ரூ.4 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 250 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
ரூ.4 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
கடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி குஜராத் மாநிலம் வதோதரா புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பெரும் அளவில், 8–வது ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதாக அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்திய அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் மேலும் 13 பேர் கைது ஆனார்கள்.
பின்னர், மார்ச் 26–ந் தேதி இதே அமலாக்க பிரிவினர் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், சந்தேகத்துக்குரிய மேலும் 2 முக்கிய நபர்கள் மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
துபாயில் பதுங்கல்
இவர்களில் ஒருவரான முகேஷ் சர்மா என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தின் உதவியுடன் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் முகேஷ் சர்மா துபாயில் இருந்து ‘லாகின் ஐ.டி, பாஸ்வேர்ட்’ பெற்று இந்திய வாடிக்கையாளர்களிடம் சூதாட்ட தொகையை பெறுவதும், விநியோகம் செய்வதும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து தப்பியோடிய முகேஷ் சர்மா தற்போது துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தான் தரகர்
இந்த நிலையில் ஆமதாபாத் நகர அமலாக்க பிரிவினருக்கு, ஏற்கனவே கைதானவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய சிலர் டெல்லி மற்றும் அரியானாவின் குர்கான் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தரகர் ஒருவர் இந்த பெரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை அமலாக்க பிரிவினர் கண்டுபிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டம் குர்கானில் நடைபெறுவதாகவும், இதற்கான பண பரிவர்த்தனை டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள 2 கட்டிடங்களில் நடப்பதாகவும் அமலாக்க பிரிவினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.
250 செல்போன்கள் பறிமுதல்
இதையடுத்து அவர்கள் உடனடியாக டெல்லி விரைந்தனர். அங்கு உள்ளூர் அமலாக்க பிரிவினர் உதவியுடன் டெல்லி கரோல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்கள், சாஸ்திரி நகர் மற்றும் குர்கான் ஆகிய 4 இடங்களில் நாள் முழுக்க அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 250 செல்போன்கள், 10 லேப்–டாப் கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை, பெங்களூரு
டெல்லியில் நடத்தியதுபோலவே மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் அமலாக்க பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து, அமலாக்க பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அண்மையில் சில இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியை மையமாக கொண்டு இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை குறிவைத்தும் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்றன.
எனினும் பாகிஸ்தான் தரகரின் பெயரை வெளியிட அமலாக்க பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானிலும் 8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
4 பேர் கைது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள தலா ஒரு கார், மோட்டார் சைக்கிள், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 6 மொபைல் போன்கள், லேப்–டாப் மற்றும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
No comments:
Post a Comment