Pages

Search This Blog

Wednesday, September 21, 2011

பசுமை புரட்சி தமிழகத்திலிருந்து தொடங்கட்டும் - நடிகர் விவேக்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை நடிகர் விவேக் சந்தித்து பேசியபோது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் 'பசுமை கலாம் திட்டத்தை' தொடங்கியுள்ளார்.

முதல்கட்டமாக சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எக்ஸ்னோரா அமைப்பு, விவேக் நற்பணி மன்றம் மற்றும் அமெரிக்கன் கண் மருத்துவ மையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு, பசுமை கலாம் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அவர் பேசுகையில், "பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் பசுமை புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாட்டில், நீர் வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும்.

நாட்டில், விவசாயம், மண் வளம், ஆக்சிஜன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் திட்டம் தொடங்கப்பட்டது.

கோவையில் 23-ந் தேதி...

சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். வரும் 23-ந் தேதி கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 25-ந் தேதி சேலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும்.

அதன்பிறகு, வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வொரு ஊராக இந்த திட்டம் நிறைவேற உள்ளது. இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக் கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டுவைப்பார்.

வீட்டுக்கு இரண்டு மரம்....

ஒவ்வொருவரும் வீட்டில் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்தில் இருந்து பசுமை புரட்சி தொடங்க வேண்டும்," என்றார். 

1 comment:

SURYAJEEVA said...

நல்ல விஷயம்

Post a Comment