Pages

Search This Blog

Tuesday, September 20, 2011

மின்னுவதெல்லாம் பொன்னாகுமா?

“மின்னுவதெல்லாம் பொன்னாகுமா?”! என்ன அன்புள்ளங்களே!, உங்களைத்தான் கேட்கிறோம். “மின்னுவதெல்லாம் பொன்னாகுமா?”. “மின்னுவதெல்லாம் பொன்னாகாது என்றுதான் தெரியும். ஆனால் “மின்னுவதெல்லாம் பொன்” என்றால் எப்படி? கடந்த வாரத்தில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் இப்படித்தான் வாசித்தோம். அதனால்தான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறோம். இது எப்படி? என்று யோசித்த போது அதற்கானப் பதிலும் மிக எளிதாகக் கிடைத்தது. கோவையில் நடந்து முடிந்துள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கங்களும் சாலைகளும், “இனியவை நாற்பது” தேர்களும், ஏன், விழாக் காண வந்திருந்த மக்களுமே பொன்னாக மின்னிக் கொண்டிருந்ததைத்தான் இப்படிச் சொல்லிப் பெருமைப்பட்டிருந்தது அந்தப் பத்திரிகை. ஆனாலும் இந்தக் கூற்றில் ஏதாவது உண்மை இருக்குமோ? இது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கடந்தவாரத் தினத்தாள்களில் வந்த சில செய்திகள், “ஐய்யைய்யோ..... மின்றதெல்லாம் தங்கமில்லிங்க, அதுல நிறையவே போலி இருக்குங்க, இந்த மாநாட்டு மின்னல்கள்கூட நிரந்தரம் இல்லிங்க, ஏமாந்திராந்திங்க” என்று சொல்லி நம் காதில் எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்தது. சில தினத்தாள் செய்திகளைக் கேளுங்கள்.

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 15 போலி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”.

“திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் போலி மருத்துவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், சித்தா படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்க்கும் போலிகள்”.

தமிழகத்தில் மொத்தம் முப்பந்தைந்தாயிரத்துக்கு (35ஆயிரம்) மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளதாக ஓர் ஊடகச் செய்தியில் வாசித்தோம். எவ்விதத் தகுதியும் இன்றி அலோபதி மருத்துவம் செய்பவர்கள் ஒருபுறம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பிற மருத்துவம் கற்றவர்கள், விதிகளுக்குப் புறம்பாக நவீன அலோபதி மருத்துவம் செய்வது மறுபுறம். இந்தப் “போலிச் சமூகக் குற்றங்கள்” மருத்துவத்துறையில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலுமே நடமாடுகின்றன. போலி வருமானச் சான்றிதழ், போலி மதிப்பெண் சான்றிதழ் – இப்படி எங்கு திரும்பினாலும போலிகள், போலிகள்.

சில போலி ஆன்மீகவாதிகள், போடும் வேடங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பலரது பாராட்டைப் பெறும் மகளிர் சுயஉதவிக் குழுவிலும் போலிகள் என்று வாசிக்கும் போது நம் கண்களை நம்ப முடியவில்லை. வசதியுள்ள தனியாட்கள் சிலர், புதிதாகச் சுயஉதவி குழு ஒன்றைத் தொடங்கி நவீனமுறையிலானக் கந்து வட்டித் தொழிலை நடத்தி வருகின்றனர். இதற்குள் சிக்கிக் கொள்ளும் பெண்கள் மீளவே முடியாதக் கடனாளியாகி விடுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. இது மட்டுமா...... வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விசா அனுமதிக்கு விண்ணப்பிப்பதிலும் போலி முறைகேடுகள்.

“அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்ல முயன்று அதற்கான விசா அனுமதி பெறுவதற்காக முயன்ற இரண்டு பெண்கள், ஒரு ஏஜென்ட் உட்பட நால்வரைச் சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர்களில் இருவர் புதுமணத் தம்பதியர் என்று பொய் சொல்லி தேனிலவுக்கு அமெரிக்கா செல்வதற்காக விசா தேவை என்று விண்ணப்பித்திருக்கின்றனர்”.

“வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாகத் திகழும் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் (Face book, Twitter) பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன”. இத்திங்கள் இத்தாலிய தினத்தாளில் ஒரு செய்தி இருந்தது. நேப்பிள்ஸில் 33 வயது தாய் தனது இரண்டரை வயது மகளை சமையல் கத்தியால் சிலமுறைக் குத்திக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறாள். Face book ல் வந்த சில அவதூறுகளால் இந்தத் தாய் மனச்சோர்வடைந்திருந்ததே இதற்கு காரணம் என்று அவரது கணவர் காவல்துறையிடம் விளக்கியிருக்கிறார்.

