தமிழகத்தில் ஓய்வூதியப் பணத்தை வாங்க, வங்கிகளை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வங்கி பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை தேடிச் சென்று, அவர்களிடம் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
பயோ மெட்ரிக் ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, ஓய்வூதியம் வழங்கும் முன்னோடி திட்டம், கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார் கோவில் தாலுகா, திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை தாலுகா, கன்னியாகுமரி மாவட்டத்தில், தோவாளை தாலுகா ஆகிய, மூன்று இடங்களில் செயல்படுத்தப்படுகிறது திட்டத்தின்படி, மாதாந்திர ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளிகளின் பெயரிலும், வங்கிக் கணக்கு துவங்கப்படும்.
பயனாளிகளின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட, பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு' அட்டையை பயன்படுத்தி, வங்கி பணியாளர்கள், பயனாளிகளின் கிராமங்களுக்கே சென்று ஓய்வூதியப் பணத்தை வழங்குவர். இந்த மூன்று தாலுகாக்களைச் சேர்ந்த 268 கிராமங்களில், 24 ஆயிரத்து நான்கு பயனாளிகள் உள்ளனர். இவர்களில், இந்தியன் வங்கி மூலம் 8,448 பயனாளிகளும், எஸ்.பி.ஐ., 6,646, ஐ.ஓ.பி., 4,848, பேங்க் ஆப் இந்தியா 2,572, கனரா வங்கி மூலம் 1,490 பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவர். இச்சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கியும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கிராமங்களில் சேவையைத் துவங்க, வங்கி சேவையாளர் இணை அமைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வங்கி பணியாளரும், பயனாளிகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள, ஜி.பி.ஆர்.எஸ்., இணைப்பு மற்றும் அச்சு இயந்திரத்துடன் கூடிய சேவைக் கருவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர், பயனாளியின் ஸ்மார்ட் கார்டு அட்டையை, இயந்திரத்தில் செலுத்தி, பயனாளியின் விரல் ரேகையை இயந்திரத்தில் சரிபார்த்து, அதன்பின் பணம் வழங்குவார்.
ஓய்வூதியப் பணம் முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ பெறலாம். மீதமுள்ள பணத்தை, அடுத்த மாதத்தில் பெறலாம். இறுதியில், பயனாளியின் கணக்கில் எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என்ற விவரம், அச்சுப்பொறி மூலம் கணக்குச் சீட்டு வழங்கப்படும்.
இத்திட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஏழு பேருக்கு ஸ்மார்ட் கார்டு அட்டையை வழங்கினார். அப்போது, முதல்வர் பேசும்போது, ""ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிரமங்கள் எல்லாம் களையப்பட்டு, பயனாளிகள் இருக்கும் இடங்களுக்கே சென்று, வங்கி பணியாளர்கள் நேரில் ஓய்வூதியப் பணத்தை வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. "ஸ்மார்ட் கார்டு' மூலம் பயனாளிகள், இந்த மாதமே ஓய்வூதியம் பெறலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment