Pages

Search This Blog

Friday, September 07, 2012

வளர்த்‘தேன்’ தேனீ வளர்த்‘தேன், வளர்ந்தேன்!


தேனீ வளர்ப்பு மூலம் மிகக் குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் பெற முடியும் என நிரூபித்திருக்கிறார் ஒரு கண்டக்டர்

எதற்கெடுத்தாலும் நேரமே இல்லையே என்று நழுவிச் செல்லும் மனிதர்களுக்கு நடுவே, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தி வருகிறார் அரசு பஸ் கண்டக்டர் பார்த்திபன். கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள கொளப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது தித்திப்பான சேவை இது.


"என் குடும்பம் விவசாயக் குடும்பம். என் தாத்தா அவரின் காலத்தில் இரண்டு தேனீப் பெட்டி வைத்து தேன் எடுத்துக் கொண்டிருந்தார். நான் சிறுவனாக இருக்கும் காலத்தில் தோட்டத்திற்குப் போகும்போதெல்லாம் எனக்குத் தேன் எடுத்துக் கொடுப்பார். ஆனால் அந்த வயதில் தேனீ வளர்ப்பு குறித்து விவரம் தெரியாது. நடத்துநர் வேலை கிடைத்ததும் தேனீ வளர்ப்பை ஓய்வு நேரத்தில் செய்யலாமே என்ற யோசனை வந்தது. தேனீக்களின் முக்கியத்துவம் எனக்குப் புரியத் தொடங்கியதும், நான் மட்டும் செய்வதைவிட மற்றவர்களுக்கும் இதைக் கற்றுக் கொடுத்தால் என்ன எனத் தோன்றியது. அதற்காக என் வேலை போக மீதமிருக்கும் நேரங்களில் விவசாயிகளிடம் தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த முயற்சிக்கு, இப்போதுதான் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது" என்று கூறும் பார்த்திபன், தனது கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம் தேனீ வளர்ப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகள், மகசூல் அதிகரிப்பது, வியாபார வாய்ப்புக்கள் போன்றவற்றை எடுத்துக்கூறி, ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறார். சில விவசாயிகளின் தோட்டத்தில் இவரே முன்வந்து தேனீப் பெட்டிகளை வைத்து மகசூல் அதிகரிப்பதை நிரூபித்திருக்கிறார்.

தேனீக்கள், இயற்கை அளித்த வனதேவதைகள். தற்போதைய சூழ்நிலையில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அயல் மகரந்தச் சேர்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் தேனீக்கள் குறைந்ததால் அதிக மகசூல் என்பது கனவாகவே இருக்கிறது. தேனீக்கள் வளர்க்கும்போது அயல் மகரந்தச் சேர்க்கை அதிகரித்து மகசூலும் பெருகும் என்பதை வேளாண்மைப் பல்கலைக்கழகம் நிரூபித்த போதிலும் விவசாயிகள் யாரும் அதை நம்பத் தயாராய் இல்லை. அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, நானாகவே விவசாயிகளின் தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை இலவசமாக வைத்து, பராமரித்து மகசூல் அதிகரிப்பதை நிரூபித்தேன். ஆரம்பத்தில் நம்ப மறுத்த விவசாயிகள், தற்போது தேனீ வளர்ப்பு குறித்து அறிந்துகொள்ள ஆர்வத்துடன் வருகின்றனர்" என்று கூறும் பார்த்திபன், தான் எந்த ஊருக்கு தேனீப் பெட்டியை வைக்கச் சென்றாலும் குடும்பத்துடன்தான் செல்கிறார். பார்த்திபனைப்போலவே அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் தேனீ வளர்ப்பு உத்திகள் அனைத்தும் அத்துப்படி.

 


டேவிட் சூசை மாணிக்கம் என்பவர், "நான் பகுதிநேரமாக அகுபங்சர் மருத்துவம் பார்த்து வருகிறேன். நோயாளிகள் பலருக்கு என் தோட்டத்தில் வைத்துள்ள தேனீப் பெட்டியால் சுத்தமான தேனைக் கொடுக்க முடிகிறது. மேலும் பல பராமரிப்புப் பணிகள் செய்தாலும் மரத்திற்கு 5 காய்கள் கொடுத்த தென்னை, தேனீப் பெட்டிகள் வைத்ததும் 20 காய்கள் கொடுத்தது. தற்போது தென்னை மட்டுமல்லாது மிளகு, சப்போட்டா, மிளகாய் போன்றவையும் அதிக மகசூல் கொடுக்கிறது" என்றார்.

இந்தியத் தேனீ, வெளிநாட்டுத் தேனீ (அ) இத்தாலிய தேனீ மற்றும் கொசுத் தேனீ (இந்த வகைத் தேனீ கொட்டாது) ஆகிய மூன்று வகைத் தேனீக்கள் பார்த்திபனிடம் உள்ளன. "இந்திய மற்றும் இத்தாலிய தேனீப் பெட்டிகளில் மாதம்தோறும் குறைந்தபட்சம் ஒரு கிலோ தேன் கிடைத்துவிடும். கொசுத் தேனீயில் மாதத்திற்கு 300 கிராம் மட்டுமே கிடைக்கும்.

இந்திய தேனீக்களின் தேன் கிலோ 400 ரூபாயிலிருந்தும், இத்தாலிய தேனீக்களின் தேன் கிலோ 600 ரூபாயிலிருந்தும் விலை போகின்றன. கொசுத் தேனீயின் தேன் கிலோ 2,000 ரூபாய்வரை விலை போகிறதாம். இதனால் விவசாயிகளுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிப்பதுடன் சுத்தமான தேனும் கிடைக்கிறது.

தேனீ வளர்ப்பில் முதலீடு என்பது பெட்டிகள் மட்டும்தான்.இந்திய தேனீப் பெட்டிகள் 4,000 ரூபாயிலிருந்தும்,இத்தாலிய தேனீப் பெட்டிகள் 6,500 ரூபாய் வரையிலும் கிடைக்கின்றன.தற்போது மாதம் 50 கிலோ தேன் எனக்கு கிடைக்கிறது. சில விவசாயிகளின் நிலத்தில் என் செலவில் தேனீப் பெட்டிகள் வைத்துப் பராமரித்து, மாதம் தோறும் கிடைக்கும் தேனில் எனக்குப் பாதி, தோட்ட உரிமையாளருக்குப் பாதி எனப் பிரித்துக்கொள்கிறோம். தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்புகளும் எடுத்துவருகிறேன்" என்கிற  பார்த்திபன், தேன் எடுப்பதற்கான கருவிகளை தன் சொந்தக் கிராமத்திலேயே தயாரித்து வருகிறார். இதன்மூலமும் சிலர் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகின்றனர்.

தேனீக்களினால் தேன் மட்டும் கிடைப்பதில்லை.விலை போகக்கூடிய பல பொருட்கள் கிடைக்கின்றன (பார்க்க: பெட்டிச் செய்தி). "தேனீக்கள் வளரும் காலமான 5 மாதங்களுக்கு அவற்றிற்கு உணவு வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். பராமரிப்பிற்காக நாம் செலவிட வேண்டியது மாதம் 15 நிமிடங்கள் மட்டுமே. தேனீக்கள் வளர்ந்து உணவு தேடத் தொடங்கும்போது நமக்கு மாதம்தோறும் பலன் கிடைக்க ஆரம்பித்துவிடும். மாந்தோப்பில் பெட்டி வைத்தால் மாம்பழத் தேன், வாழைத்தோப்பில் வைத்தால் வாழைத் தேன் என விதவிதமான தேன்களைத் தயாரிக்கலாம்.தற்போது மார்க்கெட்டில் செவ்வாழைத் தேனிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது" எனத் தேனீ வளர்ப்பு குறித்த டிப்ஸ்களை அள்ளி வீசினார்.

"தற்போது சிறிய அளவில் செய்யப்படும் தேனீ வளர்ப்பை விவசாயிகள் பெரிய அளவில் செய்தால் அதிக உற்பத்தி மட்டுமின்றி தேன் விற்பனை போன்ற தொழில்கள் மூலமும் பயன் அடையலாம்" என்கிறார் உறுதியான குரலில். பார்த்திபனை தொடர்புகொள்ள: 94421 71818.
 


தேனீக்கள் மூலம் கிடைக்கும் இதர பொருட்கள்
 
மகரந்தத் தூள்: தேனீக் கூட்டில் கிடைக்கும் மகரந்தத் தூள்கள் பலவகைப் பூக்களிலிருந்து சேகரிக்கப்படுவதால் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. மகரந்தத் தூளுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலும் தேனீக் கூடுகள் மூலம் மகரந்தத் தூள் சேகரிப்பது தொழிலாகவே நடக்கிறது.

தேன் மெழுகு: தேனீக் கூட்டிலிருந்து தேனை சேகரித்து முடித்ததும் மீதமிருக்கும் கூட்டைக் கொண்டு தேன் மெழுகு தயாரிக்கப்படுகிறது. இந்த மெழுகு பல வகையான பயன்களைத் தருகிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் பலருக்கும் பயன் தரும்...

கண்டக்டர் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...

Post a Comment