யோகங்களில் தலையானது ராஜ யோகம்
நான்கு வகை யோக பிரிவுகளில் ராஜ யோகமும் ஒன்று. மற்ற மூன்று பிரிவுகள் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம். இவை தவிர ஹதயோகம் (ராஜ யோகத்தில் அடங்கியது) குண்டலினி யோகா, மந்திர யோகம், லயயோகம் போன்ற பல கிளை பிரிவுகளும் யோகாவில் அடங்கியவை.
ராஜ யோகம் அரசர்களுக்கேற்ற யோகம். மனதுக்கும், புலன்களுக்கும் ஏற்ற யோகம். புலனேந்திரியங்களை முழுக்கட்டுப்பாட்டில் வைக்க ராஜ யோகம் வலியுறுத்துகிறது. உணர்ச்சிகள், ஆசைகள், இவற்றை அடக்கி, பூரணத்துவம் அடைவதற்கான வழிகளை போதிக்கிறது.
இதை அடைய, யோகாவின் குருவான பதஞ்சலி முனிவர் 8 வழிகளை கூறுகிறார், அவருடைய ‘அஷ்டாங்க யோகா’ நூலில். அவை யமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரதியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை. இவற்றில் முதல் 5 நிலைகள் வெளிப்படையான, பகிரங்க யோகங்கள் என்றும், மற்ற 5 நிலைகள் ரகசிய அந்தரங்க யோகங்கள் எனப்படும். இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
யமம் ———
இது நாம் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்கான கட்டுப்பாடுகளை கூறுகிறது. இந்த நிலையில் ஐந்து ஆக்ஞைகளை கூறுகிறார் பதஞ்சலி முனிவர். அவை.
அஹிம்சை -
மனதாலும், வாக்காலும், செயலாலும், மற்றவர்க்கு தீங்கு செய்யாமை, மற்ற ஜீவராசிகளை துன்புறுத்தக் கூடாது.
சத்யம் -
உண்மையையே பேச வேண்டும். உண்மையையே நினைக்க
வேண்டும். உண்மை தவறாமல் இருப்பது, தருமத்தையும், சீர்தூர்க்கி பார்க்கும் நியாயத்துடன் கலந்திருக்க வேண்டும். அதாவது திருடர்கள் ஓர் அப்பாவியை துரத்தும் போது, அவர்களிடம் ‘உண்மையையே பேசுவேன்’ என்று சொல்லி, திருடர்களிடம் அந்த அப்பாவியை காட்டிக் கொடுக்காமல் இருப்பது தான் உண்மையான வாய்மை, “வாய்மை எனப்படுவது யாதனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல்” என்கிறது திருக்குறள். மேலும் திருக்குறள் சொல்வது
“பொய்மையும், வாய்மையிடத்த புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனில்”
(குற்றம் தீர்ந்த நன்மையை தரும் என்றால் பொய்யான சொற்களும் வாய்மையாக கருதப்படும் இடத்தை பெற்று விடும்)
“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து எல்லாம் உளன்”
ஒருவன் தன் மனத்தோடு பொருந்திய உண்மையை பேசக் கற்றுக் கொண்டால், அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக் காட்டிலும் தலை சிறந்தவன் ஆவான்.
அஸ்தேயம் -
திருடாமை மற்றவர்களின் பொருட்களை மட்டுமல்ல,
அவர்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் திருடக்கூடாது.
“உள்ளத்தால் உள்ளலும் தீதே, பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வோம் எனல்”
(பிறருக்கு சொந்தமான பொருளை மனத்தினால் நினைத்தால் தீது. அதனால் பிறர் பொருளை வஞ்சித்து களவினால் சொல்வோம் என்று எண்ணுவது இருக்கவும்.)
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
பின்விளைவு பற்றிச் சிந்திக்காது பிறர்க்குரிய பொருளைக் கவர நினைப்பது இறுதியைக் கொடுக்கும். ஆனால் பிறர் பொருள் எதுவும் தனக்கு வேண்டாம் என்னும் பெருமிதம் வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.
பிரம்மசர்யம் -
இதை சுயகட்டுப்பாடு, தன்னடக்கம் என்று சொல்லலாம். இச்சைகளுக்கு இரையாகாமல் இருந்தால், பிரம்மசர்ய சக்தியை தேக்கி வைத்து கொள்ள முடியும். இதனால் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. நேர்மையான, சமூக கட்டுப்பாட்டுக்காக உண்டான திருமணம் ஆகும் வரை “கற்பை” காப்பது நல்லது. பாலுணர்வை, தகுந்த காலம் வரும் வரை கட்டுப்படுத்தும் மனிதன், தனது சக்தியையும், திறனையும் பாலியிலில் சிதறவிடாமல் இருப்பதால் சிறந்த ஆண்மை உள்ளவனாக திகழ்வான்.
அபரிக்கிரஹம் -
பொருள் சேர்க்காமை. பிறரிடமிருந்து ‘அன்பளிப்புகள்’ பெறுவது கூடாது. கையூட்டு, லஞ்சம் வாங்குவது தவறு என்பது தான் இதன் உள் கருத்து. கடமையை செய்ய கையூட்டு வாங்கக் கூடாது. லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தை நினைத்துப் பாருங்கள். அதே சமயம் அன்பளிப்பு, பிரதி பலனை எதிர்பார்க்காமல், அன்பினால் கொடுக்கப்பட்டதை ஏற்று கொள்ளலாம்.
நியமம் – இது அஷ்டயோகத்தின் இரண்டாம் அங்கம். நியமம் என்றால் விதி முறைகள். மேற்சொன்ன முதல் அங்கமான “யமம்” போலவே நியமத்திலும் ஐந்து கோட்பாடுகள் உள்ளன. அவை
சௌசம் -
சுத்தம் உடலளவிலும், மனதளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும். ‘உடல் வெளுக்க வழியுண்டு எங்கள் முத்து மாரியம்மா மனம் வெளுக்க வழியில்லையே’ என்றார் பாரதி. மனதையும் தீய எண்ணங்கள் இல்லாமல் காக்க வேண்டும். மனம் வெளுக்க, பொருளாசை கூடாது. பற்றின்றி வாழ வேண்டும். மற்றவர்களை நிந்தித்து இகழ்வது, பொறாமை, புறங்கூறுவது இவற்றை தவிர்க்கவும். உடலையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
சந்தோஷம் (மகிழ்ச்சி) -
சந்தோஷம் எப்போது கிடைக்கும். நாம் திருப்தியடையும் போது. ஆடை, ஆபரணங்கள், வீடு, வசதிகளால் ஏற்படும் திருப்தி ஒரு வகை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. நியாயமான ஆசைகள்இ லட்சியங்கள் இவற்றை கைவிட வேண்டாம். இருப்பதை கொண்டு வாழ்வதும் மகிழ்ச்சியை தரும். திருப்தியில்லாத மனிதனின் மனம் அலை பாயும். சந்தோஷத்தை அனுபவிக்க இயலாது.
தவம் -
தவத்தை எளிமை அல்லது விடாமுயற்சி என்று சொல்லலாம். மனதை ஒரு முகப்படுத்தி இறைவனை நினைத்து செய்வது தவம். நீங்கள் அடைய விரும்புவதை தவத்தால் பெறலாம். தவம் உங்களுக்கு எளிமையையும், மனத்துக்கு சமனத்தையும் உண்டாக்கும்.
ஸ்வத்யாமம் -
கற்பதும், கற்பதை கடைப்பிடிப்பதும் “ஸ்வதியாயமாகும்” நல்ல விஷயங்களை, நூல்களை கற்றுப் பயில வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை தடைஇன்றி, நிறுத்தாமல், தொடர வேண்டும். ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஈஸ்வர ப்ரணிதானம் -
இறைவனை சரணடைதல். கடவுள் தான் நம்மை வழி நடத்துகிறார். சர்வ வல்லமையுள்ள கடவுள் தான் பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாவற்றுக்கும் காரணம், “நான்” என்ற அகம் பாவம் கூடாது. கர்வத்தை விட்டு அடக்கத்தை கொள்ள வேண்டும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒருவன் மனமொழி மெய்களை அடக்கி ஒழுகுதல் தேவர்களுள் கொண்டு போய்ச் சேர்க்கும். அங்ஙனம் அடக்கம் இல்லாத ஒழுகுதல் மிக்க இருள் செறிந்த நரகலோகத்துக்குக் கொண்டு போய்த் தள்ளிவிடும்.
ஆசனம் – இது அங்கஸ்திதி – உடல் ஒரு நிலையில் இருப்பது (நின்ற, உட்கார்ந்த, மல்லாந்து படுத்த, குப்புறபடுத்த நிலைகள்). எந்த நிலையிலிருந்தாலும், அதில் ஆடாமல், அசையாமல் இருப்பது. சரியான தேகஸ்திதியை (நிலையை) கடைப்பிடித்தால் நிற்கும் போது நேராக, நிமிர்ந்து நிற்றல், நேராக, நிமிர்ந்து நோக்குதல் இவை தன்னம்பிக்கையை காட்டும். சரியான அங்கஸ்திதி உடலுக்கும் நல்லது. ரத்த சுழற்சி, ஜீரணம் இவை மேம்படும்.
பிராணாயாமம் – பிராணம் என்றால் உயிர், உயிர்மூச்சு. யாமல் என்றால் கட்டுப்படுத்தல். பிராணயாமம் சரியாக சுவாசிக்கும் வழிமுறை, கலை எனலாம். சுவாசம் இயற்கையான நிகழ்வு என்றாலும் அதை சீராக்குவது பிராணாயாமம். ஆழ்ந்த மூச்சிழுப்பால் நுரையீரல் அதிக காற்றை, பிராணவாயுவை உட்கொள்கிறது. அதிக ஆக்ஸிஜன் பாய்வதால் மன அமைதி ஏற்படுகிறது. மூச்சை சீராக வைப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
ப்ரத்யாஹாரம் – ப்ரதி என்றால் ‘மாறுபட்ட’ என்று பொருள் ஆவாரம் என்றால் உணவு. வெளியில் உள்ள உணவை போன்றவற்றை தேடும் நமது புலனை உள்புறம் திருப்பி ஆத்ம சோதனை செய்வது ப்ரதியாஹாரம். காண்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது என்ற ஐந்து புலன்களால் தான் நாம் உலகை அறிகிறோம். இந்த புலன்களை கட்டுபடுத்துவது தான் பிரதியாஹாரம். இதற்கு முயற்சி தேவை. பிரதியாஹாரம், பின்வரும் மூன்று அந்தரங்க யோகங்களை அடைவதற்கான நுழை வாயில். முதல் படி என்றும் சொல்லலாம். பிரத்யாஹார பயிற்ச்சிகளால் அந்தரங்க யோக சித்திகளை பயில நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அந்தரங்க யோகம்
மேற்சொன்ன ஐந்து நிலைகளும் பகிரங்க யோகங்களாகும். இனி வருவது அந்தரங்க யோகங்கள். இவை நமது பிரத்யேக தனிப்பட்ட, நமக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டிய பயிற்சிகள். இந்த மூன்று தான் ‘மெடிடேசன்’ எனப்படும் உயர்நிலை தியானம்.
தாரணை -
அலைபாயும் மனதின் எண்ணங்களை ஒரு முகுப்படுத்துவதே தாரணை. “பிரத்யாஹாராவால்” புலனடக்கம் கற்றிருந்தால் மனதை ஒரே திசையில் கொண்டு வர உதவும். இருந்தும் முழு மன அடக்கம் அடையாமல் மனம் சிறிது தவிக்கலாம். முழுமனதை ஒரே பொருளில் நிலை நிறுத்தி, அசைவின்றி 15 வினாடிகள் நின்றால் அது தாரணையாகும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.
கடவுளை வணங்க பக்தி, தர்மம், கர்மயோகம் போன்ற பல வழிகள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து, அதில் மனதை செலுத்துவது தாரணை. நீங்கள் தாரணைக்காக, மந்திரங்கள், ஸ்லோகங்கள், பாடல்கள் இவற்றை உச்சரித்து தியானம் செய்யலாம்.
தியானம் -
தாரணை நிலையை இடை விடாமல் தொடர்ந்தால், அது தியானம். தாரணை மூலம் ஒரே திசையில் திருப்பப்பட்ட மனதை ஒரே புள்ளியில் ஒரே எண்ணத்தில் நிலை நிறுத்துகூது தியானம். ஏதாவது ஒரு பொருளை – உதாரணமாக தாமரை மலர் – 15 நிமிடம் நினையுங்கள். பழக, பழக, அந்த பொருள் மறைந்து, உங்கள் உள்மனது ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும். மந்திரத்தை மீண்டும், மீண்டும் ஜபித்தும் தியானம் செய்யலாம்.
சமாதி -
இந்த நிலை, பெயருக்கேற்ப, வெளியுலக உணர்வின்றி ஒன்றுமே நினையாத சீரான மனநிலையாகும். கோபதாபங்கள், இன்பதுன்பங்கள், இவைகளின் தாக்கம் இல்லாமல் மனம், உடல் அமைதி அடையும்.
யோகா ஒரு சமுத்திரம் ‘சமாதி’ நிலையைப் பற்றி மட்டுமே பதஞ்சலி முனிவர் 55 ஸ்லோகங்கள் எழுதியுள்ளார். மனதைப்பற்றி கூறுவதால் ‘ராஜயோகம்’ புரிந்து கொள்ள சிறிது கடினமானது. இதை ஓரளவாவது அறிந்து செயல்படுவது உங்களை புதுமனிதாக்கும்.
No comments:
Post a Comment