கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று கோவை வந்தார். நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். அங்கு படிக்கும் மாணவர்கள் சுந்தரம், ரகு ஆகியோருக்கு 2 லேப்-டாப்கள் வழங்கினார்.
இதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சிறப்பாக நடத்தி வரும் யுனைடெட் நிர்வாகி ராதாகிருஷ்ணனின் சேவையை பாராட்டி விருது வழங்கினார். அப்போது விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது ரசிகர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர். நண்பன் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். நண்பன் படத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என்னுடன் நடித்த ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நண்பன் படத்தில் சத்யராஜுடன் நடிக்க அழைப்பு வந்தது. அவர் புதுவிதமான வில்லன் கேரக்டர் செய்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காஸ் மோஸ் வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவர் சண்முகம், மாவட்ட விஜய் தலைமை இயக்க தலைவர் சம்பத்குமார், இளைஞரணி தலைவர் யுவராஜன், மாநகர தலைவர் பாபு, ராஜ்குமார், மதுக்கரை பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவிக்க கோவையில் உள்ள அர்ச்சனா தியேட்டருக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை சென்ட்ரல், கனகதாரா தியேட்டருக்கு சென்று ரசிகர் முன் தோன்றி நண்பன் படத்துக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment