Pages

Search This Blog

Wednesday, September 05, 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 32 பேர் பலி ; பலர் படுகாயம்

சிவகாசி : சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பலி வாங்கிய பட்டாசு :
 சிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது மீனம்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 32 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

40 அறைகள் தரைமட்டம் :
 வெடி விபத்தில் 40 அறைகள் தரைமட்டமாயின. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த இடமே புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால், மீட்புப் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மீட்புப் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் :
 விபத்து நடந்த நேரத்தில், பட்டாசு ஆலையில் 260க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

புகை மண்டலத்தில் சிக்கிய புகைப்படக்காரர்கள் :
 இந்நிலையில், வெடி விபத்து நடந்த பகுதியை புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் சிலர் புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தவிர வேடிக்கை பார்க்கச் சென்ற சில பொதுமக்களும் புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 100 அடி உயரத்திற்கும்மேல் புகை சூழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அமைச்சர் விரைவு :

 விபத்து நடந்த பகுதிக்கு செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைந்துள்ளார். சம்பவ பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக முதலுதவி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வெடி விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இது போன்ற விபத்துக்களை தடுப்பதற்கு உரிய கவனம் செலுத்தவேண்டும்.அப்படி செலுத்தி இருந்தால் உயிர்பளிகள் தவிர்த்திருக்கலாம்

Post a Comment