Pages

Search This Blog

Tuesday, September 13, 2011

இலக்கியத்தில் மதுவிலக்கு!

தமிழகத்தில் மதுவிலக்குப் பரப்புரை பல கோணங்களில், பல விதங்களில், பல
கட்டங்களில் பலரால் நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

இந்திரன் மதி மயங்கி, அகலிகை கெடுக்கப்பட்டதற்கும் மதுவே காரணம். எவ்வளவு

அறிவுள்ள மனிதனையும் மது முட்டாளாக்கிவிடும். மதுவுக்கு அடிமையாகிவிட்டால்

பிறகு அதிலிருந்து மீள்வது கடினம். சைவம், வைணவம், சமணம், பெளத்தம், இஸ்லாம்,
கிறிஸ்தவம் போன்ற சமயங்கள் யாவும் மதுவைக் கடிந்தன; மதுவிலக்குப் பரப்புரையைச்
செய்தன.


"தமிழ் மறை" என்று போற்றப்படும் திருக்குறள், மனித சமுதாயத்துக்குக் கேடு
விளைக்கும் மூன்று தீமைகளை மிக அழுத்தமாகக் கண்டிக்கிறது. அதாவது இருமனம்
கொண்ட பொதுமகளிர், மது, சூதாட்டம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச்
சீர்மையை அழிக்கும் என்று அந்நூல் கூறுகிறது.

மது குடிப்பதனால் விளையும் தீமைகளைத் திருவள்ளுவர் "கள்ளுண்ணாமை" என்று
தனியொரு அதிகாரத்தில் பத்து குறள்களில் கூறியுள்ளார்.

கள் குடிக்கும் தீய பழக்கத்தை உடையவர்கள் எக்காலத்திலும் புகழை இழப்பர்.
எப்போதும் கள் மயக்கத்தில் இருக்கும் அவர்களைக் கண்டு பகைவர்களும்
பயப்படமாட்டார்கள். அறிவும் ஆற்றலும் உயர்ந்த பண்புகளும் மிக்க சான்றோர்களின்
நல்ல மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் வேண்டுமானால் கள் குடிக்கலாம் என்பதை,


"உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
 எண்ணப் படவேண்டா தார்." (குறள் - 922)

எனும் குறளில் கூறுகிறார்.

மது குடிப்பவரைப் பார்த்தால் பெற்ற தாயின் முகமே துன்பமடையும். உறங்கியவர்கள்,
இறந்தவர்களைவிட வேறுபட்டவர் ஆகமாட்டார்கள். அதேபோல் மது குடிப்பவரும் அறிவு
மயங்குகின்ற காரணத்தால் நஞ்சு குடிப்பவரிலிருந்து வேறுபட்டவர் இல்லை என்கிறார்.


சமண சமயத்தைத் சார்ந்த பவணந்தி முனிவர் இயற்றிய "நன்னூல்" எனும் இலக்கண நூலில்
மது அருந்துகின்றவர்கள் கல்வி அறிவைப் பெறுவதற்கு உரியரல்லர் என்கிறார்.

"களிமடி மானிகாமி கள்வன்" போன்றோர் கல்வி பெறுவதற்குரியராகார் என்கிறார். கள்
உண்பவன் "களி" எனப்படுவான். மாணவர் ஆவதற்குத் தகுதியற்றவர்களில் முதல்
வரிசையில் முதலாகக் கள் உண்பவனை வைக்கிறார். இதன் மூலம் மதுவிலக்குப்
பரப்புரையில் நன்னூலார்க்கும் ஆர்வம் இருந்தமையை அறிய முடிகிறது.
சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்ட பெளத்த சமயத்தைச் சார்ந்தது மணிமேகலை.

