Pages

Search This Blog

Monday, October 03, 2011

கிராமத்து முடிதிருத்தும் நிலையம்.

குளத்தங் கரையினிலே
கூரைக் கொட்டகை,

தலையாய அதிகாரியும்
தலைவணங்கித் தானமர

பல கை அபிநயங்கள்
பலகையில் அமர்ந்து.

நால்வரோடு நாமும் சேர்ந்து
கல் திண்ணைக் காத்திருந்து,

மடிந்து கந்தலான
செய்தித் தாள் வாசிப்பு.

எப்ப வந்தீக
என்று தொடங்கும் உரை,

சங்கன் வீட்டு விசேஷம் முதல்
இந்தியா விடும் ராக்கெட் வரை,

செய்திப் பரிமாற்றம்
செய் தொழிலிலும் கவனம்.

மரத்தடியில் கீழமர்ந்து
சிரம்தாழ்த்தி நாம் பணிய,

சின்னஞ் சிறு கதைகள் பேசி
தண்ணீரில் கேசம் கிளறி,

கத்தரியின் கிடு கிடுப்பில்
சித்திரமாய்ச் சிதறும் முடி.

மர இலைச் சலசலப்பை
ஏறிட்டு நாம் காண

நரைத்த புருசு தடவி
முகச் சவரம் நடக்குமங்கே.

பரதேசியாய் அமர்ந்து
பளிச்சென்று எழுந்து,

குளத்தில் நீராடி
குளித்து வெளியில் வர

சில்லென்ற குளிர்காற்று
சிணுங்கித் தீண்டிச் செல்லும்!

1 comment:

SURYAJEEVA said...

தினமும் புதுசு புதுசாய் வால் பேப்பர்;
ரோட்டோர சலூன் கடையில்,
சினிமா போஸ்டர்...

Post a Comment