவிட்டிருக்கிறது. முடிவுகளை எடுப்பதற்காக அவன் தன்னுள் பூமியின் அனைத்து ஞானத்தையும் சுமந்தாக வேண்டிய தேவை உள்ளது.
இருத்தலியல் சார்ந்த அறிஞர்கள் கீர்கேகர் , சார்த்ர் போன்றவர்கள் நவீன மனிதன் சமூகத்தால் கைவிடப்பட்டு தனிம்னைதனாக ஆனதுமே முடிவெடுக்கும் பொறுப்பு எப்படி அவன்மீது பெரும்சுமையாக படிந்தது என்று விரிவாக விவாதித்திருக்கிறார்கள் .அடுத்தகட்ட பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் தகவல் பெருக்கம் , சாத்தியக்கூறுகளின் பெருக்கம் எவ்வாறு நவீன மனிதனை முடிவெடுக்கவே முடியாதவனாக ஆக்கிவிட்டது என்று விவாதித்திருக்கிறார்கள். நம் கண்முன் குளோனிங் போன்ற விஷயங்களில் அறிவியல் சமூகமே முடிவெடுக்க தத்தளிப்பதைக் காண்கிறோம். உதாரணமாக மரபணுவியலறிஞரான எரிக் லாண்டரின் பேட்டி ஒன்று சொல்புதிதில் வெளிவந்திருந்தது. அதில் அவர் முடிவெடுக்கும் பொறுப்பை மதவாதிகளும் தத்துவவாதிகளும் செய்யவேண்டுமென்று சொல்கிறார். நவீன அறிவியல் முன் நிற்கும் இப்பிரச்சினையை இக்கதை தொடுவதனால் இது விரியும் தளங்கள் பல.
அதைவிடமுக்கியமாக காஞ்சனா எடுக்கும் முடிவு. ‘இரண்டு விரல்களில் ஒன்றை தொடு ‘ . தற்செயலில் , அல்லது முடிவின்மையில் , அதாவது கடவுளில் அவள் முடிவெடுக்கும் பொறுப்பை விட்டுவிடுகிறாள் . விரலைத் தொடுவதற்குப் பதில் திருவுளச்சீட்டும் போடலாம். அறிவின் உச்சநிலையில்கூட அறியமுடியாமை தோன்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை, மனிதனை ஒன்றுமறியாத பேதையாக ஆக்கிவிடுவதைச் சொல்லும் கதை இது. இது முக்கியமான ஒரு தத்துவார்த்த முடிச்சுதான். மனிதனின் மொத்த ஞானமும் சேர்ந்தும்கூட அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று சொல்லித்தரவில்லை என்றால் அவற்றுக்கு அப்பால் உள்ளவற்றை நம்பி அவன் முடிவுகளை எடுப்பானென்றால் ஞானத்தால் என்ன பயன் என்ற வினாதான் அது. கடவுள், மதம் ,மூடநம்பிக்கை மூன்றுமே முளைத்துவரும் புள்ளி . பலவிதமான கோணங்களில் திறக்கும் இக்கதை அடர்த்தியான சித்தரிப்புடன் தொய்வற்ற வாசிப்புத்தன்மையுடன் உள்ளது. சுஜாதாவின் அறிவியல் புனைகதைகளின் உச்ச புள்ளி இதுவே. இங்கிருந்துதான் அடுத்தகட்ட கதைகள் துவங்க முடியும்.
சுஜாதாவின் பாதிப்பு
===============
முன்னோடி என்ற முறையில் சுஜாதா உருவாக்கும் பாதிப்பு முக்கியமானது. மேரி ஷெல்லி போன்ற முன்னோடிகளினால் அறிவியலுக்கும் சாத்தானுக்கும் இடையேயான ஆழமான உறவு மேற்கே அறிவியல் புனைகதைகளில் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. தமிழில் சுஜாதாவைத்தொடர்ந்து அறிவியல் புனைகதைககள் எழுதிய இரா.முருகன் போன்றவர்களிடம் சுஜாதாவின் ஆழமான பாதிப்பு உண்டு. அப்பாதிப்பு என்ன ?
சுஜாதா தன்னை அறிவியலின் தரப்பில் நிறுத்திக் கொள்கிறார் என்பதே முக்கியமானது. அவர் கதைகளில் அறிவியல் பார்வையே ‘செயல்படும் தரப்பாக ‘ உள்ளது. சமூகவியல், வரலாற்றுத்தளங்கள் அதன் ‘ விளைவுக்கு உள்ளாகும் ‘ தரப்பாக உள்ளன. நமது மத நம்பிக்கைகள், கலாச்சாரம் பற்றிய நமது பற்றுக்கள் ஆகியவற்றில் விரிசலிட்டு உள்ளே நுழைந்து பிளக்கும் சக்தியாக உள்ளன சுஜாதாவின் கதைகள். தமிழாசிரியர் போன்ற கதைகள் ‘என்றுமுள தென்றமிழ் ‘ என்ற நம்பிக்கையை தகர்க்கும் நோக்கு கொண்டவை. ‘திமலா ‘ இதேபோல மதம் ஒரு தொல்பொருளாக ஆகும் நிலையை சொல்கிறது. இந்தப்போக்கு நம் அறிவியல் புனைகதைகளில் வலிமையுடன் உருவாகக் கூடும். தத்துவம் , மதம் ஆகியவற்றின் தரப்பில் நின்றபடி அறிவியலின் நம்பிக்கைகளுக்குள்ளும் அதன் பாசாங்குகளுக்குள்ளும் ஊடுருவக்கூடிய , அதன் எல்லைகளை பரிசீலிக்கக் கூடிய அறிவியல் புனைகதைகள் மேற்கே உண்டு. தமிழில் அதற்கான சாத்தியம் சுஜாதாவை மீறியே உருவாக முடியும். அப்போதுக்கூட அம்மீறலில்கூட சுஜாதாவின் பாதிப்பு இருக்கும் – எதிர்மறையாக. அனைத்து தளங்களையும் நம்பிக்கைகள் ஆளும் ஒரு சமூகத்தில் சுஜாதாவின் கோணமே இயல்பானது , உபயோகம் மிகுந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
********************************

No comments:

Post a Comment