அன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை
வேண்டிக்கொள்கிறேன்.
அன்று,
தாமரைக் குளமும்
பெருமாள் கோயிலும்
பெரிதாய் இருக்கிறதென்று
சொன்னீர்கள்...!
வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும்
சின்ன காய்கறித் தோட்டமும்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!
பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில்
வாழக் கொடுத்து வைக்க
வேண்டுமென்று
வக்கணை பேசினீர்கள்...!
மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!
மாப்பிள்ளையின்
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள்
சம்பந்தி வீட்டு பெருமை...!
மாப்பிள்ளை வீடு
ரொம்ப அழகுதான்
உறவினர்களின் உபசரிப்புக்கும்
ஒரு குறையும் இல்லை...!
இங்கு
நீங்கள்
பார்க்கத் தவறியது
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!
இருந்தாலும் பரவாயில்லை ...
இந்தக் கடிதத்தை
அம்மாவிடம்
படித்துக் காட்டும்போது
அவரோடு நான்
சந்தோஷமாகவே இருப்பதாக
அவசியம் சொல்லவும்...!
No comments:
Post a Comment