இன்னும் ஒருசிலருக்கு வாழ்க்கையே போலியாகத் தெரிகின்றது. அதனால் தற்கொலை செய்து இந்த உலகத்தை விட்டேச் சென்று விடுகின்றனர். இதில் கலைத்துறையினரும், பணக்காரர்களும் அடக்கம். இந்தப் போலிகள் பற்றி எச்சரிக்கை விடுப்பதன் மூலம் நாம் சொல்ல வருவதை நேயர்களே, நீங்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னாகத் தெரிந்தால் அதை உடனே நம்பி அதில் உங்களை இழக்காதீர்கள். இழந்து ஏமாறாதீர்கள். ஏமாறி வாழ்க்கையையே தொலைத்து விடாதீர்கள். ஒரு வலைப்பின்னல் பதிவில் ஒருவர் எழுதியிருப்பதைத் தருகிறோம். ஒரு ’போலி’க்கு நிகழ்ந்த சோகத்தை பதிவுலகில் யாருமே பதியவில்லை. அதனால்தான் எழுதுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“போலிப் பதிவுகளின் மூலம் அவதூறுகளைப் பரப்புவது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது, அடுத்தவர்களை மிரட்டுவது போன்ற பழக்கங்களை கைவிடுவோம். பதிபவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம். எதிர்க் கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்வதே வீரம். அதுவே உங்கள் தரப்பின்மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மாறாக, குறுக்கு வழிகளில் சென்று எதிர்தரப்பின் கருத்தை முறியடிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, நாளடைவில் அது எதிர்தரப்புக்கு சாதகமாகவே அமைந்துவிடக் கூடும்”.

போலிகள் தொடர்ந்து மின்னிக்கொண்டே இருக்க முடியாது. அவற்றின் வெளிப்பூச்சு விரைவில் அழிந்துவிடும். முகத்தில் பூசிய வாசனைப் பவுடரும், வாசனைத் திரவியமும் எவ்வளவு நேரம் நிலைத்திருக்கின்றன! பாத்திரங்களுக்கு பூசப்படும் தங்க முலாமோ வெள்ளி முலாமோ எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்கின்றன!, அப்படியே இருந்தால் அதற்கு வேறு ஒரு பெயர் அல்லவா வைத்திருப்பார்கள்? இந்த ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையைக் கொண்டு செல்வார்கள். அதில் எப்பொழுதும் அழகுசாதனப் பொருட்கள் இருக்கும். அவ்வப்போது அவற்றை எடுத்துப் பூசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் உண்மை முகத்தோற்றம் தெரிந்துவிடும். இந்தப் போலிகளுக்கும் பொய்களுக்கும் நிழல்களுக்கும் ஆயுள் குறைவு என்ற உண்மை எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

"நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்" என்று, சமயப் பெரியவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அன்பர்களே, நமது உள்மனமும் உள்ளுணர்வும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை நமக்கு அறிவுறுத்துவதால் நாம் அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து எதற்கு நாம் போலிகளை நம்புகிறோம்? போலி வாழ்க்கையை வாழ்கிறோம்? போலி வேடம் போடுகிறோம்? மனித நேயத்தைப் பதுக்கிக்கொண்டு மண்டை ஓடுகளை விதைக்கிறோம்?

ஒருசமயம், கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னது உங்களுக்குத் தெரிந்திருக்கும். விரைக்க விரைக்க ஓடி வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர் என்பது சாக்ரடீஸிக்குத் தெரியும். எனவே வந்தவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார் சாக்ரடீஸ். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விடயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?". அதற்கு அவர் "இல்லை...." என்றார். சரி. "நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விடயமா? என்றாவது தெரியுமா" என்று கேட்டார். அதற்கும் அவர் "இல்லை...." என்றார். வந்தவரது பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறையத் தொடங்கியது. சரி. "இந்த விடயத்தை நான் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ, சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?" என்று கேட்டார். அதற்கும் "இல்லை..." என்றே பதில் கிடைத்தது. சரி. "இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?" என்று சாக்ரடீஸ் கேட்க, "அப்படிச் சொல்ல முடியாது....." என்றார். அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது. இத்தனை கேள்விகளுக்குப் பின்னர் சாக்ரடீஸ் சொன்னார் - "ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதில் நாம் கவனம் செலுத்தலாமே" என்று. வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

போலிகள், பொய்கள், புரளிகள் இவற்றைப் படைப்பதிலும் இவற்றில் வாழ்வதிலும் காலத்தை விரயமாக்காமல் நல்ல விடயங்களுக்காக நேரத்தைச் செலவழிப்போம். இந்தப் போலிகளால், பொய்களால் எத்தனை பேருடைய வாழ்க்கைப் பாழாய்ப் போகின்றது! மற்றவர்களது வாழ்க்கையை ஏன் நமது வாழ்க்கை போல் எண்ணத் தவறி விடுகிறோம்? நமது பொய்களால் பிறர் வாழ்வுப் பாதிக்கப்படும் போது அது ஏன் நம்மைப் பாதிப்பதில்லை? இதற்கு நேயர்களாகிய உங்களிடமிருந்து பதில் கிடைக்குமா?

ஆம். மின்னுவதெல்லாம் பொன்னாகாது. ஆனால், நமது சொல்லையும் செயலையும் மின்னச் செய்து, நமது பொன்னான வாழ்க்கையைப் பிறருக்குத் தங்கப் பரிசாக வழங்கலாம். வாருங்கள் இம்முயற்சியில் சேர்ந்து பயணிப்போம்.

1 comment:

SURYAJEEVA said...

போலி மருத்துவர்களுக்கு சங்கமே இருக்கு ..

Post a Comment