ரஜினி பெயரை வைத்து விளம்பரம் தேடுவதில் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் போட்டி போடுவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து ’3′ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ‘கொலவெறி…’ பாடல் உலகப் புகழ் பெற்றுவிட்டது. அதே நேரம், இந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இசை வெளியீட்டுக்கு வருவார் என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.
ஆனால் ரஜினி நடிக்கவுமில்லை, அந்தப் படம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுமில்லை. இந்தப் படம் குறித்து அவர் வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் இளையமகள் சௌந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து படங்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ஆரம்பத்தில் ரஜினியை வைத்து சுல்தான் என்ற படத்தை ஆரம்பித்தார். அந்தப் படம் இப்போது கைவிடப்பட்டு, கோச்சடையான் படத்துக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.
இடையில் தொடங்கப்பட்ட ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளர், தொழில்நுட்ப இயக்குநர் சௌந்தர்யாதான்.
இரண்டு மகள்களும் அப்பாவின் சூப்பர் ஸ்டார் இமேஜ் மற்றும் புகழை வைத்து முடிந்தவரை விளம்பரம் தேடிக் கொள்வதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரும் போட்டியே நடப்பதாகவும், அதில் ஐஸ்வர்யாவின் கை ஓங்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ரஜினி பெயரை நானும், என் தங்கை சௌந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும், எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை இயக்கி வருகிறேன். எங்களுக்குள் எப்படி போட்டி வரும். சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா இருக்கிறது. என் கணவர் தனுஷ் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் எப்போதாவது அப்பா பெயரை எங்கள் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம் என்று சொல்ல முடியுமா…
தனுஷின் எந்த பட விழாவிலும் அப்பா பங்கேற்றது இல்லை. அப்பா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது மட்டும் ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதில் எங்களுக்கு என்ன விளம்பரம்? செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.
எங்களைப் பற்றிய செய்தியை என்னிடமோ தனுஷிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று வெளியிடலாமே… நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லையே. யார் கேட்டாலும் விளக்கம் சொல்கிறோமே. ஆனால் எதையுமே கேட்காமல் இஷ்டப்படி எழுதுவது சரியா?,” என்று கேட்டுள்ளார்.
3 comments:
Thanks for sharing bro...
நல்லா இருந்தா சரி..
அட போங்கப்பா.இதுவும் ஒரு விளம்பரம் தான்,
Post a Comment