Pages

Search This Blog

Monday, August 01, 2011

தலித் மக்களின் கணக்கெடுப்பை முழுமையாக நடத்தவேண்டும்

தலித் மக்களின் கணக்கெடுப்பை முதலில் முழுமையாக நடத்த வேண்டும் என்றார் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான செ.கு. தமிழரசன்.வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதற்கு இப்போது அவசியம் இல்லை என இந்திய குடியரசு கட்சி கருதுகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்னர் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தரும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இப்போது மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசரம் காட்டுகிறது.தலித் மக்களின் கணக்கெடுப்பை முழுமையாக நடத்துவதை முதலில் உறுதி செய்ய வேண்டும். தலித்துகள் முதலில் கிராமங்களில் மட்டும் வசித்து வந்தனர்.

இப்போது நகரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். எனவே, தலித்துகள் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.முதலில் தலித் மக்களுக்கான கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதை தேசிய கருத்தாகக் கொண்டு, இந்திய குடியரசு கட்சி பிரசாரத்தில் ஈடுபடும்.

பிரதமர் தலைமையில் கண்காணிப்புக் குழு: தலித்துகளுக்கான சிறப்பு உட்கூறு திட்டம் இந்திரா காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவருக்கு பின்னர் மத்திய அரசுகளும், பல மாநில அரசுகளும் இத்திட்டத்தை முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவது இல்லை. மத்திய அரசு இந்த சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதுடன் தனது பணியை நிறுத்திக்கொள்கிறது.

எனவே பிரதமர் தலைமையில் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி இந்த திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்யவேண்டும்.சமச்சீர் கல்வி: சமச்சீர் கல்விக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதைப் போன்று பிரசாரம் செய்யப்படுகிறது. தெளிவான, முழுமையான வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஓராண்டு கால அவகாசம் எடுத்துக்கொள்வதால் எந்த சிக்கலும் வரப்போவதில்லை. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

தமிழகத்தில் சுயநிதி தொழில் கல்லூரிகளில் சேரும் தலித் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.மக்களின் புகார்களின்பேரிலே வழக்குகள்: திமுகவினர் மீது போலீஸார் பொய்வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.

வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்திக்கவேண்டியதுதானே. பொதுமக்கள் கொடுக்கும் புகாரின்பேரில்தான் போலீஸார் வழக்கு போடுகிறார்கள். எனவே, கருணாநிதியின் கருத்து மக்களைத் தூண்டிவிடுவதுபோல் உள்ளது என்றார் தமிழரசன்.முன்னதாக, கட்சியின் வளர்ச்சி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் செ.கு.தமிழரசன் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment