Pages

Search This Blog

Tuesday, September 27, 2011

மௌனம்

புத்தர் ஐம்பது மைல்களுக்கப்பால் வரும்பொழுது அவர் அடைந்த மௌனம் தன்னை முன்னால் அறிவிக்கும் உலகச் சூழ்நிலையையும், சூழலையும் ஆட்கொண்டு தன் சக்தியை நிலைநாட்டும் திறனுடையது ஆன்மிக மௌனம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் அடைந்த மௌனம் அவரிருந்த அறையில் திறந்த ஜன்னல் வழியாகவும் புயற்காற்றைச் சிறிதளவும் அனுமதிக்க வில்லை. அவர் வசித்த அறையைத் தரிசித்த மௌனி சாது என்பவர் "அங்கு ஆழ்ந்த மௌனம் ஆட்சி செலுத்துகிறது. நான் விருப்பப்பட்டிருந்தாலும் அங்கிருந்த பொழுது என்னால் பேசியிருக்க முடியாது'' என்றார்.

மனம் செயலற்று, சொல்லிழந்து, லயத்திலிருந்தால் மௌனம் சித்திக்கின்றது. மௌனமும், சாந்தியும் பரமனின் இரு பகுதிகள். மௌனமே இறைவன், சாந்தியே இறைவன் என்றும் சொல்வதுண்டு. மௌனத்தின் சக்தி சிருஷ்டியின் சக்தியாகும். சிருஷ்டிக்கு அடிப்படை மௌனம். மௌனத்திலிருந்து சப்த பிரம்மமாக, சிருஷ்டி ஏற்பட மூன்று நிலைகள் உண்டு. மூன்றாம் நிலையில் முதல் எழுந்த சப்தம் ஓம் எனப்படும். மௌனமும், சாந்தியும் சேர்ந்தவிடத்து ஆனந்தம் உற்பத்தியாகிறது.

உடல், உயிர், மனம் ஆகியவை மனிதனுடைய பகுதிகள், சத்து, சித்து, ஆனந்தம் இறைவனுடைய

பகுதிகள். இவற்றிடையே அமைந்துள்ளது சிருஷ்டிக்குரிய பகுதியான சத்திய ஜீவலோகம். அதை விஞ்ஞானம் என்பர். மௌனம் என்பது பொதுவானாலும், இந்த ஏழு நிலைகளிலும் மௌனம் உண்டு. நிலைக்கேற்ப வேறுபட்டுத் தெரியும்.

நம்மைச் சுற்றிச் சப்தம் இல்லை என்றால் அதை நிசப்தம் என்றறிவோம். அப்பொழுது நாம் வாயால் பேசாமலிருப்போம். மனம் எண்ணமற்றிருப்பது மனத்திற்குரிய மௌனத்தின் முதல் நிலை. எண்ண மற்றிருந்தாலும் அங்குச் சொற்கள் உலவியவாறிருக்கும். மௌனம் அடுத்த நிலைக்கு நகரும்பொழுது மனம் சொல்லையும் இழந்து நிற்கும். சிந்திக்காத மனத்திற்குச் சிந்திக்கும் திறனுண்டு. அதையும் அடுத்த கட்டத்தில் இழந்து சிந்திக்க முடியவில்லை என்றறியும். மேலும் மௌனம் வளரும் பொழுது (thinker in the mind) சிந்திக்கும் திறனை இழந்த மனமும் சிந்தனையை இழந்துவிடும். இனி அங்குச் சிந்திக்க ஒருவருமிலர் என்றாகும். என்றாலும் மனத்திற்குப் பிறவியிலேயே அமைந்த (structure of thinking) சிந்திக்கும் அமைப்பும் அடுத்த நிலையில் அழியும்.

இவையெல்லாம் அழிந்த பின்னர் மனம் என்பது இருக்கும். எண்ணமும், சொல்லும், சிந்தனையும், சிந்திக்கும் திறனும், அதன் அமைப்பும் அழிந்தபின், அவற்றின் உறைவிடமான மனம் இவற்றையெல்லாம் இழந்து நிற்கும். அதுவும் அழிந்தபின் மௌன சித்தி தன் ஆன்மிகச் சிகரத்தை மனத்தில் எட்டுகிறது.

நிஷ்டையில் மௌனம் உயர உயர அதற்குரிய சமாதி நிலைகள் கிடைக்கின்றன. புலன்கள் அவிந்து,

தபஸ்வி தன் மெய் மறந்து லயத்திலிருக்கின்றான். ஞானயோகத்திற்கும், ராஜ யோகத்திற்கும் அத்தியாவசிய மான அடிப்படை முறைகளில் இவை முக்கியமாகக் கருதப்படுகின்றன.

மனம் தன் தூய்மையால் உயர்ந்து மௌனத்தின் பல்வேறு நிலைகளை எட்டி மௌனத்தைப் பெறு கிறது. இது நீண்ட நாள் பயின்று பெற வேண்டிய தாகும்.
அன்னை சத்திய ஜீவலோக அவதாரம். அவர் பக்தனை நோக்கித் தாமே முயன்று வருகிறார். சத்தியலோக மௌனம் வேறுபட்டது. மனத்தின் மௌனம் தனக்குரியவற்றை சொல்லை, சிந்தனையை -- இழந்து சூன்யமாக இருக்கும். சத்திய ஜீவலோக மௌனம் அந்தச் சூன்யத்தை ஆனந்தத்தாலும், தெய்விக அன்பாலும் நிரப்பி, இறைவனின் பூரணத்தால் தன்நிறைவு பெற்றிருக்கும் தன்மை வாய்ந்தது. அன்னையை நோக்கித் திரும்பித் தமக்கு மௌனம் வேண்டும் என்று கேட்டால் அவன் மனத்தை சத்திய ஜீவலோக மௌனத்தால் அன்னை நிரப்புகிறார். அவன் மனம் தனக்குரிய பழைய சிறப்புகளான சிந்தனை முதலி யவற்றை இழந்து, ஆனந்தத்தாலும் (love) தெய்விக அன்பாலும் நிறைந்து, ஒரு கணம் உலக நிலையிலி ருந்து உயர்ந்து, தன்னை அன்னையின் குழந்தையாக அறிந்து திளைக்கும். பொதுவாக மௌனத்தை விழையும் மனிதர்கள் சமாதி தரிசனத்திற்கு வந்தால் அவர்களை யறியாமலும் இது நடப்பதுண்டு. அன்னையை எது வேண்டுமானாலும் கேட்கலாம். மௌனத்தைக் கேட்டால்

கேட்பதற்குச் சிறப்பு. எதையும் கேட்காமலிருப்பது அதனினும் உயர்ந்த ஆன்மிகச் சிறப்பு.

மௌனம் இறைவனின் பகுதி என்பதால் நம் ஜீவனின் பகுதிகளான மனம், உடல் ஆகியவற்றை மௌனம் தொட்டுப் பற்றிக் கொண்டால், இறைவனின் ஸ்பரிசத்தால் ஏற்படும் விளைவு ஏற்படும். புத்தியை மௌனம் நிறைத்தால் அது பிரகாசமாகி, பிறகு ஜோதியாகிறது. அதுவே ஞான சித்தி. உணர்வை மௌனம் ஆட்கொண்டால் அது தன் கடுமையை இழந்து, மிருதுவாகி, தெய்விக அன்பு பிறக்கிறது. உயிரை மௌனம் நிரப்பினால், வீரம் எழும். அது ஆவேசமுறும். மனிதன் வீறுகொண்டெழுந்து உலகைத் தட்டி எழுப்புவான். இருள் நிறைந்த உடலை மௌனம் அடைந்தால் இருள் நீங்கி, மரணத்தின் பிடியிலிருந்து உடல் விலகி காயகல்ப நிலையை எட்டும் தன்மை பெறும். திறனற்ற உடல் பெருந்திறமை பெறும். ஆன்மா இருளாலும், ஆணவத்தாலும் சூழப் பட்டுள்ள நிலைமாறி மௌனத்தின் ஆட்சிக்குள் வந்தால், அது விடுதலையடைந்து, மோட்சத் தகுதி பெற்று ஜீவன் முக்தனாகும்.
மௌனத்திற்குரிய நிலைகள் பல. அவற்றைக் கடந்து மௌனம் முதிர்ச்சியடைந்தால் சமத்துவம் சித்திக்கும். சமத்துவத்தை யோகத்திற்குச் சமமாகச் சொல்லுகிறது கீதை. மௌனத்தைப் பெறும் தகுதி எது? அன்னையைக் கேட்டுப் பெறுவது ஒரு தகுதி. கேட்டுப் பெற்றால் கேட்டது மட்டும் கிடைக்கும். அல்லது ஒரு சிலவற்றை அதிகமாகவும் பெறலாம்.

ஆனால் கேட்பது உயர்தனிச்
சிறப்புடைய நோக்கில்லை என்பதால் பெறும் தகுதி அத்துடன் நின்றுவிடும். கேளாமலிருப்பது நல்லது. கேட்கமுடியாத மனநிலை உயர்ந்தது. இந்த நிலையில் மௌனத்தின் மீதுள்ள ஆசை அழிந்துவிட்டால், மனம் மௌனத்தைப் பெறும் தகுதியை கேட்காமல் பெறும் தகுதியைப் பெறும்.
மனம் மௌனத்தைக் கேட்கலாம். அது கேட்டதால் கிடைக்கலாம். ஆனால் மௌனத்தைக் கேட்கும் உரிமையையுடைய பகுதி ஆன்மாவேயாகும். மனம் கேட்டால், மௌனத்தைக் கேட்டாலும், அது சொல் வடிவிலேயே இருக்கும். ஆன்மா கேட்கும்பொழுது அது ஆர்வமாக இருக்கும் (aspiration).

சத்திய ஜீவலோகத்தை அடையும் சிரமங்களை விளக்கமாக 1000 பக்கங்களில் எழுதிய பகவான், தம் யோக நூலின் இறுதியில் "மனம் மௌனத்தால் பூரணமாக நிறைந்து விட்டால், நேரடியாக மனிதனைச் சத்திய ஜீவலோகத்திற்கு உயர்த்தும் சாதனையையும் மேற்கொள்ள முடியும்'' என்று குறிப்பிட்டு மௌனத்தின் உயர்வை விளக்குகிறார்.

வாய்மூடி மௌனமாக இருத்தல் ஒருநிலை. எண்ணம் அற்று மனம் மௌனத்தைக் காப்பது உயர்ந்த நிலை. மனம், பிராணன், உடல், ஆன்மா ஆகியவை அடங்கிய மனித ஜீவன் மௌனத்தைத் தன் முழுமைக்காக நாடிப் பெறுதல் பூரண மௌனத்தைப் பெறும் சிறப்பாகும்.

No comments:

Post a Comment