Pages

Search This Blog

Saturday, July 30, 2011

கல்வித்தளத்திலும் சேரிகளை கட்டமைக்க வேண்டாம்

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள 1294 உண்டு உறைவிடப் பள்ளி விடுதிகளில், 1,059 விடுதிகள் அடிப்படை வசதிகளற்ற, மிக மோசமான நிலையில் இருப்பதை உறுதி செய்து கொண்ட இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.76.33 கோடி செலவில் அவற்றை உடனடியாகப் புதுப்பித்து மேம்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் விரைவில் 1,200 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த நடவடிக்கைகள் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்குத் தாற்காலிகமாக உதவலாமே தவிர நீடித்த, குன்றாத பயனைத் தருமா என்பது, இது காறும் உள்ள மோசமான வரலாற்றின் அடிப்படையில் எழும் நியாயமான ஐயப்பாடு. ஆதிதிராவிட நலப் பள்ளிகளும், வனப் பள்ளிகளும், அவற்றோடு இணைந்த உண்டு உறைவிட விடுதிகளும், சமூகத்தின் விளிம்பு நிலை மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்குப் படிக்கற்களாக இல்லாமல் தடைக்கற்களாக இருப்பதுதான் கசப்பான உண்மை.

சமூகத் தளத்தின் பிரதிபலிப்பாக, கல்வித் தளத்தில் வலுவாக எழுப்பப்பட்ட சேரிகளாக இவை நடைமுறையில் உள்ளன. ஆதிதிராவிட, பழங்குடியின சமூகங்களின் கல்வி மேம்பாட்டுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 29(1),46,15(4), 350ஏ ஆகிய ஷரத்துக்கள் வாயிலாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வுண்மையை வசதியாக மறந்துவிட்டு அல்லது பொருள்படுத்தாமல், இது ஏதோ அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும் சலுகை, இலவசம் என்று கருதும் ஆதிக்க மனநிலையே, ஆட்சியாளர்களிடமும், மற்ற எல்லோரிடமும் பொதுபுத்தியாக ஊறிக்கிடக்கிறது.இதன் வெளிப்பாடாகத்தான், ஆதிதிராவிட நலத்துறையில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை, பள்ளிகளிலும், விடுதிகளிலும், கட்டமைப்புகள், பராமரிப்பு, மேற்பார்வை, ஆய்வு மாணவர்களைப் பொதுவாக நடத்தும் விதம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, கல்வி ஊக்கத்தொகை உள்பட எல்லாவற்றிலும் உச்சகட்ட அலட்சியமும், அதிகபட்ச வெளிப்படையான ஊழல் கொள்ளையும், தட்டிக்கேட்க யாருமில்லாமல் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. கழிப்பிடம், குடிநீர், உணவு, சீருடை, ஏன் இரவில் சிறுவர், சிறுமியர் உறங்குவதற்காக வழங்கப்படும் பாய் உள்பட இத்துறையின் எந்த ஓர் அம்சத்திலும் தரநிர்ணயம் என்பது எள்ளளவும் கிடையாது. இவ்வளவு ஏன், ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக ஆசிரியர்கள் நியமனம் 
 நடைபெறும்போது, தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள் பொதுவாக அரசுப் பள்ளிகளுக்கும், கடைசியில் எஞ்சியவர்கள், ஆதிதிராவிட, பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கும் தெரிவு செய்யப்படும் மோசமான பாகுபாடு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்பள்ளிகளும், விடுதிகளும் கல்வித்துறை தொடர்போ, அனுபவமோ இல்லாத வருவாய்த் துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் ஆகியோரின் அதிகாரத்துக்குள் வருவதால், அவர்களுக்கும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் நடுவில் புரிதல் அறவே இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியரால் நேரடிக் கவனம் செலுத்த முடியாது.

மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளால், இத்துறை தொடர்பான பல்வேறு அலுவல்களுக்கிடையே, இப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதும், ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்து அளிப்பதும் இயலாத, விரும்பாத, பொருந்தாத ஒன்றாகி விடுகிறது.ஆண்டுக்கு ஒரு முறைகூட, இப் பள்ளிகள் மாவட்ட அலுவலர்களாலோ, வட்டாட்சியர்களாலோ ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதில்லை. கல்வியை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யாமல், ஆசிரியர்கள், வார்டன்கள் ஆகியோரைப் பணி அமர்த்துதல், பதவி உயர்வு, பணி மாற்றம், மாணவர் தேர்ச்சி இல்லை என்றுகூறி, ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்குதல் ஆகிய அதிகாரங்களைக் கோலோச்சுவதும், ஒவ்வொரு வகையிலும் மாமூல் வசூலிப்பதுமே இவர்களின் ஒரே வேலையாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

எல்லா அதிகாரங்களும் வருவாய்த் துறை அதிகாரிகளிடமும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடமும் உள்ளதால், இவர்களுடன் இணைந்தோ, இவர்களைத் தாண்டியோ, கல்வித் துறை அதிகாரிகளால் கல்விசார்ந்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக இப் பள்ளிகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க முடிவதில்லை.சீருடை, புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என்று எல்லாமே மிகமிகத் தாமதமாகத்தான் ஒவ்வோராண்டும் பள்ளிகளைச் சென்று சேர்கிறது. நோட்டுப் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். 

தப்பித்தவறி நோட்டுப் புத்தகங்கள் கிடைத்தால், தேர்வில் பதில் எழுதத் தேவையான விடைத்தாள்கள் இல்லாமல், நோட்டுப் புத்தகங்களைக் கிழித்து விடைத்தாள்களாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக இம் மாணவ, மாணவிகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்.

இதன் விளைவாக உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சோதித்து சீர் செய்தால் மட்டுமே அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இப் பள்ளிகளில் முறையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதில்லை. அரவிந்தர் கண் மருத்துவமனையின் மருத்துவர் கூறும்போது, தலித்து பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில், 20 விழுக்காட்டினருக்காவது பார்வைக் குறைபாடு இருக்கும் வாய்ப்புள்ளது, மற்ற சமூகத்தினரைவிட இது அதிகம், இப்பள்ளிகளில், ஆண்டுத் தொடக்கத்திலேயே, கண் மருத்துவ முகாம் நடத்தி, குறைபாடுகளைக் கண்டறிந்து, களையவில்லையென்றால், பல மாணவ, மாணவிகள் ஆண்டு முழுவதும் கரும்பலகையில் என்ன எழுதப்படுகிறது என்று தெரியாமலே, "மக்கு'ப் பட்டம் வாங்கிக் கொண்டு அவதிப்படும் நிலை ஏற்படும் என்கிறார். 

ஆனால், இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நிர்வாகம், தேர்ச்சி விகிதம் சரியாக இல்லாத பள்ளிகளில், ஆசிரியர்களைப் பலிகடா ஆக்குவதுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறது. இவையெல்லாம், விளக்கப்பட்ட ஒரு சில பிரச்னைகள்தான், விளக்கப்படாத தடைக்கற்கள் ஏகப்பட்டவை. இன்றைக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், ஜாதி வன்கொடுமைகளும், கிராமங்கள்தோறும் நிரந்தரமாகிவிட்ட தலித்து காலனிகளும், சேரிக்கும் ஊருக்கும் நடுவே திடீரென்று முளைக்கும் தீண்டாமைச் சுவர்களும்தான் வளர்ந்து வரும் தமிழகத்தைப் பிரித்தாளும் கொடுவாள்கள்.

இன்றைய ஜாதிய, வர்க்க வேறுபாடுகள் களையப்படுவதற்கான ஒரே வழி, எல்லோருக்கும் தரமான, இலவசமான, சமச்சீரான, கட்டாயக் கல்வியை வழங்கும் சமத்துவமான பொதுப்பள்ளி முறையே. ஆனால், பள்ளிக்கல்வியில் உச்சகட்ட சமத்துவமின்மையே முகத்தில் அறையும் உண்மை. இந்தப் பின்னணியில், இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதிலும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் என்ற பெயரில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், ஜாதி, இனம் வாரியாகப் பெயரிட்டு அரசே நடத்துவது என்ன பயன்தரும்? இந்த மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய உதவித் திட்டங்கள் தொடரவேண்டியது அவசியம்.

ஆனால், தனிப் பள்ளிகளாகவே தொடர்வது ஆரோக்கியமானதா என்பதைப் பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.ஆதிதிராவிடர் நலப் பள்ளி, கள்ளர் சீரமைப்புப் பள்ளி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுவது பற்றியும், அதனால் உளவியல் ரீதியாக இந்த மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் யாரும் சிந்திப்பதில்லை.

அதனால்தான் இளைஞர்களான பின்பும், கல்லூரி வாயிலில் ஒருவருக்கொருவர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுவதும், ஜாதிச் சங்கங்களில் அதிக ஆர்வம் காட்டுவதும் நடைபெறுகிறது. மேலும், இப் பள்ளிகளை, நலத்துறைகளிலிருந்து விடுவித்து, மற்ற அரசுப் பள்ளிகளைப் போல, கல்வித்துறையின் நேரடி மேற்பார்வையின்கீழ் கொண்டுவந்தால், ஒப்பீட்டளவில் தரம் உயர வாய்ப்புள்ளது. விடுதிகளைப் பொறுத்தவரை, அன்றைக்கு அருகாமைப் பள்ளிகள் கிடையாது,

ஆதலால் பள்ளிகளுக்கு அருகில் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு எங்கும் அருகாமைப் பள்ளிகள் உள்ளன. இலவச பஸ் பாஸ், சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இலவச மதிய உணவு முழுமையாக வழங்கப்படுகிறது. குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் உள்ளது.

இவ்வகைக் காரணங்களால், பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கிப்படிக்க விரும்புவதில்லை. பல விடுதிகளில் மிக மிகக்குறைவானவர்களே தங்கிப் படிக்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லோருமே வீடுகளுக்குப் போய் விடுகின்றனர்.ஆக, உண்டு உறைவிடப் பள்ளிகள் இன்றைக்கு, "பெருச்சாளிகள்' மட்டுமே பல்கிப் பெருகி உண்டு கொழுக்கும் சத்திரங்களாக மாறிவிட்டன. அதாவது, இரண்டுகால் பெருச்சாளிகள் கூட்டுச்சேர்ந்து பொய்யான ஆவணங்களைத் தயாரித்து, திருடி பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே வேலைதான் பெரும்பாலான மாணவர் விடுதிகளில் நடைபெற்று வருகிறது.

எனவே, அவசியமான ஒரு சில ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளையும், பிற்பட்டோர் நலத்துறையின்கீழ் வரும் விடுதிகளையும் மட்டும் ஒருங்கிணைத்து, பொது மாணவர் விடுதிகளாக மாற்றுவது நல்லது. பொது விடுதிகளாக மாற்றப்பட்டால், அவற்றின் பராமரிப்பில் எல்லோருடைய கூடுதல் கவனமும், கூட்டு கவனமும் கிட்டுவதால், தரமும் உயரும். அதோடு, மாணவர்களுக்கிடையில் புரிதலும், ஜாதி தாண்டிய நட்பும் ஏற்படும்.இடஒதுக்கீட்டைத் தாண்டி, ஆதிதிராவிட மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையில் சமூக அளவிலும், கல்வி, வேலை வாய்ப்பு அளவிலும் ஒரே மாதிரியான எதிர்காலச் சவால்களே காத்திருக்கின்றன. பள்ளிக் கல்வியில் அரசு சமத்துவம் கொண்டுவர முனைந்து வெற்றிபெற்றால், தமிழகத்தின் ஜாதி வியாபாரிகள் கடைமூடும் நேரம் வந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

No comments:

Post a Comment