மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது இந்த அணிக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இரவில் கைது
நேற்று மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை நேற்று இரவு டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் இந்த அணியை சேர்ந்த அஜித் சந்த்லியா மற்றும் அங்கீத் சவான் ஆகியோரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டெல்லியில் 3 புக்கிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ஸ்பாட் பிக்சிங் புகார் அடிப்படையில் ஸ்ரீசாந்த் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணி சார்பாக 53 ஒரு நாள் போட்டிகளிலும், 27 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். சந்த்லியா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சவான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். சந்த்லியா இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். சவான், மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது இவர்கள் மூவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
ஸ்பாட் பிக்சிங்
ஸ்பாட் பிக்சிங் என்பது ஒரு போட்டியில் எத்தனை நோ பால், எத்தனை ஒயிட் பால் என்பதை தீர்மானிக்கும் சூதாட்டம் ஆகும். வீரர்கள் ஒத்துழைப்புடன் புக்கிகள் இதனை தீர்மானித்து அதன் அடிப்படையில் சூதாட்டம் நடத்துவார்கள். புக்கிகளுடன் ஒத்துழைக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டோனி மற்றும் ஹர்பஜனை குற்றச்சாட்டும் ஸ்ரீசாந்த் அப்பா..
ஸ்ரீசாந்த சூதாட்ட புகாரில் சிக்கியதற்கு டோனி மற்றும் ஹர்பஜனே காரணம் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'இந்த ஐ.பி.எல் தொடரில் தொடக்கத்தில் ஹர்பஜன் எதிராக ஸ்ரீசாந்த் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதே போல் டோனியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஸ்ரீசாந்த்துக்கு நன்றாக தெரியும், அதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் உன்னை எடுக்க மாட்டேன் என்று டோனி மிரட்டினார். இதனால், ஸ்ரீசாந்த்துக்கு எதிராக ஹர்பஜன் மற்றும் டோனி செய்யும் கூட்டு சதி தான் இது என்று கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் : சரத் பவார்
சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோரை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது வரவேற்கதக்கது என்று முன்னாள் ஐசிசி தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடி
ஸ்பாட் பிக்சிங் புகாரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வீரர்கள் கைதாகியிருக்கும் சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தரகராக செயல்பட்ட ஸ்ரீசாந்த்?
இந்த சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள மற்ற வீரர்களான சவான் மற்றும் சண்டிலாவிற்கு தரகராக ஸ்ரீசாந்த் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கிடைத்த சூதாட்ட பணத்தை ஸ்ரீசாந்த் தான் இந்த 2 வீரர்களுக்கு பெற்று தந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்களை சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ
சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோரை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்துள்ளது. சூதாட்டப் புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே சமயம் இது தொடர்பாக நடக்கும் விசாரணைக்கு பிசிசிஐ முழு ஒத்தழைப்பு தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவிட் அதிர்ச்சி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற செய்த கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அணி வீரர்கள் மற்றும் தலைமையுடன் டிராவிட் இந்த பிரச்சனைக் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு
ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்பாட் பிக்சிங் புகார் தொடர்பாக எங்கள் அணியை சேர்ந்த 3 வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. முழு விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை. எதையும் உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிசிசிஐயுடன் பேசி வருகிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள 3 வீரர்களையும் போட்டியில் விளையாட உடனடியாக தடை செய்ய ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment