Pages

Search This Blog

Monday, August 01, 2011

உள்ளாட்சி மன்றங்களில் மக்களாட்சி மலருமா

உள்ளாட்சி மன்றங்கள்தான் ஜனநாயகத்தின் தூண்கள். உள்ளாட்சியில் உண்மையான மக்களாட்சி மலர்வதன் மூலமாகவே ஓர் அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளை, விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்ற முடியும்.

 இந்திய ஜனநாயக அமைப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்க வல்லவர்களாக இருந்தபோதிலும், அவர்களால் ஒரு வார்டின், ஒரு தெருவின், ஒரு கிராமத்தின் பிரச்னைகளை, அவர்களுக்கான மாமன்றங்களில் பேசித்தீர்க்க முடியாது. அவ்வாறு பேசுவதும் ஏற்புடையதாகாது. 

 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறிப்பிட்ட வார்டின், தெருக்களின், கிராமங்களின் வசதிளை மேம்படுத்த, தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது என்றாலும், அத்திட்டங்களை நிறைவேற்ற, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களையோ, மாவட்ட நிர்வாகத்தையோதான் நாடவேண்டும். எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளை, உடனடியாக நிறைவேற்றும் ஆற்றலும் அதிகாரமும், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கே உள்ளது. 

 அத்தகைய மாநகராட்சி, நகராட்சி, உறுப்பினர்களின் இன்றைய நிலையை பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதால், அக்கட்சிக்குக் கட்டுப்பட்டே மன்றங்களில் பேசவோ, முக்கிய பிரச்னைகளில் முடிவு எடுக்கவோ இயலும்.  தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் முறையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர், அக்கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு தலைவராகிறார்.

எனவே அவர் சார்ந்த கட்சிக்கும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கும், உறுப்பினர் கட்டுப்பட்டவராகிறார்.  இதனால் மன்றக் கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசமுடியாமலும் அல்லது எதுவும் பேசாதவராகவும் இருக்க நேரிடுகிறது. மன்றத்தில் பேசாமல், தலைவரை நேரில் சந்தித்து, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், கட்சியில் முக்கியமானவராக இருத்தல் அவசியம். இல்லையெனில், அவரால் தேர்வு செய்யப்பட்ட தலைவரே, அவரைப் பொருள்படுத்த மாட்டார்.

சுயேச்சை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சிக்கு ஒத்துப்போனால் மட்டுமே, தன்னைத் தேர்ந்து எடுத்த மக்களுக்குக் குறைந்தபட்ச நன்மைகளையாவது செய்ய முடியும்.  மாநில முதல்வர், மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தால், உள்ளாட்சி தொடர்பான விஷயங்களில், மாநில முதல்வர், ஆளும் கட்சி எடுக்கும் முடிவுகளை, செம்மறி ஆட்டுக் கூட்டம்போல், மன்றத் தலைவர் முதல் அவர் சார்ந்த கட்சி உறுப்பினர்கள் வரை, தலை அசைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இங்கே எதிர்க்கட்சி உறுப்பினர்களின், நியாயமான கருத்துகள்கூட எடுபடுவதில்லை. விளைவு, நகர மக்களின் உணர்வுகளை, உள்ளாட்சி மன்றங்களில் பிரதிபலிக்க முடியாமல் போகிறது.  உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் மன்றங்களாக இருப்பதே ஜனநாயகத்தின் மாண்பு. அதுதான் உண்மையான ஜனநாயகம். 

 நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதே உண்மையான மக்களாட்சியாகும். தற்போதைய அரசியல் அடிப்படையிலான தேர்தலில், சமூக நலனில் அக்கறை கொண்டோர், பொதுநலவாதிகள், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் கொண்டோர், போட்டியிட்டு உறுப்பினராக முடியாமலும், வெற்றி பெற்றாலும் மன்றத்தில் செயல்பட முடியாத நிலையும் இருக்கிறது.

அடியாள்களும், ரெüடிகளும், தாதாக்களும், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும், தங்கள் கொடியை உயர்த்திப் பிடிக்க, சட்டவிரோதமாகச் சம்பாதித்த பொருளைப் பாதுகாத்துக்கொள்ள, புகலிடம் கருதி, அரசியலில் அடியெடுத்து வைக்கும் முதல்படி உள்ளாட்சி உறுப்பினர் தேர்தல்தான்.  அறிந்தோ அறியமாலோ, ஏதோ காரணங்களுக்காக அரசியல் கட்சிகள், வேட்பாளராகத் தேர்வு செய்யும்போது, மக்கள் ஏதேனும் ஒரு தாதாவுக்கோ, ரெüடிக்கோதான் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 மாநகராட்சி, நகராட்சி வார்டு என்ற சிறிய வட்டத்துக்குள்கூட, மக்கள் எதிர்பார்க்கும் நல்லவர்களை, உண்மையான பொதுநலத் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை, 21-ம் நூற்றாண்டிலும் நீடிக்கிறது.  மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருக்கட்டும். ஆனால், உறுப்பினர்கள் மக்களுக்கு உழைப்பவர்களாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அரசு இத்தகைய சிந்தனைகளை கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment