Pages

Search This Blog

Tuesday, September 20, 2011

என் அம்மாவின் எட்டு பொய்கள் --மஹிமா





 
 
 
நான் ஏகிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.
அவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா! இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.
இது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்...


அம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.
ஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.
மற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே! நீயே சாப்பிடு! எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.
இது அவளது இரண்டாம் பொய்....


பிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.
ஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி அடுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.
அவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்றாள்.
இது அவளது மூன்றாம் பொய்.....


நான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.
பரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.
அம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.
“நீயே குடி! எனக்குத் தேவையில்லை” என்பாள்.
இது அம்மாவின் நான்காம் பொய்......


என் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.
இது அவளுடைய ஐந்தாவது பொய்.......


படிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.
நான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.
இது அவள் சொன்ன ஆறாவது பொய்........


நான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.
அம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.
இது அவளுடைய ஏழாவது பொய்.........


முடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.
என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே! எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய் நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்..........


அம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும் அடங்கும்.

No comments:

Post a Comment