Pages

Search This Blog

Monday, May 27, 2013

குடிநீரா விற்கப்படுவது கெடு நீர்.....

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவப் பேராசான். ஆம். அண்டத்தின் கோள்களில் உயிர்ப்போடு இருக்கும் கோள் பூமி என்பதற்கு ஆதாரமே தண்ணீர்தான். மண் மட்டுமல்ல, மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தண்ணீரின் தயவில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
மனித உடலில் நரம்புகள், எலும்புகள் இருப்பதைப் போலவே பூமிக்கு ஆறுகளும், ஓடைகளும், குளங்களும், குட்டைகளும் ரத்த நாளங்களாகவும், உள்ளிருக்கும் பாறைகள் உள்ளிட்ட கனிமவளங்கள் சதைகளாவும் விளங்குகின்றன.

ஆனால், நோய்க்கிருமிகள் எப்படி மனிதரின் ரத்த நாளங்களையும், சதைகளையும் அழித்து உடலைப் பாதிக்கின்றனவோ அதுபோலவே வளர்ச்சி எனும் பெயரில் ஆறுகளை அழித்தும், கனிம வளங்களை வெட்டியெடுத்தும் பூமியை நாம் பாதிக்கச் செய்கிறோம்.

நீரும், கனிம வளங்களும் அதனதன் விகிதத்தில் இருந்தாலே நாம் வாழும் பூமியும் நமக்குப் பாதுகாப்பான தளமாக இருக்கும். இதில் எந்த கனிமவள விகிதம் குறைந்தாலும் ஆபத்துதான்.

ஏற்கெனவே பாறைகள் "கிரானைட்' எனும் பெயரில் பூமியிலிருந்து பெருமளவில் வெட்டியெடுக்கப்படுவதால், பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பு பகுதியாக கருதப்பட்ட இடங்களெல்லாம் தற்போது எளிதில் பூகம்பம் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலத்தடி நீரின் அளவும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆம்....தமிழகத்தின் பல நகரங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் நூறடி, இருநூறடி ஆழத்தில் நீர் கிடைத்த காலம் மலையேறிவிட்டது.

இதை உணர்ந்துதான் கடந்த அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா "மழை நீர்சேகரிப்புத் திட்டத்தை'க் கொண்டுவந்தார். அத்திட்டத்தின் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் அரசியலாக்கி முழுமையாகச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர். தற்போது கூட மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு மக்கள் முக்கியத்துவம் தராமலிருப்பது யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதுபோல உள்ளது.

தமிழகத்தில் பெரிய குடிநீர்த் திட்டங்கள் கூட நிலத்தடி மற்றும் ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் ஆறு இல்லாத, ஓடை மற்றும் பெரிய ஏரிகள் இல்லாத பகுதிகளுக்கு குறிப்பிட்ட ஆறு, ஓடைகளில் இருந்துதான் குடிநீர் கொண்டுசெல்ல திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்போது வைகை ஓடும் மதுரைக்கும், தமிழத்தில் பெரிய கண்மாய் உள்ளதாகக் கூறப்படும் ராமநாதபுரத்துக்கும் கூட காவிரி ஆற்றிலிருந்தே குடிநீர் கொண்டுவர வேண்டியுள்ளது.

நிலைமை இப்படியே போனால், அடுத்த மாநிலங்களோடு தண்ணீருக்காகத் தமிழகம் போராட்டம் நடத்துவது ஒருபுறமிருக்க, இங்கேயே அடுத்தடுத்த ஊர்களுக்குள்ளும் குடிநீருக்காகப் போராடும் அபாயமும் உள்ளது.

நீருக்காக ஒருபுறம் போராட்டம் தொடங்கியிருக்கும் நிலையில் அந்தக் குடிநீரையும் மக்களுக்குச் சுத்தமாக வழங்குகிறோமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனிதர்களுக்குள் பரவும் தொற்றுநோய்களில் 60 சதத்துக்கும் மேலானவை தண்ணீர் மூலமே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குடிநீரில் கலந்திருக்கவேண்டிய கனிம அளவை உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கனிமம் அதிகமாகி அந்த நீரை அருந்தும் மக்கள் குறிப்பிட்ட நோய்ப் பாதிப்புக்குள்ளாவது தொடர்கிறது. நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் உப்பும், திண்டுக்கல், கரூர், மதுரை, நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்டவற்றில் இரும்பும், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்டவற்றில் நைட்ரேட்டும், தேனி, ஈரோடு, விருதுநகர் பகுதிகளில் புளோரைடும் குடிநீரில் அதிகமிருப்பது தெரியவந்துள்ளது.

குடிநீரால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே குளோரின் மற்றும் பிளீச்சிங் பவுடர் மூலம் குடிநீரைச் சுத்திகரிப்பது நடைபெறுகிறது. ஆனால், தற்போது நவீன முறை எனும் பெயரில் "சில்வர் அயோனைசேஷன்' முறையால் குடிநீரைச் சுத்திகரிக்கத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனமே குடிநீரைச் சுத்தம் செய்ய குளோரின் பயன்பாடு நல்லது என ஏற்றிருக்கிறது. ஆனால், இப்போது "சில்வர் அயோனைஷேசன்' முறையில் குடிநீரைச் சுத்திகரிக்கப் போவதாகக் கூறுவது மனித நலத்துக்கு கேடுவிளைவிப்பதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களது கருத்து.
"சில்வர்' என்பது மனித உடலில் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதன் அளவு கூடினால் சிறுநீரகம், கணையம், நுரையீரல், இதயம், மூளை நரம்பு மண்டலம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அரசு குடிநீர் திட்டங்களிலும், தனியார் விற்கும் குடிநீரிலும் எந்தெந்த உலோகம் எந்த அளவுக்குக் கலந்திருக்கிறது, அவற்றால் உடல் நலத்துக்கு எந்த வகையில் நன்மை என்பதைத் தெரிவிப்பதில்லை.
குடிநீரைச் சோதனையிட்டதற்காகவே தனியார் குடிநீர் விற்பனையாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில் அந்த நீரில் உள்ள உலோகம் குறித்து எங்கே தெரிவிக்கப் போகிறார்கள்? அவர்கள் விற்கும் குடிநீர் எங்கு, எந்த முறையில் எடுக்கப்படுகிறது, எந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறது, அது உடல்நலனுக்கு உகந்ததா என்பதைக்கூட அவர்கள் தெரிவிக்க முன்வருவதில்லை.

ஆக, நாம் வாங்கும் குடிநீரானது உடல் நலத்துக்குச் சரியானதா, எதிரானதா என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. அவ்வாறில்லை எனில் அது கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடும் என்பதே உண்மை.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் நிலை மோசமாகும் என்பதும் உண்மை... விழிப்புடன் இருப்பது நலம்...

நன்றி...

வெற்றிவேல் said...

இப்படியே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!!

நல்ல பதிவு!!!

priyamudanprabu said...

நல்ல பதிவு

Post a Comment