இந்நூல்;

   - கள் உண்ணாமை
   - பொய் உரையாமை
   - கொலை செய்யாமை
   - களவு செய்யாமை
   - தீயநடத்தை (விபசாரம்) செய்யாமை

ஆகிய ஐந்தையும் "பஞ்சசீல"க் கொள்கை என்கிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரையின் கணவன் சாதுவன் "மது" எனும் அரக்கனை
இம்மாநிலத்தினின்றும் அகற்ற முயன்றான். ஒருநாள் கப்பலில் அவன் வங்க
நாட்டுக்குச் செல்லும்போது, நடுக்கடலில் கப்பல் சிதைந்து தாழ்ந்தது. கடலில்
மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. அதைப் பற்றிக்கொண்டான். சில
நாள்களுக்குப் பிறகு நாகர் வாழும் தீவில் அக்கலம் அவனை கொண்டுவந்து சேர்த்தது.


சாதுவனின் நிலை கண்ட நாகர் தலைவன் அவனுக்கு கள்ளும், ஊனும் கொடுக்கும்படி
நாகரைப் பணித்தான். அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக்கிட்டான். இரு கைகளாலும்
காதுகளைப் பொத்திக்கொண்டு "ஐயனே! கள்ளும் ஊனும் வேண்டேன்" என்று உறுதியாக
உரைத்தான். அவ்வுரையைக் கேட்ட தலைவன் வியப்படைந்து, "கள் என்ற சொல்லைக்
கேட்டபொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ! நாவுக்கினிய ஊனையும், கவலையை
ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ!" என்று வெகுண்டு வினவினான். அதுகேட்ட சாதுவன்
மதுவின் தீமையைக் நாகர் தலைவனுக்கு மனங்கொள்ளுமாறு எடுத்துரைக்கிறான்.

"ஐயனே! மானிடப் பிறவியில் நாமடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச்
செல்வமே ஆகும். அவ்வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் அவற்றைப்
பகுத்துணர்கின்றோம். இத்தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதைக்
கெடுக்கின்றவர் கீழோராவர். மது நம் அறிவை மயக்குகிறது; நாளடைவில் அதைக்
கெடுத்து விடுகிறது. செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்று பகுத்தறியும்
திறமையை இழந்து விட்டால் மாலுமி இல்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி
கெட்டொழியும்," என்று சாதுவன் எடுத்துரைத்தான். உயிர்க்கு உறுதி பயக்கும்
உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்.


கம்பராமாயணத்தில் மது உண்டு மயங்கிய சுக்கிரீவன், தன் நிலைமைக்கு இரங்கிப்
புலம்புகிறான். ஒன்பது பாடல்களில் கம்பர் மதுவினால் ஏற்படும் விளைவுகளைச்
சுக்கிரீவன் கூற்றாகக் கூறியிருக்கிறார். வேதங்களும் சாத்திரங்களும் மதுவினால்
ஏற்படும் விளைவுகளைச் சொல்லியுள்ளன. அவற்றை எல்லாம் உணராமல் இருந்தது முதல்
குற்றம் என்றும், அதன்மேலும் மதுவைக் குடித்தது இரண்டாவது குற்றம் என்றும்
சுக்கிரீவன் கருதுகிறான்.
1741ல் மது விலக்குச் சட்டம் புதுவையில் பிரெஞ்சு அரசால் கொண்டு வரப்பட்டது.
"மதுவிலக்குப் பரப்புரை" என்பது தமிழ் நாட்டில் புதிதாகத் தோன்றியதொன்றன்று
என்பதைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழர்கள்
எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை.

தாங்கள் சென்ற இடங்களில் மதுவிலக்குப் பரப்புரையையும் மேற்கொண்டனர் என்பதை
சாதுவன் வரலாற்றால் அறிந்துகொள்ள முடிகிறது.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான இடுகை

இன்றும் உள்ள சமூக அவலத்தை இலக்கியங்கள் வழி எடுத்தியம்பி, வகைப்படுத்தி வன்மையாக சாடியமை பாராட்டுக்குரியன.

விழிப்புணர்வளிக்கும் இடுகை.

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் தமிழாசிரியரா..?
கல்வி என்று சுயவிவரத்தில் குறித்திருக்கிறீர்களே..

தங்களைப் பற்றிய சிறுகுறிப்பை வலைப்பக்கதில் தந்தால் தங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் அன்பரே.

Post a Comment