Pages

Search This Blog

Monday, September 19, 2011

போலி ஆன்மீகவாதிகள்...!

இல்லறமே நல்லறம்

சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே.
- மகான் சிவவாக்கியர் பாடல் 

இப்பாடலின் சாரம்

          இயற்கை படைப்புகளில் மனித வர்க்கமே சிறந்ததாகும். மனிதனுக்குள் எல்லாம் வல்ல இயற்கை அன்னை, சொர்க்கத்தையும், நரகத்தையும் வைத்திருக்கிறாள். நரகமாகிய மும்மலதேகம் துணைகொண்டுதான் சூட்சும தேகமாகிய ஒளிஉடம்பு பெறமுடியும். எல்லாம் வல்ல இயற்கை அன்னை பெறுதற்கரிய மானுட தேகம் தந்ததே, இல்லறத்தில் இருந்து விருந்தை உபசரித்தும், மனைவி, மக்கள், தாய், தந்தை மற்றும் உறவினர்கள் துணையோடு நித்தமும் காலையிலும், மாலையிலும் "ஓம் அகத்தீசாய நம" அல்லது வேறெந்த முற்றுப்பெற்ற ஞானியரின் நாமஜெபம் செய்து சிவமயமாகிய சித்தர்களின் ஆசி பெறுவதற்கே.

          காம விகாரம் தணிதற்கு மனைவி அவசியம். காம விகாரம் தணியாமல் மனம் ஒருநிலைப்படாது. எப்பொழுதும் மனம் போராட்டமாகவே இருக்கும். தியானமும் செய்ய முடியாது. இல்லறத்தில் இருந்தால்தான் நமக்கு எந்த உணவு உடம்பிற்கு ஒத்துக்கொள்ளுமோ அந்த உணவை மனைவி சமைத்துத் தருவாள். அது மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு பசியாற்றவும் துணையாக இருப்பாள். தாய் தந்தைக்கு செய்யக்கூடிய கடமைக்கும் துணையாக இருப்பாள். மனம் தளர்ச்சி அடையும்பொழுது பிள்ளைகளைத் தொடுதலாலும், அவர்களது மழலைச்சொல் கேட்பதாலும் மனம் ஆறுதல் அடையும். மேலும் தகுதியுள்ள நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மகிழும்படியாக உணவுவகைகள் கொடுத்து, நட்பை பெருக்கவும் அவள் துணை இருக்க வேண்டும். தகுதியுள்ள இல்லறத்தான் தான் கடவுளை அடையமுடியும்.

           ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகலாம். வினை காரணமாக கூடும் அல்லது குறையும். ஆகவே வாழ்க்கையின் நிலை உணர்ந்து மக்கள், இருக்கக்கூடிய இல்லறத்தையும் மற்றும் உள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையையும் நன்கு பயன்படுத்தி, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்வார்கள். ஆகவே, நித்திய கடமைகளை சலிப்பில்லாமல் செய்துவரவேண்டும். பொருள் ஈட்டுதல், நற்காரியங்களுக்குச் செலவு செய்தல் போன்ற பொருளின் இயல்பை அறிந்து (நிலையில்லாத பொருளைப் பெற்றால் நிலையான அறத்தைச் செய்துகொள்ள வேண்டும்) செயல்படுவார்கள்.இதையெல்லாம் உணராத சிலர், மனைவி மக்களை விட்டுவிட்டு அனைத்தும் பொய் என்று வீண் கற்பனை செய்துகொண்டு, அருவிகள் உள்ள மலையடிவாரத்தில் தங்கி பச்சை காய்கறி இலைதழைகளைப் பறித்தால் பாவம் வரும் என்று எண்ணி, மரத்தில் இருந்து உதிரக்கூடிய சருகுகளை மட்டும் உண்டு அருவியில் வருகின்ற தண்ணீரைக்குடித்தும், தவத்தைச் செய்ய நினைப்பார்கள். சருகையும் தண்ணீரையும் சாப்பிட்டால் ஜீரணமாகாது வயிற்றில் தங்கிவிடும், மலச்சிக்கல் ஏற்படும் மனித வர்க்கத்திற்கென்றே உணவு வகைகள் இருந்தும் அதைப்பற்றி அறியாது வெறும் சருகைத்தின்றால் கிட்டத்தடட் 15 அல்லது 20 நாட்கள் அல்லது 1 மாதம் தான் அவர்களால் உயிரோடு இருக்கமுடியும். இப்படி அநியாயமாக சாவதற்காகத் தவம் செய்வதில்லை. வாழ்வதற்காகத்தான் தவம் செய்யவேண்டும். ஆகவே உடம்பின் இயல்பைப்பற்றியும், உணவின் அவசியத்தைப்பற்றியும் நன்கு உணர்ந்தவர்கள் இப்படி ஊர்ஊராகச் சுற்றிக் காலத்தை வீணாக்கமாட்டார்கள்.

           ஆகவே, ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால், உடம்பின் இயல்பையும் உடலைக் காப்பாற்றிக் கொள்ள உணவின் இயல்பையும் அறிந்து நித்திய கடமைகளைச் செய்தும், ஆசான் அகத்தீசரை தியானம் செய்தும் முக்தி பெறுவார்கள்.

  எ.கா

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
-இல்வாழ்க்கை - குறள் 47.

 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
-இல்வாழ்க்கை - குறள் 46.

 குறிப்பு

1. உடம்பின் இயல்பை அறிந்து, இல்லறத்தைச் செம்மையாக நடத்தியும், விருந்தை உபசரித்தும் மற்றும் அறப்பணிகளைச் செய்து வந்தால், தலைவனைத் தேடி நாம் போகவேண்டியதில்லை. தலைவன் நம்மை நோக்கி வருவான்.

2. சிலபேர் பச்சைக் காங்கறிகளைத் தின்றால் உடம்புக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். வேகவைத்த உணவு வகைகளைச் சாப்பிடும் பொழுதே அஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. மனித வர்க்கத்திற்கே வேகவைத்த உணவுதான் உடம்புக்கு நல்லது என்று முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள். இடையில் சிலபேர் உணவு பழக்கவழக்கங்கள் அறியாது பச்சைக்காய்கறிகள் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று சொல்வார்கள். பாவம் அவர்கள் சாப்பிடட்டும், குற்றமில்லை. மற்றவர்களுக்குச் சொல்லாதிருப்பதே புண்ணியமாகும்.

3. ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால், உடம்பைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அறிந்தவர்கள்தான் இந்த உடம்பை கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாக எண்ணுவார்கள். அவர்கள்தான் காமத்தை மலரினும் மென்மையானது என்று உணர்வார்கள். உணர்ந்து தன் உடம்பை காப்பாற்றிக்கொள்வார்கள். அப்படி உடம்பை காப்பாற்றிக் கொண்டவர்கள்தான் ஒளி உடம்பு பெறுவார்கள். ஒளி உடம்பு பெற்றவர்கள் கோடானுகோடி யுகம் வாழ்வார்கள். அவர்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்வார்கள். எல்லாம் வல்ல இயற்கை உயிரினங்களை தோற்றுவித்தல், வாழ்வித்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் இயற்கையை வென்றவர்களோ ஐந்தொழிலும் செய்வார்கள். இதையெல்லாம் நாம் அறியவேண்டுமானால் ஐந்தொழிலும் நினைத்தமாத்திரத்தில் செய்யக்கூடிய வல்லமையுள்ள ஆசான் அகத்தீசரைப் பூஜிக்க வேண்டும். பூஜிக்க பூஜிக்க தன்னைப்பற்றி உணரக்கூடிய அறிவு வரும். தனக்குள்ளே இருக்கும் பகைமையையும்(மும்மலம்), நட்பையும்(ஒளி உடம்பு) அறிய முடியும். அறிந்து பகைமையை நீக்கி நட்பாகிய ஞானதேகம் பெறலாம். இதுவே வீடுபேறு ஆகும்.

4. உடம்பின் இயல்பை அறியாதவர்கள் விந்து விட்டால் நொந்து விடுவான் என்று சொல்வார்கள். அது யோகிக்கே உரிய வித்தைகள் ஆகும். இவை புரியாது விந்து விடக்கூடாது என்று மனைவியை புறக்கணிப்பார்கள். இது திருமணம் செய்வதற்கு முன்பே இந்த புத்தி இருக்க வேண்டும். திருமணம் செய்துவிட்டு மனைவியை புறக்கணித்தால் ஆன்மீக நரகத்தில் சேர்வார்கள். விந்துவாகிய சுக்கிலம் உடம்பில் தேங்கினால் கொழுப்பு மண்டிவிடும். இரத்த சுத்தி ஏற்படாது. உடல் ஆரோக்கியம் இருக்காது. உடல் உஷ்ணம் அதிகமாகும். மேலும் மூளையும் வேலை செய்யாது. எனவே உடம்பைப் பற்றி அறிந்தவர்கள் இல்லறத்திலிருந்து உடம்பைப் பொன் உடம்பாக்கி கொள்வார்கள்.

போலி ஆன்மீகவாதிகளின் செயல்

           அறிவு தெளிவில்லாத போலி ஆன்மீகவாதிகள் நல்லதொரு இல்லறத்தானை அழைத்து மனைவியிடம் கூடாதே, பந்தபாசம் ஆகாது என்பார்கள். அவன் பாவ புண்ணியம் இல்லை என்று சொல்பவனைவிட கொடுமையானவன். எனவே, அதுபோன்ற ஆன்மீகவாதிகளிடம் சென்றால் ஆன்மீக நரகம்தான் கிட்டும்.ஆன்மீக நரகம் என்பது கடவுள் நாட்டம் உள்ளவர்கள் உடல்கூறு தெரியாது பிராணயாமம் செய்தலும், பட்டினி கிடத்தலும் மற்றும் ஊர்ஊராய் சுற்றியும் அதனால் உடல் நலிவுற்று நோய்வாய்ப்பட்டு இறப்பதே ஆன்மீக நரகமாகும்.


எடுத்துக்காட்டு
மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ்வு சிறக்குமே.
-மகான் சிவவாக்கியர் பாடல்.

மகான் சட்டைமுனிநாதர் அவர்களின் குருசூத்திரம் 20ல் - பாடல்கள் 17-18

அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்
கற்பம் இல்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செய்யோகம் அழிம்பிது பாரே -17

பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே அடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீசரைச் செய்து உபதேசம்
கூத்திது ஆகும் கூடாது முத்தியே -18

நல்ல வழியை நாடுவோம்

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
-கடுவெளித்சித்தர் பாடல்-

          உலகத்திலேயே சிறந்தது சித்தர்கள் மார்க்கந்தான். அந்த சங்கத்தார்கள் காட்டுகின்ற பாதை மிகத் தெளிவானது. காரணம், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நன்கு உணர்ந்தவர்கள் அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள்.

இவர்கள் மனைவியிடம் அன்பு காட்டுவார்கள், தாய் தந்தையர்களை உபசரிப்பார்கள், உடன் பிறந்தவர்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார்கள், நல்ல நட்பைத் தேர்ந்தெடுத்து நட்பைப் பெருக்கிக்கொள்வார்கள், விருந்தை உபசரிப்பார்கள், தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வார்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பொறாமை காரணமாக அல்லது அறியாமை காரணமாக இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக்கொள்வார்கள், ஜாதி மத துவேசம் பார்க்கமாட்டார்கள், சிறந்த முயற்சி உடையவராக இருப்பார்கள், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக வீண் ஆரவார ஆடம்பரச் செலவுகள் செய்யமாட்டார்கள், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகமாட்டார்கள்.

தம் குடும்பம் நலம்பெறும் பொருட்டு சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதைப் பாவம் என்று எண்ணுவார்கள், கட்டாயமாக காலை சிறிதுநேரம், மாலை சிறிது நேரம் அகத்தீசன் நாமத்தைச் சொல்லி நாமஜெபம் செய்வார்கள், அகத்தீசனைப் பூஜை செய்யும் பொழுது, "அடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும்"; என்று அகத்தீசனை உருகி வேண்டிக்கொள்வார்கள், மேலும் சமுதாய நடைமுறை பழக்கவழக்கங்களை அறிந்து ஒப்புரவோடு நடந்துகொள்வார்கள், தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நண்பர்கள் சிறுசிறு குற்றம் செய்தால் அதை அனுசரித்து நடந்துகொள்வார்கள், எப்போதும் நாட்டிற்குத் தொண்டுசெய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பார்கள், மற்றும் புனித நீராடுதல், கும்பாபிஷேகம் பார்த்தல் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், மற்றவர்களை அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டால் அவர்கள் விருப்பம் என்று சொல்லி அதை தடுக்க மாட்டார்கள்.

3 comments:

SURYAJEEVA said...

சுயநல்மிக்கவர்களே ஆன்மீக வாதிகள் என்பது பகத் சிங் வாக்கு

கோவி.கண்ணன் said...

// நட்பை பெருக்கவும் அவள் துணை இருக்க வேண்டும். தகுதியுள்ள இல்லறத்தான் தான் கடவுளை அடையமுடியும்.//

என்னங்க நீங்கள் சொல்லும் தகுதியெல்லாம் பெண்களுக்கு வாய்க வாய்ப்பில்லையா ? அதுபற்றி அறிவுறுத்தல் எதுவும் இல்லையா ?

Anonymous said...

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி
உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; .

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)


Online Books : TAMIL
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Post a Comment