நாம் செய்யும் வினை நல்வினை, தீவினை என இரு வகைப்படும்.
இவ்விரு வினைகளையும் மனம், மொழி, மெய் என்னும் மூன்றாலும் செய்கிறோம்.
நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் மனத்தால் செய்யப்படும் வினைகள்.
நல்ல சொற்களும் தீய சொற்களும் மொழியால் செய்யப்படும் வினைகள்.
நல்ல செயல்களும் தீய செயல்களும் மெய்யால் செய்யப்படும் வினைகள்.
நம் மனத்தில் நல்ல எண்ணங்களோ தீய எண்ணங்களோ தோன்றுவதற்கு நம் மனமே காரணம்.
அன்பு, அருள், பொறுமை முதலியன நம் மனத்தில் நிறைந்திருந்தால் நல்லனவற்றை எண்ணுவோம்.
அழுக்காறு, வெறுப்பு, வெகுளி முதலியன நிறைந்திருந்தால் தீயனவற்றை எண்ணுவோம்.
நல்ல எண்ணமாகிய நல்வினையையும் தீய எண்ணமாகிய தீவினையையும் நாமே செய்கிறோம்.
நம் மனத்தில் தோன்றும் நல்ல எண்ணங்களின் காரணமாக நல்ல சொற்களைச் சொல்கிறோம்; இது மொழியால் செய்யப்படும் நல்வினை.
நம் மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களின் காரணமாகத் தீய சொற்களைச் சொல்கிறோம்; இது மொழியால் செய்யப்படும் தீவினை.
நம் மனத்தில் தோன்றும் நல்ல எண்ணங்களின் காரணமாக நல்ல செயல்களைச் செய்கிறோம்; இது மெய்யால் செய்யப்படும் நல்வினை.
நம் மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களின் காரணமாகத் தீய செயல்களைச் செய்கிறோம்; இது மெய்யால் செய்யப்படும் தீவினை.
நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு நாமே காரணம்; நாமே பொறுப்பு.
நாம் எண்ணுவது நல்ல எண்ணமா, தீய எண்ணமா என்பது நமக்குத் தெரியாதா என்ன?
தெரியும்; ஆனாலும் சில வேளைகளில் தீயனவற்றையும் எண்ணுகிறோம்; காரணம் என்ன?
நம் மனமே இதற்குக் காரணம்.
சரியானதைப்
பிழையானதென்றும் பிழையானதைச் சரியானதென்றும், நல்லதைக் கெட்டதென்றும்
கெட்டதை நல்லதென்றும் பிறழ்ந்து சொல்வது மனத்தின் இயல்பு.
சரியானதைச்
சரியானதென்றும் பிழையானதைப் பிழையானதென்றும், நல்லதை நல்லதென்றும்
கெட்டதைக் கெட்டதென்றும் கணித்துச் சொல்வது அறிவின் இயல்பு.
பெரும்பாலும் மனம் சொல்வதையே நாம் கேட்கிறோம்; அறிவு சொல்வதைப் புறந்தள்ளுகிறோம். அறிவு சொல்வதை நாம் ஒதுக்குவதற்கும் மனமே காரணம்.
மனம்போன போக்கெல்லாம் போதல் கூடாது என்பது ஆன்றோர் அறவுரை.
அறிவு காட்டும் வழியில் மனம் செல்லவேண்டும்; மனம் சுட்டும் வழியில் அறிவு செல்லக்கூடாது.
நாம் செய்யும் நல்வினைகளுக்கும் தீவினைகளுக்கும் நாமே காரணம்; இறைவர் அல்லர்.
7 comments:
மனம்போன போக்கெல்லாம் போதல் கூடாது என்பது ஆன்றோர் சொன்னது நல்ல இருக்கு தொடருங்கள்
நல்ல கருத்துக்கள் பலப்பல... தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...
அருமை.............
அருமையாய் சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள் ! தொடருங்கள்!
பாஸ் நட்ப வளத்துக்க சொன்னீங்க உங்க தளத்தை கண்டுபிடிக்கிரதே பெரிய சவாலா போச்சு எனக்கு google+இல் எனது தளம் என்று உங்கள் தள முகவரியை ABOUT பகுதியில் கொடுக்கலாமே
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
கருத்துக்கருவூலமான பகிர்வு!வாழ்த்துகள் மோகன்
Post a Comment