Pages

Search This Blog

Tuesday, August 13, 2013

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு


 

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4.50 லட்சம் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திராவில் தொடங்கியது. இதனால் ஆந்திரா முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1ம் தேதி முதல் ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ந்து பந்த் நடந்து வருகிறது. 14 நாட்களாக கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரசு ஊழியர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன.காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிவித்த தெலங்கானா முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடின்றி 12ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடலோர ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் சில மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு சிலர் மட்டுமே ராஜினாமா செய்ததாலும், மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை பிரிக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிமுதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 123 அரசு பணிமனைகளில் சுமார் 13 ஆயிரம் அரசு பஸ்கள் நள்ளிரவு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பணிமனைகளுக்கு பூட்டு போடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 70 ஆயிரம் பேர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று அதி காலை முதல் நிறுத்தப்பட்டது.

இதனால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.திருப்பதி&திருமலைக்கு இடையே எப்போதும் இல்லாத வகையில் நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையிலிருந்து கைக்குழந்தை மற்றும் முதியோர்களுடன் திருப்பதிக்கு நடந்தே வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கிய காலவரையற்ற இப்போராட்டத்தில் 4.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தினால் அனைத்து அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளது. கருவூல துறை அதிகாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நாளொன்றுக்கு சுமார் 150 கோடிவரை பண பரிமாற்றம் முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீமாந்திரா பகுதியில் 24 மணிநேரம் பெட்ரோல் பங்க்குகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டது.

 இதனால் 13 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல், டீக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. காய்கறி, பால், குடிநீர், மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஒரு வார காலத்துக்குள் தெலங்கானா குறித்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.

பஸ்களுக்கு தீவைப்பு
விஜயவாடாவில் உள்ள அரசு பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பஸ்களுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பஸ்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

No comments:

Post a Comment