Pages

Search This Blog

Thursday, August 18, 2011

கக்கனை அவமானப்படுத்திய காங்கிரஸார்!

ஞ்சம், நேர்மையின்மை, செயலற்ற தன்மை, சுயநலம்… இவைதான் இன்றைக்கு அரசியல்வாதிக்குரிய பொதுவான இலக்கணமாகிவிட்டது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக வாழ்ந்த சில தலைவர்களும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.
p071299d
அப்படிப்பட்ட நல்ல தலைவர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது வழியில் நடைபோட்ட இன்னொரு தலைவர் கக்கன்.
அப்பழுக்கற்ற, எளிமையான தூய அரசியல்வாதியாக திகழ்ந்து மறைந்த கக்கனின் நூறாவது பிறந்த நாள் விழா நேற்று சத்யமூர்த்தி பவனில் ‘கொண்டாடப்பட்டது’.

அந்த உண்மையான தலைவருக்கு அஞ்சலி செலுத்த, அதுவும் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா… வெறும் பத்துபேர்! இந்த பத்துக்குள்ளேயே சில முக்கிய விஐபிக்களும் அடக்கம்!!
ஒரு நேர்மையாளரை, ஏழைப் பங்காளரை இதைவிட மோசமாக அவமதிக்க முடியுமா… தெரியவில்லை. இன்றைய காங்கிரஸுக்கும் நேர்மைக்கும் உள்ள நெருக்கம் அப்படி!

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி, தேசப் பற்று மிக்க ஒரே கட்சி, நூறாண்டுகள் கடந்த கட்சி என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள்.

கதர்ச் சட்டையுடன் காணப்படும் அவர்கள் தங்களது அரும் பெறும் வரலாற்றுப் பாதையை அப்படியே மறந்து போனவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் உள்ளனர்.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை ஒருபோதும் காங்கிரஸ் கெளரவித்ததில்லை என்பது வரலாறு. மாறாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின்போதுதான் பல தியாகிகளுக்கு புனர்வாழ்வு கிடைத்தது, உரிய கெளரவம் கிடைத்தது. குறிப்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில்தான் பல காங்கிரஸ் தலைவர்கள் நியாயமான மரியாதையை, அங்கீகாரத்தைப் பெற்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் வந்தது. காங்கிரஸ்காரர்கள் யாரும் அந்த நாளில் அஞ்சலி செலுத்தியதாகக் கூட நினைவில்லை.

கர்மவீரரின் வழியில் கக்கன்
இப்போது கக்கனின் பிறந்த நாள் நூற்றாண்டின்போதும் அவரை அவமதித்துள்ளது காங்கிரஸ்.

மறைந்த கக்கனுக்கு நேற்று 100வது பிறந்த நாள். இவர் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் இருந்தவர். ஊழல் என்றால் ‘அப்படின்னா என்ன?’ எவ்வளவு என்று கேட்கக் கூடிய நேர்மையாளர்.

அப்படிப்பட்ட சிறப்புக்குரிய கக்கனின் ஒரு போட்டோவை வைத்து வெறும் பத்து பேரே கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக அந்த போட்டோவையும் அப்புறப்படுத்தி,  அந்த மனிதரை அசிங்கப்படுத்தியுள்ளனர்.
இன்றைக்கு ஒரு வார்டு கவுன்சிலரே ஸ்கார்ப்பியோவில் பறக்கிறார்கள். ஆனால் பதவியிலிருந்த போதும், பதவியில் இல்லாதபோதும் அரசு பேருந்தில்தான் எங்கும் செல்வார் கக்கன். எந்தக் காரியமாக இருந்தாலும் சரியான விதிகளை அனுசரித்து செய்யக் கூடியவர். தனக்காகவோ கட்சிக்காகவோ ஒரு பைசா கூட யாரிடமும் பெற்றதில்லை கக்கன். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் வகுப்பைச் சேர்ந்தவர். தன் அப்பழுக்கற்ற குணத்தால், நேர்மையால் அந்த இனத்துக்கே உயர்வைத் தந்தவர்.
கக்கன் உயிருடன் இருந்தபோதே அவரை மறந்து போன கட்சிதான் காங்கிரஸ். ஏழ்மையில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் அவர் வாடியபோது அமரர் எம்.ஜி.ஆர்.தான் உதவிக் கரம் நீட்டினார். கக்கனை உரிய முறையில் பாதுகாத்தார்.

பின்னர் அவர் மறைந்தவுடன், கக்கனுக்கு மணிமண்டபம் கட்டி கவுரவம் தந்தவர் இப்போதைய முதல்வர் கருணாநிதி.
தேசத்தின் சொத்தாக மதிக்கப்பட வேண்டிய கக்கனின் நூறாவது பிறந்த நாளை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும் காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களின் பிறந்த நாளின்போது கூட கட்சி அலுவலகமே அமர்க்களப்படும். ஏன், மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் கோஷ்டித் தலைவர்கள் கட்சித் தலைமையகத்திற்கு வந்தால் ஏதோ போரில் வென்ற மாவீரர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போல தடபுடலாக வரவேற்பு அளித்து ஊரையேக் கலக்குவார்கள்.

ஆனால் கக்கனுக்கு மரியாதை செலுத்த தங்கபாலு, சுதர்சனம், கராத்தே தியாகராஜன், தாமோதரன் என வெறும் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். இவ்வளவுதானா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொண்டர் பலம்… இவர்களின் தொண்டரடிப் பொடிகள் குறைந்தபட்சம் வந்திருந்தால்கூட 100 பேராவது தேறியிருப்பார்களே… இதையெல்லாம் விட மிகக் கொடுமை – அந்த பத்து பேரும் மலர் தூவி முடித்த பின்னர் போட்டோவை உள்ளே எடுத்துச் சென்று விட்டனர்.

பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த கக்கனின் மகள் கஸ்தூரி சற்று தாமதமாக வந்தார். அவர் வந்தபோது போட்டோவைக் காணவில்லை. இதையடுத்து அலுவலகத்திற்குள் சென்று தனது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார் கஸ்தூரி.
காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று வாய் கிழியப் பேசி வருகிறது காங்கிரஸ். ஆனால் காமராஜர் மற்றும் அவருடன் இருந்த கக்கனைப் போன்றவர்களின் சிந்தனை, செயல், குணம் ஆகியவற்றில் ஒரு துளியாவது இப்போதுள்ள தலைவர்களிடம் இருக்கிறதா…

கக்கன் – ஒரு குறிப்பு:
1908-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி மதுரை மேலூருக்கு அருகே உள்ள தும்பையாபட்டியில் பிறந்தவர் பி. கக்கன். பள்ளி வயதிலேயே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பெரும் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித் மக்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை கேட்டு, ஆலயப் பிரவேசம் செய்தவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் கொடும் அடக்குமுறையை அனுபவித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர்.

1957-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக, காமராஜர் அமைச்சரவையில் பொறுப்பேற்றார். 1963 முதல் 1967 வரை சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர்.  விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை என பல துறைகளின் பொறுப்பு இவர் வசம் இருந்துள்ளது.

வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டு.

மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment