Pages

Search This Blog

Thursday, November 10, 2011

உப்புமாவும் சிக்(கு)மாவும்

கடவுளை சக்தியாகவும், சிவனாகவும் சித்தரித்திருப்பதற்கு தெளிவான விஞ்ஞானப் பின்னணி உண்டு.

சிவம் என்பது நிலைச் சக்தி. சக்தி என்பது இயங்கு சக்தி. (Potential and Kinetic Energy)
உயரத்தில் தேக்கி வைத்த நீருக்கு சக்தி இருப்பது நிஜம்தான். ஆனால் அதைத் திறந்து விட்டு சக்கரங்களை சுழல விட்டு மின்சாரம் எடுக்கிற போதுதான் பலன் கிடைக்கிறது. எந்த Potential Energy யும் Kinetic ஆக மாறுகிற வரை பிரயோஜனமில்லை. இதை இன்னம் கொஞ்சம் எளிமையாக சொல்ல திருவிளையாடல் படத்தில் சக்தியும், சிவனும் தகராறு செய்து கொள்வதாகக் காட்டி இருக்கிறார்கள்.

புலவர் கீரன் இதற்கு இன்னும் சிறப்பான உதாரணம் சொல்வார்.

உடல்நிலை சரியில்லாமல் சோர்வாகப் படுத்திருக்கிறவனை,
“என்ன ஆச்சு?” என்று கேட்டால்,

“உடம்புல சக்தியே இல்லை, அதான் செவனேன்னு கிடக்கேன்” என்பானாம்.
அதாவது Kinetic Energy ஆக மாறுகிற வரை Potential Energy ஆக கிடக்க வேண்டியதுதான்.

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு இந்த முன்னுரை கொஞ்சம் ஓவர்தான்.
கடந்த மூன்று வாரங்களாக சக்தி இல்லாமல் சிவம் மட்டும் இயங்க வேண்டிய சூழ்நிலை எங்கள் வீட்டில்.
என் இல்லத்தரசி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வெறும் Potential Energy ஆக மாறி விட்டார். Potential Energy ஆக இருந்த நான் இயங்கி Kinetic Energy ஆக மாற வேண்டியதாயிற்று.

என் கம்ப்யூட்டர் நாற்காலியில் இல்லத்தரசியை வைத்து ‘சுமை தாங்கி சாய்ந்தால்’ என்று பாடாத குறையாக தள்ளிக் கொண்டிருந்தேன்.

எலும்பு முறிவே பரவாயில்லை என்று நினைக்கிற மாதிரி சமைத்தும் போட்டேன்.

“சமையலா, நானா…. சான்ஸே இல்லை. ஒரு சமையல்காரியை வேணா வெச்சிக்கறேன்….. ஐ மீன், வெச்சிக்கலாம்”

“ஹும்ம்ம்… இவ்வளோதானா உங்க சிக்ஸ் சிக்மா, ப்ளாக் பெல்ட் எல்லாம்”
“என்ன, என்னை சீண்டிப் பாக்கறயா?”

“சீண்டவும் இல்ல வேண்டவும் இல்ல… ஒண்ணரை லட்ச ரூபா செலவு பண்ணி படிச்ச படிப்பு நமக்கு பிரயோஜனப் படல்லைன்னா, அது வெத்து வேட்டுதான்”

“அதுக்காக, பாத்திரம் தேய்க்கவும், வீடு கழுவவும், சமைக்கவும் அது யூஸ் ஆகணும்ன்னு நீ எதிர் பார்க்கிறது நியாயமே இல்லை”

“ஏன், இதெல்லாம் உங்களுக்கு சாமானியமான வேலையாத் தெரியுதா? அப்டீன்னா அலட்சியமாப் பண்ணிட்டு போக வேண்டியதுதானே?”

“அம்மா தாயே, இதெல்லாம் சாமானியமான விஷயம் இல்லைதான், ஒத்துக்கறேன். ஆளை விடு”

“அப்பா இதெல்லாம் கஷ்டமான விஷயம்ன்னு ஒத்துக்கறீங்க”
“ஆமாம்”

“இதைப் புரிஞ்சிகிட்டு செய்யற திறமை உங்களுக்கு இல்லை”
“அ….. ஆமாம்”

“அப்பா சிக்ஸ் சிக்மா வேஸ்ட்தான்”

“நீ என்ன சுத்திச் சுத்தி அங்கேயே வர்றே?”

“உங்க தொழிலை குறைச்சி சொல்றேனே… ரத்தம் கொதிக்கலை? மீசை துடிக்கலை? என் சிக்ஸ் சிக்மாவாலே முடியாதது ஒண்ணுமே கிடையாதுன்னு நிரூபிக்கிற துடிப்பு வரல்லை?”

வரத்தான் வந்தது.

“ஒண்ணும் வேண்டாம், ஒரு ரவா உப்புமா பண்ணி கொண்டாங்க முதல்ல…. உங்க சிக்ஸ் சிக்மாவோட கேபபிளிட்டி என்னன்னு பாக்கறேன்”

அடக்கடவுளே…. இது என்ன தர நிர்ணய உலகத்துக்கு வந்த சோதனை!
என்னுடன் போட்டியிட்டுப் பாட பாணபத்திரன்தானா கிடைத்தான்! என்று பாலய்யா மாதிரி அலுத்துக் கொண்டு தயாரானேன்.

“சரி.. முதல்ல ப்ரீபா எப்படிப் பண்றதுன்னு சொல்லிடு”
“பூ.. இது வாச்சாங்குள்ளி ஆட்டம்”

“இத பார், நீ சிக்ஸ் சிக்மான்னு சொன்னதாலே சொல்றேன். சிக்ஸ் சிக்மாங்கிறது ஒரு பிராசசை டிசைன் பண்ற ஆக்டிவிட்டி இல்லை. சிறப்பா செய்யற வேலை. அதில முதல் படியே Understand the Process தான்”

இப்போது ரவா உப்புமா செய்வது பற்றி நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைவது என் இல்லத்தரசிக்கு தவிர்க்க முடியாததாயிற்று. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன்.

அடுத்த இருபத்தைந்து நிமிஷங்களில் ரவா உப்புமா ரெடி.
 
கொண்டு போய்க் கொடுத்தேன்.
 
“ரொம்ப சீக்கிரம் ஆனா மாதிரி இருக்கே, எதோ தப்பு பண்ணியிருக்கீங்க”
 
“முதல்ல உப்புமாவை சாப்பிடு. அப்புறமா விமர்சனம் பண்ணலாம்”
 
சாப்பிட்டாயிற்று.
 
“எக்சல்லன்ட் வில் பி எ ஸ்மால் வோர்ட். நான் சொன்னதை அப்டியே பிடிச்சிகிட்டீங்க. என்னை விட நல்லா பண்ணியிருக்கீங்க”
 
“நன்றி. ஆனா ஒரு விஷயம். நீ சொன்னதை அப்படியே பண்ணியிருந்தா நீ பண்ற மாதிரியேதான் வரும். அதை விட பெட்டராவும் வராது, அதை விட மட்டமாவும் வராது. சேம் ப்ராசஸ் வில் ஆல்வேஸ் புரோட்யூஸ் சேம் ரிசல்ட்.”
 
“சரி. அப்ப எதை மாத்தினீங்க?” 
 
“சொல்றேன், ஆனா சொன்னப்புறம் அதானே பார்த்தேன், அப்பவே எனக்கு சந்தேகம். இதை இது பண்ணா இப்டித்தான் ஆகும்ன்கிற மாதிரி பேச மாட்டேன்னு பான்ட் எழுதி கையெழுத்துப் போடு”
 
“அய்யோ கடவுளே, என்னைத் தெரியாதா உங்களுக்கு? சொல்லுங்க”
 
“சீக்கிரம் பண்ணதுக்கு முக்கிய காரணம் நான் ரவையை வறுக்கலை”
 
“ஐயேய்யே அப்ப கட்டி கட்டிடுமே….”
 
“இப்ப கட்டியா இருந்ததா?”
 
“இல்லை”
 
“அப்ப அது தேவையில்லைதானே?”
 
“அதெப்புடி சொல்ல முடியும்?”
 
“இத பார், ரவை ஈரமா இருந்தா கட்டி கட்டும். அதுக்குத்தான் வறுக்கிறது. ஈரம் இல்லாட்டா வறுக்க வேண்டாம். அப்படியே ஈரமா இருந்தாலும், தண்ணியை சுத்த விட்டிட்டு ரவையை தூவிகிட்டே இருந்தா கட்டி கட்டாது”
 
“ஆஹா… கிரேட்”
 
“கிரேட் நானில்லை. பூர்ணம் விஸ்வநாதன். சுஜாதாவோட வந்தவன் நாடகத்திலே அவர் சொன்னதைத்தான் செஞ்சேன்”
 
“அடேங்கப்பா… அப்பறம்… வேறென்ன வித்யாசம்?”
 
“நீ ரெண்டு பச்ச மொளகா போடச் சொன்னே, நான் ஆறு போட்டிருக்கேன்”
 
“அதானா… கொஞ்சம் இதுவா இருக்………”
 
“நோ….”
 
“ம்ம்ம்… சரி… அப்புறம்?”
 
“நீ தண்ணி ஒண்ணுக்கு மூணு போடச் சொன்னே. நான் அப்டியெல்லாம் அறித் மெட்டிக்கா போகல்லை. கிளர்ற வரைக்கும் அஸ் அண்ட் வெண்  ரிக்கொஐயர்ட ஊத்திகிட்டே இருந்தேன். மொத்தமா மூணரை வந்திருக்கும்”
“சரி…. வேறே?”
 
“தக்காளியை வெங்காயம் வதககறப்போ  போடல்லை. தண்ணி கொதிச்சப்புறம்தான் போட்டேன்”
 
“இதெல்லாம் சரி, அந்த சீக்கிரம் ஆனதுக்கு இன்னமும் ஜஸ்டிபிகேஷன் வரல்லையே?”
 
“அடுப்பைப் பத்த வச்சதிலேர்ந்து ஊத்த வேண்டிய தண்ணியை பர்னர் பக்கத்திலேயே வச்சிருந்தேன். ஊத்தறப்பவே அது பாதி சூடா இருந்தது”
 
“அய்யைய்யோ, அப்ப கேசும் மிச்சமாச்சே?”
 
“ஆமாம்’
 
“அட… இதையெல்லாம் எப்படி தெரிஞ்சிகிட்டீங்க?”
 
“நீ கொம்பு சீவி விட்டதாலே”
 
“அப்ப சிக்ஸ் சிக்மாவுக்கு கொம்பு சீவ ஒரு ஆள் தேவைன்னு சொல்லுங்க?”
 
“நிஜம்தான், ஆனா அதுக்கு முக்கியமா இன்னொன்னு தேவை”
 
“என்னது?”
 
“கொம்பு”

1 comment:

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றி..

Post a Comment