பிறவிக்கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதைவடிவில் வழங்கியுள்ளோம்.
தீர்க்கதரிசி
அன்னையை வணங்குதல் அனைத்திலும் சிறந்ததாம்
உயிர்தந்து மெய்தந்து அகத்தின் இருள்நீக்கி
ஞாலத்தை காட்டியவள் ஓர் அன்னை
உயிர்மெய் ஆயுதம்தந்து அகத்தின் இருள்நீக்கி
ஞானத்தை தீட்டியவள் ஓர் அன்னை
உயிர்மெய் ஆயுதம்தந்து அகத்தின் இருள்நீக்கி
ஞானத்தை தீட்டியவள் ஓர் அன்னை
முதலன்னை சுட்டியபின்னே நேசத்தினரை நாமறிவோம்
தமிழன்னை சுட்டித்தந்த ஆசானையும் வணங்கிடுவேன்
ஞாயிற்றை தொட்டுவிடல் மிக அரிதாம்
ஞாலத்தை காலால் சுற்றிவரல் மிக அரிதாம்
இமயத்தை கடந்துவிடல் மிக அரிதாம்
இதயத்தை அறிந்துவிடல் மிக அரிதாம்
இவையெல்லாம் அரிதென்று மலைத்து நின்றால்
இப்புவியில் மண்துகளை எண்ணிச்சொல்லுதல்
பாரதியை பாட்டால் செய்யுதல்
நெருப்புக்கு வெம்மைதர விரும்புதலும்
அன்னைக்கே அன்புகாட்ட எண்ணுதலும்
நகைப்பிற்க்கே உரியதென யானறிந்தும்
பாரதியை பாட்டெழுத முயலுகின்றேன்
மழலைதனை பொறுத்தருள்வீர் ஆன்றோரே!
மழலைதனை பொறுத்தருள்வீர் ஆன்றோரே!
பிறந்தது பிழம்பு..!
சித்திரபானு வருடம்
வெண்தலையர் நிம்மதியும் நித்திரையும்
தொலைந்துபோன வருடம்
காரிருள் நீக்கிடவே வானுதித்த கதிரவனாய்
தென்கோடி தேசத்திலே எட்டைய புரத்திலே
சீர்குடிலில் அவதரித்தார் சீர்திருத்தச் செம்மலவர்
சின்னச்சாமி ஐயருக்கும், இலக்குமி அம்மாளுக்கும்,
ஆனந்தம் தந்த கன்று - அது
அறிவினில் உயர்ந்த குன்று
தலைமகனாய் தரையைத் தொட்ட தெய்வீகம் - அவர்
கலைமகளின் கற்பனையில் முழுவிகிதம்
எட்டையபுரமே எட்டிப்பார்த்தது ஆதவனின் முகத்தை
ஆண்மூலம் அரசாளும் உண்மை உண்மை
அன்பான அன்னை வயிற்றில் இருந்து
அவதரித்த தொரு அக்கினிக் குழந்தை
பஞ்சு மேனிதனை பலர் வந்து பாராட்ட
பிஞ்சுக் கரம் பற்றி பலவாறு விளையாட
அந்தனர் வீடெங்கும் அளவிலா இன்பங்கள்
பாற்சோறும் நெய்ச்சோறும் பார்த்தெடுத்த பழச்சாறும்
அன்னையின் மடியமர்ந்து ஆனகதை கேட்டுஉண்டான்
ஆண்மையை நாட்டவந்தான்
அருட்செல்வம் பொருட்செல்வம் பொங்கிவீழ
மகட்செல்வம் வந்துதித்த மகிழ்ச்சியிலே
ஈன்றோர் ஈன்றனர் பிறவிப்பேறு
அந்தண்ராய்ப் பிறந்து அருவணிகம் புரிந்து
அறிவினில் சிறந்து அல்வழி துறந்து
வேண்டுவோர்க்கு கொடைநல்கி விருந்துகள் படைப்பித்து
விண்ணவரைத் தொழுதுண்டு வாழ்ந்த்தவராம் சின்னச்சாமி
அன்புருவம் கொண்டு அவரகத்தில் செய்தொண்டு
என்புருகும் பண்பு அவர் மண்ணில் பெருமாண்பு
இல்வாழ்வானே எல்லாமும் நல்லோரே தெய்வீகம் - என
வாழ்ந்திட்ட விளக்கொளி கவியன்னை இலக்குமி
பெயரிடல்..!
வேலெடுத்து வினைகளைந்தான் ஒருசுப்பன் - எழுது
கோலெடுத்து சினம்தொடுத்தான் மறுசுப்பன்
உறவினர் யாவரும் உவகைகொள்ள
திறமிகு வேதியர் அறம்நல்க
செப்பினர் காதினில் ஒருபெயர்
சுப்பிரமணிஎனும் திருப்பெயர்
மட்டில்லா வளமிகுந்த திருநாடு
எட்டையா புரமென்னும் ஒருநாடு
மரச்சோலை மலர்ச்சோலை பலவுண்டு
அறச்சாலை திறச்சாலை சிலவுண்டு
மன்னரினம் ஆண்டுவரும் சமஸ்தானம் - அது
விண்ணவரும் விரும்பிவரும் ஒருஆஸ்தானம்
இளமைப்பருவம் அது வளமையின் உருவம்
கட்டவிழ்ந்த காளைபோல குதித்தாடும் குரும்புக்காலம்
சிறார் செய்கை சிறந்ததோர் வேடிக்கை
அவர்க்கு அது ஆராய்ச்சியின் ஆரம்பக்காலம்
அண்டமே அசானம் அனுபவமே அரிச்சுவடி - என
அவர் கண்டன எல்லாம் கவித்துவம் பெற்றன
உலகனைத்தும் உறங்கிடும் பொழுதிலும் அவர்தம்
உள்ளம் உழைத்திட்டது
சமத்துவம் சமைத்த சந்திர முகத்தான் - தான்
வளரும் பொழுதே யாரென உரைத்தான்
திறம் எங்கு கண்டாலும் அனைத்துப்போற்றினான்
அயலார் அவப்பார்வை ஏற்றினான்
தரமான பொருள்ஒன்றை சமைத்துவிட்டு
குறையொன்று செய்திடுதல் இறைலீலை
கதிர்வீச்சு மதிகொண்ட மன்னனிவன்
சதிராடும் இளவயது மனம்நோக
விதிஇட்ட வலிமிகுந்த தண்டனை - அன்னை
மடிஇழக்க விதித்திட்ட நிந்தனை
வேரறுந்த விருட்சமது யாருமற்று துடித்தது - விதி
வேதனையில் செய்தபிழை கடிந்தது
கரம்கொண்டு கதிரவனை மறைத்தாலும் ஆகுமோ?
திறம்கொண்டு காலத்தை நிறுத்திவிடல் இயலுமோ?
நரிகண்டு அரிமாவும் நடுங்குதல் நியாயமோ?
எரிதனலை திருத்தித்தினவு சொரிதலும் நிகழுமோ?
பதிமூன்றாம் அகவையிலே கவிநிறை அவையிலே
படைத்திட்டான் ஒருகவி 'பாரதி' பெயரீண்ட குறுங்கவி
கடுகதனை உருக்கண்டு கணிப்பது மடமை
கவியிவன் ஒருகண்ணே கதிரவனின் மறுமை
காற்றையும் கடலையும் கைப்பையுள் கட்டிவிட முடியுமோ?
அண்டமதைச் சட்டமிட்டு அடக்கி ஆண்டிட முடியுமோ?
பாரதியின் பார்வைக்கு போர்வையிடல் நடக்குமோ?
விரித்தான் பார்வையை.. அனைத்தும் அகப்பட்டது
அர்ப்பமதைச் சுட்டெரிக்கும் ஆதவன்போல்
ஆழ்கடல் ஞால்மீட்ட மாதவன்போல்
அச்சமத்தை அறிந்திடாத அர்ச்சுனன்போல்
கருத்துக் கருக்கொண்டான் - தீயன
வெறுத்துச் சினம் கொண்டான்
திருமணம்
தில்லையரசரின் திருத்தொண்டர்
நெல்லைமேற் கடயத்திருந்தவர்
செல்லமாய் ஈன்றிட்ட பூங்கோதை
செல்லம்மாள் பெயரெய்திய தோர்பேதை
அடக்கம் அவர் ஆபரணம்
அழகிற்கே அவர் உதாரணம்
நெறிபிறழா ஒழுக்கத்தின் ஆலயம்
பாரதிக்கு பார்த்திட்ட சுருதிலயம்
பாரதிக்கு பதினான்கு பாவைக்கோ ஏழு
பாலருக்கு மணமுடித்தல் அன்று பண்பாடு
அந்நாளில் அசிங்கமான ஓர் விளையாட்டு
குழந்தை ஞானியைக் கண்ட மடந்தைக்கோ மனப்பயம்
பாரதிக்கோ அது அலட்சியம்
மனமுடிந்த சிலநாளில் தந்தையின் தொழில்முறிய
மனதுடைந்து, மதிகுழைந்து, தனம்தொலைத்து
அல்லலுற்றார் சின்னச்சாமி
மணலிலிட்ட மீன் வாழுமோ?
வீரமிகு பாரதியை மண்ணுலகில் விட்டுவிட்டு
ஆரவாரம் ஏதுமின்றி விண்ணுலகம் எட்டிவிட்டார்
செல்லம்மாள் கடையத்தில் பாரதியோ அவரிடத்தில்
முதலில் தாய்போக தந்தையும் தான்போக
நுதலில் ஏக்கத்தை இறையவனும் ஏன்தந்தன்?
பச்சைக் குழந்தையைப் பாரினில் தனியாய்ப்
பரிதவிக்க விட்டுவிட்டு வல்லனோ லீலைஎன்றான்
தாயில்லாத தன்னை காத்தவர் தந்தை
அவர் வாழ்ந்த ஊரினில் அவரின்றித்
தான் வாழ்தல் வேதனை
அத்தையின் அழைப்பேற்று சித்தம் வீடுவிட்டு
அரைமதி கொண்டவராய் காசிக்கு புறப்பட்டார்
கைலாயத் தென்றல் கவிழ்ந்துவரும் நகரம்
கங்கைநதிக் கரையினிலே காட்சிதரும் சிகரம்
சமயவல்லார் எல்லோரும் சங்கமிக்கும் சரணாலயம்
இமயமலை அடியிருக்கும் மறுமையின் நுழைவாலயம்
நன்மையும் தீமையும் கலந்ததே இவ்வுலகம் - மதி
நுண்மையும் மடமையும் கலந்ததே ஆண்மீகம்
பாரதிக்கோ நன்மை கண்டால் ஆனந்தம்
அன்மை கண்டால் அவனோர் தீப்பந்தம்
மூடக்கருத்துக்கள் முடங்கிப்போகுமாறு
வெறுத்தான் கட்டுக்களை
ஒருத்தான் மடமைகளை
அந்தனர் விரும்பா அரிவாள் மீசை
அறிவிழிகள் மிரளும் பொறிபறக்கும் பார்வை
நிமிர்ந்த மார்பு சிலிர்த்த நடை
மாறினான் பாரதி, ஆற்றினான் புதுவிதி
சிங்கப்பிடரிபோல் தலைப்பாகை - ஆங்கே
சிங்காரமாய் வீற்றிருந்தாள் கலைப்பாவை
எட்டையா புரத்தரசர் எட்டினார் காசியை
சிறுவன் பாரதி இன்று சீர்திருத்தப் பேரருவி
திறம்கண்ட சிற்றசர் உடம்வர வேண்டினார்
பாரதி..
என்னுடன் வந்துவிடு எல்லையுள் தங்கிவிடு
அரண்மனையில் வேலையுண்டு அமைதியான வாழ்க்கையுண்டு
நித்தம் நித்தம் உன் ஞானம்கொண்டு
சுற்றும் முற்றும் தேற்றிவிடு
தாய்மடி சேர தனையனும் தயங்குமோ?
சிறுவனாய் ஒருவனாய் அகன்ற பாரதி-இன்று
அகண்ட பாரதி
அரசவைக் கவிஞர் அரசரின் தோழர்
சொல்லொன்னாத ஆனந்தம் செல்லம்மாளின் மனதில்
இனிய இல்லறம் இனிவரும் நல்லறம்
என்றெண்ணி ஏகாந்தம் கொண்டாள்
கடையத்தின் தாள்திறக்க கணவனின் குடிலுக்கே
கற்பனை பலகொண்டு கவிதையாய் வந்தாள்
அறத்தைப் பாடப் பிறந்தவருக்கே - ஒரு
நரத்தைப் பாடப் பிடிக்குமோ?
புதுஉதிரம் சுவைக்கும் புலிக்கு
புற்கட்டு சுவையாகுமோ?
அரசனின் குணமோ ஆளுதல் - பாடல்
அரசனின் மனமோ மீளுதல்
மனக்குமுறல் பாடலாக
பினக்குகள் ஊடலாக
மதுரைக்கு பயணித்தார் மனைவியுடன்
சேதுபதிப் பள்ளியிலே - தமிழ்
ஓதுவராய் மூன்று மாதம்
சுதேசமித்திரன்,
இது ஜி.சு.ஐயரின் தமிழ்ப்புத்திரன்
பாரதியின் பரந்த அறிவும் சிறந்த திறனும்
ஜி.சு.ஐயரின் கண்ணிற்ப் பட்டது
பாஅரசன் கால் சென்னை மண்ணிற்ப் பட்டது
உதவி ஆசிரியர் பொருப்பு-பாரதியால்
உண்டானது பெரும் சிறப்பு
பொங்கிவரும் பாரதியின் தமிழாட்சி
ஓங்கியது செந்தமிழின் பெறுமாட்சி
கனவுகளை கற்பனையை நினைவுகளை சிந்தையை
தூண்டிவிடும் ஓர் மருந்து-பாரதிக்கு
இப்பணி ஓர் விருந்து
மனமயங்கிப் பொருள் தேடும் கலிகாலம்-பாரதிக்கு
இது தினவெடுத்து பகைஒடுக்கும் போர்க்காலம்
இரண்டரை ஆண்டுகள்
இனிதாய்ப் பணிசெய்து
விடுதலைக் கனலால்
வெகுண்டெழுந்து பின்னரே
புறப்பட்டார் வேட்டைக்கு
பயம் விடுத்து பேனா எடுத்து
எத்தனைப் புத்தகம் இயலுமோ
அத்தனையும் படித்தார்
எத்தனை மொழிகள் இயலுமோ
அத்தனையும் கற்றார்
அவர்மனம்
அன்னிய மொழிகளையும் அர்ச்சிக்கும்
காசியிலே காங்கிரசார் மாநாடு
கல்கத்தாவிலே நிவேதிதா வழிபாடு
புத்தம் புதுப்புனலாய் அவர் வரும்போது
பெண்ணடிமைப் பேயிங்கு அலறியது
திடமான மனம்கொண்ட அழகர்
தீரத்தின் மறுவுருவாம் திலகர்
சூரத்திலே பாரதியை சந்தித்தார்-பின்
சீக்கிரமே விடுதலையென சிந்திதார்
அல்லிக் கேணியிலோர் அண்ணல்
சொல்லில் சூடொழுகும் கன்னல்
திருமலாச்சாரி என்பதவர் பெயர்
விடுதலை தேடித் துறந்தார் அயர்
ஆங்கில மோகம் ஆட்டம் போட்டபோழ்து
தீங்கிது எனக்காட்டி விடுதலைத்
தீயினை தமிழ்க் காற்றில் கலந்தே பரவிவிட
தருனம் நோக்கித் தவம் இருந்தார்
ஏங்கிய மருந்தொன்று இடறிடக் கண்டார்
பாங்கான வீரத்தை பாரதியில் கண்டார்
இவ்விருவர் வீரத்தில் விழைந்தது புரட்சி
'இந்தியா' இதழ் மலர பாரதிக்கு மகிழ்ச்சி
காந்தமும் இரும்பும்
கண்டிப்பாய் இணையும்
இந்தியாவில் விடுதலைதீ வெற்றிநடை பயின்றது
அமிழ்தான தமிழில் அரக்கத்தை நுழைத்து
ஆங்கிலேயர் ஆட்சிக்கு உறக்கத்தைக் கலைத்தார்
அரசர் பரிசில் தரல் அரிதன்று
ஆண்டி உதவி தரல் எளிதன்று
அடிபட்டோர் போராடல் அரிதன்று
அந்தனர் போராடல் எளிதன்று
அன்று
விடுதலை வேள்வியில் குளிர்கண்ட பலருண்டு ஆனால்
பாரதி எரிதனல் தன்னுடலிட்டு அறியாமைக்கு உலையிட்டான்
பாரதி
கருங்காலிப் பரங்கியரின் தலையில் ஓர் ஆணி-அவன்
கற்பனைக்குள் எட்டாத நிலையிருந்த ஞானி
மொழிப்பிரிவால் இனப்பிரிவால் அழிந்தாபோகும் இந்தியத்தீ?
பிறமொழி பேசிவரும் பாரதத்தின் புதல்வருக்கே
பாலபாரதமெனும் இதழ்தனை பரிசளித்தான் ஆங்கிலத்தில்
இனிதான இல்லறத்தின் பரிசு
தங்கம்மாள் சகுந்தலை எனுமிரு வாரிசு
ஆரியான் என்றபெயர் கொண்டதொரு தோழன்-அவர்
பாரதியின் பாசத்திற்கு சொந்தமான வீரன்
தீதுகொண்ட ஆங்கிலேயரின் ஆட்சியிலே நொந்து
பாதிரியாய் மாறிப்போனார் சாட்சியாக நின்று
பாரதி..!
மையிட்டு எழுதுவது கற்பனையின் காட்சிகள் மட்டுமன்று
பொய்சுட்டு புதுமை செய்யும் தீயிட்டும் எழுதுவது
பாரதியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
பாமரனின் மனதினுள் வெடிமருந்து
வீரருக்கு போற்கலையை புகட்டுவித்தல் எளிதப்பா
துவண்டுவிட்ட தோழர்களை தூண்டிவிடல் விந்தையப்பா
ஆதிக்க வெறிகொண்ட அன்னியருக்கு அரவம்-அவன்
அனைத்திற்கும் ஆண்மைதரும் ஆச்சரிய திரவம்
ஒருதாய் மக்கள் நாமே ஒருப்பாய் அன்னியமென்றே
சிறப்பாய்ச் சொன்னான் தீ செழித்தெறியச் செய்தான்
சுதந்திரத் தீ சுற்றிச்சுற்றி சூறாவளியாய் சுடர்கொண்டது
சூனியம்செய் வெள்ளையர்தம் மனதில் இடர்கண்டது
பாரததேசமெங்கும் பற்றிஎரிந்தது சுதந்திர தாகம்
பதறியவெண்தோல் பலம்கூட்டி கொண்டது வேகம்
தீஅவர் சுட்டுவிரல் தீயவரை சுட்டுவிட
சட்டமது சிறையிட்டது
வணிகத்திற்க்கு கப்பலோட்டி துணிவுகொண்ட தமிழர்-அவர்
வ.உ.சி. என்றபெயர் கொண்டதொரு தலைவர்
சுட்டெரிக்கும் கொள்கைகொண்டு சுற்றிவரும் வீரம்-அவர்
சிதம்பரனார் நண்பரான சுப்பிரமணிய சிவம்
இவ்விருவர் உள்ளமதில் இருந்தார் ஒருகுரு-அவர்
இருளகற்றும் பணிசெய்யும் பாரதியெனும் தரு
இந்தியா இதழிலே வெளிவந்த யாவும்
அன்னியரின் தூக்கத்தை துரத்துவ தாகும்
அச்சுச் சட்டமியற்றி இந்தியாவின் சிறகொடித்து
வேண்டியபடி வேண்டாதவரை சிறையிட்டது வெளிரரசு
அச்சு எந்திரம் தடைப்பட்டது-பாரதியின்
மனத் தந்திரம் தலைப்பட்டது
நச்சுத்தலை நரிகளிடம் நழுவிவிட்டு
டச்சுத்தரை பாண்டிக்கு பாய்ந்துவிட்டார்
காற்றும் கடலலையும் காலமும் முகில்நிலையும்
என்றுமே ஓய்வை விரும்புவதில்லை
ஆறுமாதம் கழிந்த பின்னே
வீறுகொண்டு வெளியிட்டார்-'மீண்டும் இந்தியா'
பாரதியின் பாட்டிலுள்ள ஈர்ப்பு-அது
கொண்டுவந்து சேர்த்ததுபல நட்பு
குவளையெனும் வைணவரின் பாசம்-அது
கவலையெலாம் நீக்கிவிடும் நேசம்
தப்பறியா பக்தியினை சொல்லிவந்தார் ஒருவர்-அவர்
சுப்புரத்தினம் என்னும் வீரமிகு இளைஞர்
பாரதியின் பாசமிகு தொண்டர்-இவர்
பாட்டிழுத பிறந்துவந்த அன்பர்
மேல்நாடு சென்றுவந்த வ.வே.சு ஐயர்-அவர்
வாளெடுத்து போர்புரியும் இளைஞருக்கு ஆயர்
பாண்டியிலே பாரதியை
பிரிட்டன் காரனும் பிரெஞ்சுக் காவலும்
ஒன்றுசேர்ந்து விரட்டிப்பிடித்து
இந்தியா இதழையே இருட்டடிப்பு செய்தது
மாக்களின் வேட்டையினால் பாக்களின் தலைவனுக்கு
தனவரவு தடைப்பட்டது-அவர்வீடு வறுமையால் வதைப்பட்டது
பலநாட்கள் உணவறியாப் போராட்டம்
பாரதத்தின் சுதந்திரமே அவர்நாட்டம்
செல்லம்மாளும் சகுந்தலையும்
தங்கம்மாளும் பசித்தேயுரங்கும் பாவம்
மைத்துனியும் அவள் மனையாளனும்
பைந்தளிராம் தங்கம்மாளை காசிக்கு இட்டுச்சென்றனர்-அவள்
பசியை பாண்டியிலே விட்டுச்சென்றனர்
பாரதத்தாய் விலங்கொடிக்க
பாடிவரும் பாரதிக்கோ பரதேசிக் கோலம்-இது
பாரினிலே மானுடரின் பிறப்பிற்கே அவலம்
சற்றும் சளைக்கவில்லை-இது சிங்கம்
முற்றும் இழக்கவில்லை சிறிதும் களைக்கவில்லை
புவியும் மதியும் சற்றும் ஓயாது-பாரதியின்
கவியும் கனவும் சற்றும் தேயாது
துறவறத்தை கொண்டு வரம் தருவிந்தையர்
மருவிலாத உளம்கொண்ட அரவிந்தர்
குறைவிலாத மதிகொண்ட பாரதியை-அவர்
நிறைமனதால் வாழ்த்திவந்தார் நிஷ்டையிலே
ஆதியரும் அந்தனரும் வேதியரே என்றார்
சாதியெனும் வினையகல நீதிவரும் என்றார்
சுப்பையரின் சிந்தைகளை கண்டு மனமஞ்சி
தப்பாகவே அண்ணன் வீடுசென்றாள் மனைவிவிஞ்சி
தருமத்தைக் காக்க ஒரு 'கருமயோகி'-இது
சருமத்தை கொதிக்கவைத்த நெருப்புஆவி
பன்னிரெண்டு ஆண்டுகாலம் பாண்டிச்சேரி வாசம்
எண்ணிலாத துன்பங்களை மீண்டுவந்த காலம்
தலைமறைவுக்காலம் முழுவதும்
பாண்டி அவரை பாடாய்ப்படுத்தியது
அரியதிறன் கொண்ட அற்புதக் கவிஞனின்
அடுப்படி காய்ந்திருத்தல் அவலமோ அவலம்
ஆயினும் பொருள்தேடி அண்ணல் பாரதியோ
அடையவில்லை அணுஅளவும் சபலம்
தங்கவால் நரியெனும் ஆங்கிலப்படைப்பு
ஆங்கிலத்திலும் அவர்புலமையின் அறிவிப்பு
புருஷனின் பிரிவெண்ணி மருவிஊர்ச்சென்ற
திருவும் திரும்பவந்தார்-பாரதியின்
உருவம் அறிந்து நொந்தார்
பசிப்பினி போக்க, வறுமைத்தளை நீக்க,
குடும்பத்தை காக்க சென்னையுள் புக்க
பாரதி தலைப்பட்டார் எல்லையில் சிறைப்பட்டார்
கடையத்தில் காலம் கழித்திடவே
தடையொன்றை பரங்கியர் விதித்திடவே
சிறைச்சாலை மீண்டு மேற்கு
தொடர்ச்சோலை கண்டார்
குப்பையுள் போட்டால் வைரம்
குறைந்தா ஒளியை விடும்?
ஒப்பிலா சட்டமிட
ஒடுங்கியா வானம்போகும்?
அங்கும் அவர் மனிதம் தேட
அக்கிரஹாரத்தார் வசை பாட
தனக்கென ஓரிடம் அவர் நாட
பினக்குகள் வந்ததவர் கூட
பணத்தின் தேவையன்று விளங்கியது-புத்தகம்
படைத்திடும் வழியொன்று துலங்கியது
அரசனுதவி தேடமனம் தயங்கியது-அவர்
அல்லவென அன்புஉள்ளம் கலங்கியது
நெறியற்று வாழும் ஓர் ஊர்த்தலை-அவன்
பாரதியிடம் செய்துவிட்டான் ஓர் பிழை
சினம்கொண்டு வீசினார் சொற்சூலம்-அவன்
மனம்நொந்து எழுப்பியதோர் ஓலம்
பாரதி
ஓர் தன்மானத் தாளம் கோபத்தில் வேழம்
இறவாத காலம் புரட்சிக்கோர் பாலம்
சித்திரப்புதல்விக்கு மாலைதந்து-சுதேச
மித்திரன் பத்திரிக்கை வேலைகொண்டு
மீண்டும் சென்னை திரும்பினார்
கவிதையில் கட்டுரையில் அரும்பினார்
என்றும் மாறாது இவன்கவி இளமை
எதிர்த்தே தோற்றது இவன்முன் பழமை
திருவல்லிக்கேணியெலோர் வீடு
குறுநெல்லிச்சுவையுள்ள கூடு
அது பாரதியின் பாதம்பட ஒளிகண்டது
பாரதத்தில் சுதந்திரப்போர் சூள்கொண்டது
கடற்கரையில் கூட்டமிட்டு பேச்சு-அது
கயவரின் கோட்டையுள் குண்டுவீச்சு
வெண்தாளில் மையிட்ட எழுத்து-அதில்
வெண்தோலர் இழந்தனர் கழுத்து
கார்வண்ணன் கோவிலுக்கு தினம் வருவார்
கனிவோடு களிருக்கு கனி தருவார்
உக்கிரத்தீ உவகையரை உழட்டுவது போல்
நக்கீரர் நம்மவரையும் நலித்தது
நடைதனில் அயர்கண்டார்-கவிதை
நடைதனில் அயர்காணார்
தடையது அறியாமல்-யானை
இடமது அருகியவர்-வாழைக்
கனியது நல்கிநின்றார்-மனதில்
களங்கம் ஒல்காதவர்
காலன்கை கயிறு ஒன்று
வேழம்கை உரு எடுத்து
வேலன்தன் தலை இறங்க
தமிழ் சற்றே தடுமாறியது-பெருந்
தகையர்தம் நடைமாறியது
இடர்க்கை எரித்த தனல்
படுக்கையில் படர்ந்தது
துடுப்பிலாப் படகைப்போல-வீரம்
அடுத்ததை இழந்தது
இனியது இயம்பி-மக்கள்
இடர்களை இளக்கி
துணிவது புகட்டி-தமிழ்
கேணியாய்த் திகட்டி
பணிவது இகழ்ந்து-அறிவு
பகலவனாய் திகழ்ந்து
நன்கிது தீதிது நவின்று
பன்களால் புண்கள் ஆற்றி
தமிழ் சமுதாயம் தேற்றி
இனிது இனிது எனப் பாடிச்சென்றார்
இனியதோர் சுவர்க்கம் தேடிச்சென்றார்
அழுத கண்கள் ஓயவில்லை
எழுத உன்போல் பாரிலில்லை
தமிழின் பிள்ளையொன்றை காணவில்லை
அமிழ்தின் உருவே உனைப்போல் யாருமில்லை
அறிவது ஆக்கி அடிமையைப் போக்கி
மடமையை நீக்கி நெஞ்சுரம் ஊக்கி
சாதிகள் ஒழித்து சமத்துவம் படைத்து
உறுதியை ஊட்டி உவண்டவர் தேற்றி
சுதந்திரம் காட்டி சுடர்தனைக் கூட்டி
கடலினில் கரையினில்
கருத்தினில் கவியினில்
தமிழர்தம் மானத்தில்
தமிழ்ப் பாடலில் தர்மத்தேடலில்
கலைக்கூடலில் கலந்தாடலில்
மருந்தென மறையாத மாணிக்கமே
தமிழ் வாழும்வரை உனக்குண்டு முதல்வணக்கமே
No comments:
Post a Comment