Pages

Search This Blog

Sunday, May 19, 2013

தமிழகத்திற்கு வரப்போகிறது அபாயம் காவிரி பிரச்னையில்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக, இடைக்கால ஏற்பாடாக, மேற்பார்வை குழு அமைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த மேற்பார்வை குழுவே, நிரந்தர ஏற்பாடாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இறுதி தீர்ப்பு:
தமிழகம் - கர்நாடகா இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, ஆறு ஆண்டுகளாகி விட்டது. பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு பின், தமிழக அரசின் இடைவிடாத மேல்முறையீடுகள் காரணமாக, சுப்ரீம் கோர்ட் தலையிட்ட தால், கடந்த பிப்ரவரி, 19ம் தேதி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இறுதி தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டது, தமிழக அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதன்மூலம், இறுதி தீர்ப்பில் உள்ள, தமிழகத்துக்கான தண்ணீர் பங்கீட்டிற்கு, சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல.தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் எனில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குபடுத்தும் குழு என்ற, இரண்டு அமைப்புகள் தேவை. இந்த இரண்டையும் அமைக்க வேண்டும் என்பது, அரசிதழிலும் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பு, மத்திய அரசை சார்ந்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட்டவுடன், சூட்டோடு சூடாக, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டை, மீண்டும் தமிழக அரசு நாடியது. அந்த வழக்கு, கடந்த, 10ம் தேதி, நீதிபதி லோதா தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம், காவிரி விவகாரத்தில், தமிழக அரசுக்காக வாதாடும், மூத்த வக்கீல், கோர்ட்டுக்கு வரவில்லை.
அதே நேரத்தில், கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாரிமன், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதமாகலாம். அதுவரை, மேற்பார்வை குழு ஒன்றை அமைக்கலாம். இடைக்கால ஏற்பாடாக அந்தக் குழு செயல்படட்டும்' என்றார்.

இடைக்கால ஏற்பாடு:
கர்நாடகா வக்கீல் முன்வைத்த, இந்த பரிந்துரையில் உள்ள சூட்சுமத்தை எதிர்த்து வாதாட, அன்றைய தினம், தமிழக அரசு தரப்பு தவறி விட்டது. அதனால், கர்நாடக அரசின் யோசனையை, அப்படியே ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "இடைக்கால ஏற்பாடாக, மேற்பார்வை குழு அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கு முன், காவிரி பிரச்னை தொடர்பாக, காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கூடிய போதெல்லாம், தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டு, நீதி கிடைக்கவே இல்லை. கடந்த கால உண்மை நிலை இவ்வாறு இருக்க, அந்த கண்காணிப்பு குழுவில், உறுப்பினர்களாக இருந்தவர்களையே, மீண்டும் உறுப்பினர்களாக கொண்டு, மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அந்தக் குழுவிடம், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும், இடைக்கால பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த கருத்து:
இந்த மேற்பார்வை குழு அமைக்கும் யோசனை, காலம் கடத்தும் தந்திரமாகவே தெரிகிறது. இந்த குழு கூடி ஆலோசிக்கும் போது, ஒருமித்த கருத்து ஏற்படாமல், மறுபடியும் பிரச்னை உருவானால், சுப்ரீம் கோர்ட்டில், முறையிட வாய்ப்பு உள்ளது.அதனால், மறுபடியும் கோர்ட், வழக்கு, மேல்முறையீடு என, அலைய வேண்டிய சூழ்நிலை, வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, தமிழகத்துக்கு இந்த மேற்பார்வை குழு என்ற யோசனையால், பாதகமே பெரிதும் நிகழும்.

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகளே இருப்பதால், இடைக்கால ஏற்பாடாக அமைக்கப்பட்ட, இந்த மேற்பார்வை குழுவையே, நாளடைவில், நிரந்தர ஏற்பாடாக மாற்றும், அபாயமும் உள்ளது.இந்த உண்மைகள், சற்று தாமதமாக தெரிய வந்துள்ளதால், தமிழக முதல்வர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார். இதை அடுத்தே, நேற்று முன் தினம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மூன்றாவது முறையாக, கடிதம் எழுதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்திஉள்ளார் என்று கூறப்படுகிறது.

17 ஆண்டுக்கு பின் மேட்டூர் அணை நீர்மட்டம் கடும் சரிவு:மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 17 ஆண்டுகளுக்கு பின், 20.830 அடியாக சரிந்துள்ளது. இதனால், ஜூன் மாதம் டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வாய்ப்பு இல்லை, என்பது உறுதியாகி உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. மொத்த நீர் கொள்ளளவு, 93.470 டி.எம்.சி.,யாகும். கடந்த பிப்ரவரி, 25ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம், 34 அடியாகவும், நீர் இருப்பு, 9.214 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், அணைக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. டெல்டா குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 600 கனஅடி நீர் வெளியேற்றுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து நேற்று, 20.830 அடியாகவும், நீர் இருப்பு, 4.346 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. கடந்த, மூன்று மாதத்தில் நீர்மட்டம், 14 அடியும், நீர் இருப்பு, 5 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது.

கடந்த, 1996 ஜனவரி, 28ல் மேட்டூர் அணை பாசன நீர் நிறுத்திய போது, நீர் இருப்பு, 4.632 டி.எம்.சி.,யாக இருந்தது. மீண்டும், 17 ஆண்டுக்கு பின், நடப்பாண்டு மேட்டூர் அணை நீர் இருப்பு, 4.346 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, ஆண்டுதோறும் ஜூன், 12ல் நீர் திறக்கப்படும்.குறுவைக்கு நீர் திறக்க, அணையில் குறைந்தபட்சம், 52 டி.எம்.சி., நீர் இருக்க வேண்டும். குறுவைக்கு நீர் திறக்க இன்னும், 25 நாட்களே உள்ள நிலையில், அணையில், 4.346 டி.எம்.சி., இருப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையில், காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு போதுமான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

வரும் நாட்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, அணை நீர்வரத்து அதிகரித்தாலும், ஜூன், 12ம் தேதிக்குள் நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யை எட்டுவது கடினம்.கடந்த, 10 ஆண்டுகளில், 2006, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதர ஆண்டுகளில் தாமதமாக நீர் திறந்ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பாதித்தது போல, நடப்பாண்டிலும் குறுவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேற்றில் மூழ்கிய அளவுகோல்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 20 அடியாக குறைந்த நிலையில், அணையில் 15 அடி வரை சேறு நிறைந்துள்ளது. இதனால், நீர்மட்டம் கணக்கிடுவதற்காக 20 அடி முதல் 25 அடி வரை அணையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேல், இரண்டு அடி வரை சேற்றில் மூழ்கி விட்டது. இதனால், அணை ஊழியர்கள் மண்ணை தோண்டி ஸ்கேலை கண்டுபிடித்து, நீர்மட்டத்தை அளக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment