Pages

Search This Blog

Sunday, July 31, 2011

2013-ல் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு

2013-ம் ஆண்டில் தொழிற் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படும், இது எனது கனவு என்று மத்திய தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள், பொறியியல் படிப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.2013-ம் ஆண்டில் இதை செயல்படுத்த வேண்டும் என்பது எனது கனவாகும். இவ்வாறு ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் நன்கொடை கட்டணம் இருக்காது. 

இதனால் மாணவர்களுக்கு தொழில் படிப்புப் படிக்க பணம் தடையாக இருக்காது. இதனால் மாணவர்களுக்கு உளபூர்வமாக ஏற்படும் பாதிப்பு நீக்கப்படுவதோடு, மன அழுத்தமும் ஏற்படாது.இத்திட்டம் தொடர்பாக ஆலோசித்து அறிக்கை அளிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டி.ராமசாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவுத் தேர்வு நடைமுறை தொடர்பாக மறு ஆய்வு நடத்த அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ராமசாமி குழு தனது ஆலோசனையை முடித்துள்ளது. அவரது குழு அறிக்கை பரிசீலனைக்கு பல்வேறு தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை பரிசீலித்த 80 சதவிகிதம் பேர் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் எதிர்ப்பு: இத் திட்டத்துக்கு தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் தமிழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஒரே நுழைவுத் தேர்வு தற்போதைய தேர்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 

ஒவ்வொரு மாணவரும் அவர் தேர்வு செய்யும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும். நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சிஎன்ஆர் ராவும் பரிந்துரை அளித்துள்ளார்.மக்களவை மழைக் கால கூட்டத் தொடரில் தேசிய அங்கீகார ஒழுங்குமுறை ஆணைய மசோதா, கல்வி முறைகேடு தடுப்பு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment