Pages

Search This Blog

Sunday, January 01, 2012

ஆங்கில புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்    2012  தேசியம்

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  கவர்னர் ரோசய்யா: அனைத்து மக்களுக்கும் எனது இதயப் பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டில் அமைதியும், நல்ல வளமும் செழித்தோங்க வாழ்த்துகிறேன். எல்லா வளர்ச்சியையும் பெற்று, நாடு முன்னேற்றமடைய நாம் பாடுபடுவோம். முதல்வர் ஜெயலலிதா: தமிழகம் அனைத்து துறைகளிலும்  முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது. மக்களுக்கு சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும்  மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும்.  இந்த இனிய புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி: தமிழக மக்கள் வளம்பெற தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றிகண்ட மனநிறைவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த வேளையில், தேனும் பாலும் பெருக்கெடுத்து தெருவெங்கும் ஓடும் எனும்  எதிர்பார்ப்போடு ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. பால்விலையை உயர்த்தி, பஸ் கட்டணத்தை உயர்த்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்த பல்வேறு திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்கு முறை போக்குகள் மாறிட வேண்டும். ஏழை, எளியோர் நலம் பெற திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும், மின்சார தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்.அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விஜயகாந்த் (தேமுதிக): 2011ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளன. மாநில அரசு பஸ், பால் கட்டண உயர்வு, வரி உயர்வு செய்துள்ளது. மத்திய அரசு  பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் தீவிர புயலும் தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2012ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வர வேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன்னேற்றத்தையும் தர வேண்டும். இந்த புத்தாண்டு நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். ஞானதேசிகன் எம்.பி (காங்கிரஸ்): புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டில் எல்லா நலமும், வளமும் தமிழக மக்கள் பெற வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி குறைந்து ஒரு பொது பிரச்னையில் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும். இந்த புத்தாண்டில் இவையெல்லாம் நடைபெற வேண்டும் என கூறி இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): மத்திய  மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தி இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அழைக்கிறது.  அனைத்துப் பகுதி மக்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். வைகோ (மதிமுக): தமிழகத்தின் உரிமையை காக்க கட்சி, ஜாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் எழுந்துள்ள நிலைமை எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை ஊட்டுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் போற்றி வந்த அறமும், நெறியும், மனிதநேயமும் நமது கருவூலமாகும். ஆனால், அதை மறந்து பல்வேறு கேடுகள் சமுதாயத்தின் அனைத்து பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணமாக இருக்கிறது. இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னதநிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழத் தமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலர, ஊழலற்ற அரசியல் வெற்றி காண 2012ம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.ராமதாஸ் (பாமக): புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் 2012ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிற அனைத்து மக்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சரத்குமார் (சமக):   வரும் புத்தாண்டு அனைத்து  சோதனைகளையும் வென்று சாதனை படைக்கும் ஆண்டாக அமைய வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த வகையிலும், அச்சுறுத்தல் இல்லாத வகையில் மாநிலங்களுக்கிடையே நல்லுறவு, மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.  வீரமணி (திராவிடர் கழகம்): 2011 பல்வேறு அதிர்வுகளையும், வேதனைகளையும் மக்களுக்கு தந்த சோதனை மிக்க ஆண்டாக அமைந்தது. வரும் புத்தாண்டு அனைவருக்கும் அனைத்தும் தரும். அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அமையட்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜவஹர் அலி (இந்திய தேசிய முஸ்லிம் லீக்):  புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும். சமூகசமய நல்லிணக்கம் தொடர உறுதி ஏற்போம். மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவட்டும். ஏழை, எளிய மக்களும் சமூகத்தில் நலிவுற்றவர்களும் வாழ்க்கையில் ஏற்றமடையை உதவிகள் செய்ய உறுதி ஏற்போம். நாட்டில் அமைதியும் முன்னேற்றமும் நிலவ உறு துணையாக இருப்போம்.இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் உட்பட பல தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment